வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது” என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள்.

வெறுமனே தூங்கிக் கொண்டு போவதும், பேசிக் கொண்டே போவதும் பயணத்தில் சேர்க்கலாகாது. பயணத்தை கொண்டாட தேவை “கவனம்”. இந்தக் கவனம்தான் பல வெற்றிகளை அறிமுகப்படுத்துகிறது. வாழ்க்கையே ஒரு பயணம் தானே!

ஒரு செழித்த நாடு! அந்த நாட்டின் அரசன் தினமும் காலையில் யானையில் அமர்ந்து ஊர்வலம் வருவான். அப்படி வருகிறபோது, ஊரின் ஒரு மூலையிலிருந்து ஓடோடி வரும் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பான். யானையால் நகர முடியாது. ஒரு சில விநாடிகளில் பிடியைத் தளர்த்திவிடுவான். யானை நகர ஆரம்பித்துவிடும்.

தினமும் நடைபெறும் இச்செயல் அரசருக்கு பெருத்த அவமானமாக இருந்தது. அவரும் அந்த இளைஞனின் செயலை தந்திரமாக தடுக்க பல முயற்சிகள் செய்தும் பலன் பூஜ்யம்தான். மந்திரிகளை அழைத்து விஷயத்தைக் கூறினார்.

அதில் ஒரு மந்திரி மட்டும், “அரசே… சில தினங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அவன் தொந்தரவு இருக்காது” என்றார்.

அடுத்த நாளிலிருந்து அந்த இளைஞனைக் காணவில்லை. அரசருக்கு நிம்மதியாயிருந்தது. திடீரென ஒரு நாள் மீண்டும் அந்த இளைஞன் ஓடி வருவதைப் பார்த்தார் அரசர்.

ஓடிவந்து யானையின் வாலை இழுத்துப் பிடித்தான் இளைஞன். என்ன அதிசயம்! ஆனால் பழையபடி யானையை நிறுத்த முடியவில்லை.

அரசருக்கு பெரும் வியப்பாய் இருந்ததது. அன்று மாலை மந்திரியை அழைத்தார்.

” அரசே… அவன் தோல்விக்குக் காரணம் கவனமின்மைதான்…” என்றார்.

“புரியவில்லையே….?”

“அரசே… மலைமீது இருக்கிற அம்மன் கோவிலுக்கு காலையில் எழுந்தவுடன் வந்தால் ஒரு பொற்காசு தருவதாகச் சொன்னேன். தொடர்ந்து ஒரு வாரம் வந்தால் கூடுதலாக இரண்டு பொற்காசுகளும் கிடைக்கும் என்றேன்… அவன் கவனம் முழுக்க இப்போது அந்தப் பொற் காசுகளை பெறுவதில் சென்றுவிட்டது. அதனால் பழைய வலுவை அவனால் ஒருங்கிணைக்க முடியவில்லை” என்றார்.

இப்படித்தான் நம்மில் பலரும் நமக்கான செயல் பலவற்றில், “இதுதானே… நாம் செய்ய முடியாதா…? என்று பெரும்போக்காக அசிரத்தையாக இருக்கிறோம்!

நாம் சிறப்பாக செய்துவிடுவோம் என்று தினம் பயிற்சி அற்று காரியத்தில் இறங்கி தோல்வியடைகிறோம்!

ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தாலும் அடுத்த பந்தயத்திற்கு பயிற்சி எடுக்காமல் சென்றால் தோல்வி நிச்சயம் என்பது தெரிந்ததுதானே… தினமும் சற்று நேரமாவது பயிற்சி எடுக்கிறார்கள்! வெல்கிறார்கள்!

எந்த விளையாட்டு அணியாவது தொடர் பயிற்சி இல்லாமல் களத்தில் இறங்குகிறதா…?

நம் வாழ்க்கைப் பயணம் சில காரியங்களில் ஒரு கிலோ மீட்டர் பயணமாக முடிந்துவிடுகிறது. சில சமயங்களில் சில மைல் தூரங்களாக நீடிக்கிறது.

சில பயணங்களோ நெடிய பயணங்களாக அமைகிறது. எல்லா பயணங்களுக்குமே முன் ஏற்பாடு அவசியப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான மைல் பயணத்திற்கு தேவைப்படுகிற கவனத்தைவிட, சில கிலோ மீட்டர் தூரப் பயணத்திற்கு கவனமாக ஏற்பாடுகள் தேவைப்படுகிறது.

இப்பயணம் சிறக்க தேவையெல்லாம் ‘கவனம்’ என்கிற ஒற்றைச் சொல் மந்திரம்தான்.

நம்மைக் கடந்து போகிற மனிதர்களை, காட்சிகளை, தோல்விகளை, வெற்றிகளை, சோர்வுகளை உற்று நோக்கினாலே வெற்றிக்கான பல வழிமுறைகள் தென்படக்கூடும்.

கவனமின்மையால் பாதி கடந்த பின் பயணம் வந்த திசை வேறு என்று தெரிகிறது. மீண்டும் சரியான பாதையைக் கண்டு பயணப்பட காலதாமதம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

நம் வாழ்க்கைப் பயணம் அழகிய காட்சிகளோடும் அதி அற்புதமான இடங்களை தரிசிக்கக் கூடியதாகவும், மனித நேயமிக்க மனிதர்கள் சூழ்ந்துள்ளதாகவும் அமைய வேண்டுமெனில் கவனமின்மையை களைந்து விட்டு கவனத்தோடு மனிதர்களை, இடத்தை, சூழலை தேர்ந்தெடுப்போம்!

கவனத்தோடு தொடர்வோம்! வாழ்க்கை ஓர் இனிய பயணமாகட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *