அலுவலகத்தில் உரசலா?

– சுவாமிநாதன்

ஓர் அலுவலகத்தில் அலுவலர்கள் நடுவிலான உறவுகளுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே செயல்திறன் கூட வேண்டுமென்றால், அவரவர் கடமைகள் பற்றிய தெளிவான வரையறைகள் தேவை.

நீண்ட காலம் அரசியல் உலகிலேயே இருந்துவிட்டு, ஆர்வமும் ஆற்றலும் இருந்த காரணத்தாலேயே கலையுலகில் கால்பதித்த ஒருவர் கொஞ்ச காலங்களுக்குப் பின் தன் அனுபவத்தைச் சொன்னார் – “அரசியலிலே கூட இவ்வளவு அரசியல் இல்லை” என்று.

குழு மனப்பான்மையும், கூடாத கருத்து வேறுபாடுகளும் இல்லாத இடமில்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது. நான்கு பேர் இருந்தால் அங்கே இரண்டு குழுக்களாவது உருவாவது நிச்சயம்.

உரசல் அரசியல் உருவாகும் இடங்களில் செயல்திறன் குறையும். வீண் விவகாரங்கள் பெருகும். இந்த அரசியலை ஆரம்ப நிலையிலேயே அகற்றுவது அவசியம். பொதுவான விஷயங்களில் உருவாகும் சர்ச்சையே தனிப்பட்ட மோதல்களாய் தலை தூக்குகின்றன. அலுவலக உரசலுக்கு அடிப்படையே இதுதான்.

முதல் சிக்கல், யார் எதைச் செய்ய வேண்டும் என்கிற எல்லைப் பிரச்சினை. ஒருவர், தன்னுடைய துறையின் வேலைகளைத் தொட்டுக்கூட பார்க்காமல் அலட்சியமாகவே இருக்கக்கூடும். ஆனால் அதை வேறொருவர் செய்து பார்க்க முன் வந்தால், அது எல்லை மீறிய பயங்கரவாதமாகக் கருதப்படும். எந்த வேலையை யார் செய்வது என்கிற வரையறையும் வரையறை மீறலும் அலுவலக உரசல்களுக்கு அஸ்திவாரம் போடலாம்.

இரண்டாவதாக கருத்து முரண்பாடுகள். இவை ஓரளவு ஆரோக்கியமானவை. கருத்து சுதந்திரம் இருக்கும் இடங்களில் கருத்து முரண்பாடு இயற்கையே.

இந்த இரண்டு சிக்கல்களுமே கையாளப்படும் விதத்தைப் பொறுத்துதான் அலுவலகத்தின் வளர்ச்சிக்கோ பின்னடைவுக்கோ வழிவகுக்கின்றன.

ஓர் அலுவலகத்தில் அலுவலர்கள் நடுவிலான உறவுகளுக்கு மட்டுமில்லாமல் பொது வாகவே செயல்திறன் கூட வேண்டுமென்றால், அவரவர் கடமைகள் பற்றிய தெளிவான வரையறைகள் தேவை.

எதை யார் செய்ய வேண்டும், செய்து முடித்த விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற தெளிவான வரையறைகளைக் கொண்டுள்ள அலுவலகங்கள் உண்டு. இதற்கு Reporting System என்று பெயர். ஒருமித்த உணர்வுடனும் செயல்படும்போது மோதல்கள் உருவாவது பெருமளவு தவிர்க்கப் படுகிறது.

ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பற்றியோ, ஒரு வேலையை செய்து முடிப்பது பற்றியோ அலுவலர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு.

நிர்வாகம், தனக்கு சாதகமான கருத்து கொண்டிருப்பவர்களை ஊக்குவிப்பது போலவே, மாறுபட்ட கருத்து கொண்டிருப்பவர்களைப் பேச அனுமதிக்க வேண்டும். அவர்கள் கருத்தை அதே அளவு அக்கறையுடன் கேட்க வேண்டும். சக ஊழியர்களுடன் மறு தரப்பினருக்கு இருக்கும் கருத்து முரண்பாட்டை ஒரு பெரிய குற்றம் போல் பார்க்கக்கூடாது.

“இந்த வேலையை அணுகுவதில் உங்களுக்கு வேறு விதமான கருத்துக்கள் இருக்கும் போலிருக்கிறது” என்று விஷயத்தை நேரடியாக அணுகும்போது மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருப்பது பெரிய குற்றமில்லை என்கிற தெளிவு இவர்களுக்கு வரும். தங்கள் தரப்பும் சமமாக மதிக்கப்படுகிறதென்கிற எண்ணமே அவர்களுக்குக் கூடுதலான ஈடுபாட்டையும் உற்சாகத்தையும் தரும்.

அலுவலகத்தில் எல்லோரும் அன்பாக நடத்தப்படுவர். ஆனால் அவரவர் செயல்திறன், அர்ப்பணிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படை யிலேயே முக்கியத்துவம் பெறுவார்கள். இது நிர்வாகத்தின் கொள்கையாகவே அறியப் படுவதோடு நடைமுறைக்கும் கொண்டுவரப்பட வேண்டும்.

அலுவலகம் என்பது வாடிக்கையாளர் களுடன் நல்ல உறவுகளை உருவாக்கும் இடம். அலுவலகத்துக்குள்ளேயே உறவுகள் சரியாக வடிவம் பெறாதபோது அது அலுவலகத்தின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும்.

உறவுகளை பலப்படுத்துங்கள். உயர்வுகள் நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *