சாதனைச் சதுரங்கம்

அன்பும், கருணையும் கனிவும், பணிவும் ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் குணங்களாகும். பெருங்குணமே பெருந்தனமாகும். அந்தக் குணங்களே நற்செயல்களாக வெளிப்படும். வாழ்த்துதல், நன்றிகூறுதல், மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பாராட்டுதல் போன்ற செயல்கள் நல்லுறவையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வலிமை பெற்றவையாகும்.

வாழ்த்துதல்

பிறரை வாழ்த்தும் மனம் நமக்கு வாய்க்க வேண்டும். பிறந்தநாளில், திருமண நாளில், சாதனை நாளில் பண்டிகை மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் நாம் வாழ்த்தி மகிழ்ந்து கொண்டாட வேண்டும். நாம் பிறரை வாழ்த்தும்போது நாமும் வாழ்த்தப்படுகிறோம் என்பது இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் விதியாகும்.

எனவே பிறரை வசைபாடுவதை இன்றே விட்டுவிட்டு, “குறையொன்றும் இல்லை” என்னும் எண்ண மலர்ச்சியில் பெற்றோரை, பிள்ளைகளை, உற்றார் உறவினரை, நண்பர்களை, ஏன் நம் எதிரிகளைகூட வாழ்த்தத் தொடங்கினால் நாம் கூடிய விரைவில் வளமை காண்போம்.

“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

தமிழ்கூறும் பல்லாண்டு

என் வாழ்த்துக்கள்”

“எங்கிருந்தாலும் வாழ்க”

“நூறாண்டு காலம் வாழ்க”

-போன்ற திரைப் பாடல்கள் வாழ்த்தின் பொருளை நன்கு உணர்த்துகின்றன. அப்படி வாழ்த்த நமக்கு ஆகாயம் போன்ற மனம் வேண்டும். வணக்கம் கூறுதல், இணக்கத்தை ஏற்படுத்தும், புன்னகை புரிதல், புரிதலை மேம்படுத்தும். வாழ்த்துக்கள் வாழச் செய்யும்.

மேற்கண்ட நற்பண்புகளையும், நற்செயல்களையும், உயர்ந்த மனிதர்கள் அனைவரிடமும் காணமுடியும். புனிதர்களாகவும், தலைவர்களாகவும் வாழும் பலரும் இவற்றையே போதனையாக நமக்குத் தந்து சென்றிருக்கிறார்கள். நாம் அவற்றையெல்லாம் நடை முறைப்படுத்தி நம் வாழ்வை பெரும் சாதனையாக்கிக் காட்ட வேண்டும். பெரியோர் சொன்னவை உண்மை. அவையாவும் சத்தியம் என்பதை நாமும் அனுபவித்து உணர வேண்டும். செய்துபாராமல், வாழ்ந்து பார்க்காமல் இவையெல்லாம் சாத்தியம் இல்லை என்று கூறுதல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.

நீங்கள் எதை கண்டுகொள்கிறீர்களோ அதுவே வளரும். வறுமையையே கண்டு கொண்டால் அது வளரும். வளமையைக் கண்டுக் கொண்டால் அது வளரும். எது வேண்டுமோ அதைக் கண்டுகொள்ளுங்கள். அதையே பாருங்கள் அதையே பேசுங்கள். அதுவாகவே வாழத் தொடங்குங்கள். அது வளர்ச்சியடையக் காண்பீர்கள்….

மனதுக்குள் ஒரு சுங்கச்சாவடி அமைத்துக் கொள்ளுங்கள். வறுமையான எண்ணங்கள் தலை காட்டினால் அவற்றை வெளியே துரத்திவிடுங்கள் வளமையான எண்ணங்களை மட்டும் வரவேற்றுக் காத்திருங்கள். வளமையான எண்ணங்களை மட்டுமே உங்களுக்குள்ளே அனுமதியுங்கள்.

“மனமுண்டானால் மார்க்கமுண்டு”

“மனம் போலவே வாழ்க்கை”

“மனமது செம்மையானால்

மந்திரங்கள் தேவையில்லை”

தமிழ் கூறும் இந்த மந்திர வாசகம் ஒவ்வொன்றும் கூறுவது மெய்ப்பொருள். மனதில் நாம் எதைக் காண்கிறோமோ அதைத்தான் நாம் மண்ணில் காண்கிறோம்.

அன்பும், கருணையும், கனிவும், பணிவும் மிகப்பெரும் தன்மைகள். இவை மனித உள்ளத்தில் உறையும் உள்ளார்ந்த தன்மைகள் ஆகும்.

உள்ளிருக்கும் தன்மைகள், வெளிப் படுமாறு வாழ்வதுதானே வாழ்க்கை எனப்படும். எந்தெந்த செயல்கள் மூலம் இந்தப் பெருந்தன்மைகள் வெளிப்படும் என்பதை நாம் அறிந்து கொண்டால், நம்மால் விழிப்புணர்வோடு ஒவ்வொரு செயலையும் ஆற்றி நம் வாழ்வில் வளமை காண்பது உறுதி. நன்றிகூறுதல், மன்னித்தல், ஏற்றுக்கொள்ளுதல், பாராட்டுதல் என்னும் நான்கு செயல்பாடுகளின் மூலம் ஒருவரிடம் ஒளிரும் அன்பையும், கருணையும், கனிவையும், பணிவையும் நம்மால் உணர முடியும்.

நன்றியறிதல்

இங்கே நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி இதுதான். தினந்தோறும் நாம் ஒவ்வொருவரும் எத்தனை பேருக்கு நன்றி சொல்கிறோம்? பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் மனம் நமக்கு இருக்கிறதா?

நன்றி சொல்லிப் பழகிவிட்டால் நட்பு வளரும், நட்பு வளர்ந்தால் உறவு மலரும். உறவு மலர்ந்தால் வளமை பெருகும். இதில் யாருக்கேனும் ஐயம் உண்டோ? நன்றி மறப்பது நன்றன்று – என்று வள்ளுவரும், நன்றிமறவாமையை வலியுறுத்துகிறார். பொய்யாமொழிப் புலவர் சொல்வது பொய்யாகுமா?

நன்றி மறத்தலை – மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் கவிஞர் கண்ணதாசன்,

“நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன்”- என்று ஒரு பாடலில் ஆணித்தரமாக கூறுகிறார்.

மன்னித்தல்

மன்னித்தல் என்பது மனிதர்களின் அருஞ்செயல்களில் ஒன்றாகும். பிறரிடம் குறையும், குற்றமும் காண்பது எளிது. ஆனால் மன்னித்து மறப்பது அரிது. காந்தியடிகள் தன்னைச் சுட்டு வீழ்த்திய கோட்சேயையும் மன்னித்தார். இயேசுநாதர் ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்தவரிடம் மறுகன்னத்தைக் காட்டினார். அதுமட்டுமல்ல… தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை, “இவர்கள் தாம் செய்வது இன்னதென்ன அறியாதவர்கள்” – என்று அவர்களுக்கான மன்னிப்பை இறைவனிடம் கோருகிறார்.

ஏனெனில் அன்பு நிறைந்த மனமானது. அனைத்துக்கும் நன்றி சொல்லும். பிறர் செய்யும் தீமைகளைக்கூட மறந்துவிடும்.

இதைத்தான் கவிஞர்,

“மனமிருந்தால் பறவைக்கூட்டில்

மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே

மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில்

எந்தச் சுமையும் தாங்கலாம்

குணம்… குணம்… அது

கோயிலாகலாம்”. – என்கிறார்.

மனிதர்கள் மன்னித்துப் பழகிவிட்டால் யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டார்கள். எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். ஏற்றுக்கொண்டுவிட்டால் அனைவரையும் சமமாகப் பார்க்கும் ஞானம் பிறந்துவிடும். பக்குவமற்ற நிலையில் விலங்காகவும் பக்குவம் பெற்ற நிலையில் தெய்வமாகவும் மாறிவிடும் வாய்ப்பைப் பெற்று இடையில் இருப்பவனே மனிதன். இதை….

“ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்” – என்கிறது கவிஞரின் திரைப்பாடலொன்று.

அன்பும், நன்றியும், கருணையும் இருந்தால் மனிதன் தெய்வம் ஆகிவிடுவான் என்பதில் ஐயமுண்டா?

பாராட்டுதல்

அடுத்த மிக முக்கியமான பெருந்தன்மை பிறரைப் பாராட்டுதல் ஆகும். வாழ்த்தி, நன்றி கூறி, மன்னித்து, ஏற்றுக்கொண்டு அனைவரோடும் சமமாகப் பழகியிருக்கிறோமா? பெரும்பாலும் பிறரின் குறைகளையே பார்த்துப் பழகிய நமக்குப் பிறரின் நிறைகள் தெரிவது இல்லை. ஒருவேளை பிறரின் நிறைகள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், நமக்குள் எழுவது பொறாமை உணர்வுதான். பொறாமை என்பது காழ்ப்புணர்ச்சியின் வித்து. பொறாமையால் விளைவது வெறுப்பும், கோபமும், அதிருப்தியுமே. இது பகைமையே வளர்க்கும். பகை வந்துவிட்டால் மனதில் அமைதி இராது. அமைதியற்ற மனது…

“எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”
– என்றே அலைபாயத் தொடங்கும்.

அலைபாயும் மனதில் புயல்தான் அடிக்கும். புயலும் பூகம்பமும் எப்படி வளமை சேர்க்கும்? மாறாக, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவதை விட்டுவிட்டு, அவர்களின் சிறப்பைப் பாராட்டி மகிழும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வளமை சேரும்.

இனிமை நிலைக்கும்!

நீங்கள் நடைமுறைப்படுத்தி அனுபவம் பெற ஓர் ஆலோசனை :
1. ஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது வாழ்த்துத் தெரிவியுங்கள்
2. ஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது நன்றி தெரிவியுங்கள்
3. ஒவ்வொரு நாளும் ஒருவரையாவது மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்
4. ஒவ்வொரு நாளும் ஒருவரையாவது பாராட்டி மகிழுங்கள்.
பிறகு பாருங்கள் உங்களுக்குள் நிகழும் ஆனந்தத்தை!
தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *