அறியத் துடிக்கும் ஆவல்

நமது இந்தியத் தத்துவங்களில் ஆசையை ஒழிக்க வேண்டும். அவை மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என மூன்று வகைப்படும் எனக் கூறிவந்தார்கள்.

ஆனால் இந்த மூன்று ஆசைகள் மட்டுமில்லாமல் வேறு சில ஆசைகளும் இருக்கின்றன. பதவி ஆசை, புகழ் ஆசை, தெரியாத புதிர்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை.

எனவே, மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் எல்லா ஆசைகளையும் சேர்த்து மூன்று வித ஆசைகள் என தொகுத்துக் கூறினார்.

எதையாவது அடைய வேண்டும். (Get Something)

எதையாவது செய்ய வேண்டும். (Do Something)

எதையாவது அறிய வேண்டும். (Know Something)

அடைய வேண்டும், செய்ய வேண்டும், அறிய வேண்டும் என்ற மூன்றுக்குள் அத்தனை ஆசைகளும் அடக்கம்.

அறிவியல் ஆர்வம்:

மனிதனுக்கு மட்டுமே உள்ள மிகப்பெரிய ஆவல் இந்த அடைய வேண்டுமென்ற ஆவல். இந்த ஆவலினால்தான் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறான். இந்த ஆசையின் தூண்டுதலில்தான் மனிதன் வானத்தையும் பூமியையும், அண்ட சராசரங்களையும் அதன் செயல்பாடுகளையும் துருவித் துருவி ஆராய்ந்து, நித்தம் புத்தம் புதிய தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இந்த தூண்டுதலில்தான் நியூட்டன் புவியீர்ப்பு விசையை (Gravitation) கண்டு கொண்டார். இந்த தூண்டுதலில்தான் கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டு கொண்டார். டார்வின் பரிணாம வளர்ச்சியை கண்டு கொண்டதும் இதே ஆர்வத்தில்தான்.

உலகிலேயே நாகரிகம் மிக்க நாடு அமெரிக்கா. மிகச் சிறப்பாக நாகரிகமாக உடை அணியும் பண்பு கொண்டவர்கள் மேல் நாட்டினர். அணிவதற்கு நல்ல உடை இல்லையென்றால் விருந்தினரை சந்திப்பதைகூட தவிர்த்து விடுவார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து வந்தவர்தான் ஐன்ஸ்டீன். ஆனால் அவருக்கு தலைமுடியை வாரும் பழக்கம் கூட இல்லை. கழுத்தில் கட்டும் டையை கூட இடுப்பில் கட்டியிருப்பார். இதில் சில நிமிடங்களை வீணாக்குவது கூட அவருக்கு விருப்பமில்லை. இடைவிடாத ஆராய்ச்சி.

இப்படி இடைவிடாமல் செயலாற்றத் தூண்டியது எது? பணத்திற்காகவா? புகழுக்காகவா? பட்டங்களுக்காவா? இல்லையே.

இயற்கையின் புதிர்களை கண்டு கொள்வதில் உள்ள பேராவல், இந்த ஆவலால், அவர் கண்விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இயற்கையின் அற்புதங்களையும், புதிர்களையும் அறிய இடைவிடாது சிந்தனை செய்தார். அதன் பலனாக உலகே வியக்கும் சார்புவிதியை கண்டு கொண்டார்.

இந்த அறியும் ஆவல் மனிதனை உயர்த்துகிறது. இந்த ஆசை பெரியவர்கள், சாமானியர்கள், சிறியர்கள் யாவரிடமும் உள்ளது. இந்த ஆவல் பெரியவர்களிடம் உயர்வானதாகவும், சிறியர்களிடம் தரம் தாழ்ந்தும் காணப்படுகிறது.

கிசுகிசுக்கள்

இந்த ஆசை சாதா மனிதனை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. அவனும் அதன் பின்னே எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு செல்கிறான்.

சினிமா நடிகர்களின் கிசுகிசுக்களை அறியும் ஆவல். சமூகத்தில் செல்வாக்கான நிலையில் இருப்போரின் சில்லறைத்தனங்களை தேடிப்பிடித்து அறியும் ஆவல், அயலார், அண்டை வீட்டார், இவர்களின் இயலாமை, தோல்வி, அவர்கள் செய்யும் குற்றங்கள் இவைகள் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு தேடி அறிவதில் ஒரு ஈடுபாடு, இவைகள் யாவும் ஒரு ரகம்.

இதுவுமில்லாமல் அடுத்து என்ன நடக்கப் போகிறது, முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை கண்டு கொள்ள ஒரு பரபரப்பு ஒரு துடிப்பு. அப்புறம் என்ன? அப்புறம் என்ன ஆச்சு? என்று அறிய விரும்புகிற ஒரு பரபரப்பு. இந்த பரபரப்பே எல்லா திரைக்கதை களுக்கும், தொலைக் காட்சித் தொடர் களுக்கும் ஆதாரம். நாம் திரைப் படத்தை பார்க்க ஆரம்பித்ததும் அதன் முடிவை எதிர்பார்க்கும் ஆவல்.

கதைகளின் முடிவை அறிய ஆவல் :

பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வந்த ஒரு நகைச்சுவை

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் நாம் இப்போது இருக்கும் உலகம் முற்றிலுமாக அழிந்து விட்டது. அணு யுத்தத்தின் மூலம் நம்மை நாமே அழித்துக் கொண்டோம்.

அதன்பின் புதிய மனிதர்கள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆதி மனிதர்களைப் பற்றி (அதாவது நம்மை பற்றி) அறிய புதைபொருள் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். அதில் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. அப்போது அவர்கள் கூறுகின்றார்கள் அன்றைய மனிதர்கள் நல்ல நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

இருப்பினும் அவர்களிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது தெரிய வருகிறது. “அந்தக் காலங்களில் சிலர் நிறைய பொய் சொல்லவும், எழுதவும் செய்திருக்கிறார்கள். அதை மற்ற மக்கள் ஆவலோடு கேட்கிறார்கள். சிறியதாக சொல்லப்படும் பொய்கள் சிறுகதை என்றும், தொடர்ந்து சொல்லப்படும் பொய்க்கு தொடர்கதை என்றும், மொத்தமாக நிறைய சொல்லப்படும் பொய்க்கு நாவல் என்றும் பெயர். இப்படி பொய்களை சொல்பவர்கள் பெயர் கதாசிரியர்கள். இந்தப் பொய்கள் திரைப் படங்களாகவும் எடுக்கப்படுகிறது. அதை மணிக்கணக்கில் மக்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.”

பொய் என்று தெரிந்தும் கூட அதன் முடிவை தெரிந்து கொள்ள மனம் ஆவலில் துடிக்கிறது. அந்த ஆவலில்தான் மனிதன் தொலைக்காட்சியின் முன் முடிவற்ற தொடர்களின் முடிவை எதிர்நோக்கி பலமணி நேரங்கள் காத்துக் கிடக்கிறான்.

கிரிக்கெட் முடிவுகள்

இதுபோன்ற மற்றுமொரு பரபரப்பான ஈர்பை உருவாக்குவது கிரிக்கெட் முடிவுகள், தேர்தல் முடிவுகள்.

கிரிக்கெட்டில் முக்கிய போட்டிகள் நடக்கும்போது அநேகருக்கு மாமூல் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போகிறது. அந்த விளையாட்டு நடக்கும்வரை தொடர்ந்து தொலைக்காட்சியின் முன் தவம் கிடக்கிறார்கள். ஒரு பரபரப்பும் விறுவிறுப்புமாக ஒரு வித போதையின் கிறக்கத்தில் இருக்கிறார்கள். அநேக அலுவலகங்களில்கூட தொலைக்காட்சி பெட்டிமுன் அமர்ந்து கொள்கிறார்கள். வேலைகள் யாவும் நின்று போகின்றன. வேறு வேலை நிமித்தமாக வெளியே வந்துவிட்டால்கூட சாலையில் போவோரிடம் ஸ்கோர் என்ன? எனக் கேட்கின்றனர். ஸ்கோர் என்னவாக இருந்தால் என்ன? இவர்கள் மாற்றி விடவா போகிறார்கள். இத்தனை ஆர்வமாக பார்க்கப்படும் போட்டியின் முடிவுகள் வந்ததும் இவர்கள் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைத்து விட்டால் அந்தப் பெருமையின் நினைவுகளில் சற்று நேரம் இருப்பார்கள். அதன்பின்  எந்த அளவுக்கு விறுவிறுப்பும், பரபரப்பும் இருந்ததோ அதே அளவு ஒரு மந்த நிலை நம்மை தொற்றிக் கொள்கிறது.

நம் நாட்டில், மாநிலத்திற்கு மாநிலம், நதி நீர்ப் பிரச்சனை, மற்ற மதத்தவருடன் பிரச்சனை, தீவிரவாத தாக்குதல் இவைகளில் இருந்து நாட்டைக் காக்க மக்கள் வரிப்பணம் கோடிகோடியாக கொட்டப்படுகிறது.

நம் நாட்டின் ஜனத்தொகையில் பெரும்பகுதியான விவசாயிக்கு உண்ண உணவு கூட சரியாக கிடைப்பதில்லை. அதைப் பற்றியெல்லாம் நாம் கவலை கொள்வதில்லை.

ஆனால் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றுவிட்டால் நாம் பெருமிதத்தில் மிதக்கிறோம். ஆனால் அந்த வெற்றி நிரந்தரமல்ல. அடுத்த தொடரில் அதே வெற்றி நிலைப்பதில்லை.

காந்தியிடம் ஒருவர் நேரத்தை சொல்லும்போது மாலை 2.08க்கு பதிலாக 2.10 என்று கூறிவிட்டார். ‘இரண்டு நிமிடங்களை விட்டு விட்டீர்கள். இந்தியாவில் உள்ள (அன்று 30 கோடி மக்கள்) அத்தனை மக்களும் இரண்டு நிமிடங்களை வீணாக்கினால் இந்தியாவுக்கு எத்தனை பெரிய இழப்பு’ என்றார் காந்தி.

இந்தியர்களின் இரண்டு நிமிடங்கள் கூட வீணாக்கக் கூடாது என்பதில் காந்தி கவனமாக இருந்தார். இன்று நாம் கிரிக்கெட் பார்ப்பதில் ஆண்டுகளில் பல வேலை நாட்களை முழுவதுமாக வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். இது எத்தனை பெரிய இழப்பு. இது பற்றி சிந்திக்க வேண்டாமா?

படிக்க வேண்டிய பல மணி நேரங்களில் அநேக மாணவர்கள் கிரிக்கெட் பார்ப்பதில் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நண்பன் எனக்கு விளையாட்டு (Sports) என்றால் ரொம்ப பிடிக்கும் என்றார். அப்போது நான் கேட்டேன் என்ன விளையாட்டு? எத்தனை மணி நேரம் விளையாடுகிறீர்கள்? என்று, பதிலாக அவர் கூறுகிறார், ‘நான் விளையாடுவதில்லை. ஆனால் கிரிக்கெட் பார்ப்பேன்’ என்றார். நாம் மணிக்கணக்கில் கிரிக்கெட் பார்ப்பதால் நாமும் வளரப் போவதில்லை. இந்திய விளையாட்டுத்துறையும் வளரப் போவதில்லை.

தேர்தல் முடிவுகள் :

தேர்தல் நேரங்களில் ஒருவித பரபரப்பு, விறுவிறுப்பு எங்கும் காணப்படுகிறது. தேர்தல் முடிவுகள்    வெளி வரும் நேரங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு காணப்படுகிறது. முடிந்த அளவுக்கு நல்ல வேட்பாளருக்கு நல்ல கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். ஆனால் வெற்றி நம் கைகளில் இல்லை. அதன் பின் வெற்றி நம் விரும்பியபடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அதை வரவேற்க வேண்டியது.

அரசியலுக்கே சம்பந்தமில்லாத அநேகர், அரசியலில் எந்த பொறுப்பிலும் இல்லாத அநேகர், அரசியலில் எந்த நகர்வுகளையும் செய்ய சக்தியற்ற அநேகர் தேர்தல் முடிவுகளை அறிய எல்லையில்லா ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளி வந்து மூன்று நாட்கள் ஆனதும் ஏதோ ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது. அதன்பின் யாவரும் ஒரு மாமூல் நிலைக்கு வந்து விடுவோம்.

இப்படி மனிதனின் தேவையற்ற அறியும் ஆவல்களால் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப் படுகிறான். இதனால் மனிதனின் வெற்றி நோக்கு திசை (Diversion) திருப்பப்படுகிறது. மனிதனின் அத்தனை சாதனைகளும் மனத்தினால் நிகழ்த்தப் படுகின்றன. பிரச்சனைகளை அலசி ஆராயவும், தெளிந்த தீர்க்கமாக முடிவுகளை எடுக்கவும், படைப்பாற்றல் மிக்க புதிய சிந்தனையை பெறவும், உறுதியாக, தீர்மானமாக செயல்படவும், நிறைய மனோபலம் வேண்டும். அந்த மனோபலம் இதுபோன்ற உணர்வுகளால் சிதறடிக்கப்படுகிறது.

ஜாகீர் ஹூசேன் இந்திய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது முடிவு வெளியிடும் நேரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாராம். இது போல உலகமே பரபரப்பாக இருந்தாலும் நாம் அமைதியாக செயலாற்றிக் கொண்டிருப்போம்.

மனிதன் தன் அறியும் ஆவலால் தன்னை அறிந்து கொள்ளவும், தனக்கான சரியான பாதையை தெரிந்து கொள்ளவும், தனது முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தினால் வெற்றிகளை குவிக்க முடியும். வளமான வாழ்வு வாழ முடியும். நாமும் முயன்று பார்ப்போம்.

  1. fathima

    i also made such mistakes thanz fore your article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *