அவன் இளைஞன். தன்னுடைய விசித்திரமான, வினோதமான, விந்தையான செயல்பாடுகளின் மூலம் பிறரை முகம் சுளிக்க வைக்கும் மனிதன். ஒருமுறை அவனின் அந்த செய்கைகள் குறித்து அவனிடமே கேள்வி எழுப்பப்பட்ட போது அவன் சொன்ன விளக்கம் உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சியடையத் தான் வைத்தது.
“ஒரு புத்தகத்தில் படித்தேன் ஒரு பெரியவர் சொல்லியிருந்தார்… அவர் இப்படித்தான் செய்வாராம்… அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்!”
“ஒரு மீட்டிங்கில் ஒரு தலைவர் பேசிய போது சொன்னார்… இவ்வாறெல்லாம் அவர் இருப்பாராம்… அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்!”
“இந்த மாதிரியெல்லாம் இருந்தால் உயரலாம் என்று ஒருத்தர் சொன்னார்… அதை நான் ஏற்றுக் கொண்டு அதன்படி இருக்கிறேன்!”
இவ்வாறு யார் யாரோ… எந்தெந்த சூழ்நிலையிலோ… தங்கள் கருத்தாய், தங்கள் அனுபவமாய்… எழுதிவைத்த, பேசி வைத்த விஷயங்களை கண்மூடித்தனமாய் தன் இருப்பு நிலை உணராமல் பின்பற்றி ஒரு குருட்டுத்தானமான வெற்றிக்கு குறி வைக்கும் அந்த இளைஞன் தொலைத்திருப்பது தன் தனித் தன்மையென்னும் ஒரு தங்கக்காப்பை. வெற்றி பெற்றவர்களின் பாதச்சுவடுகளை பாடச் சுவடிகளாக்கிக் கொள்வது நல்ல விஷயம்தான். மறுப்பேதுமில்லை. அதே நேரம் நமது சுயத்தை, நமது தனித்தன்மையை காணாமல் போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றதே!
“அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? என்று கேட்கும் நிலையில் இன்றும் பலர் இருந்து வருவதுதான் வருத்தப்பட வைக்கும் யதார்த்த நிலை.
தனித்தன்மை
நமக்கென ஒரு நம்பகமான துறை, நாகரீகமான கொள்கை, ஒரு நயமான ஒழுங்கு, ஒரு நயமான பேச்சுத் தொனி, ஒரு நளினமான செயல்பாட்டு முறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எந்த நிலையிலும் அதிலிருந்து விலகாமலும், அது சிதைவடையாமல் வாழ்ந்து காட்டுவதுதான் தனித்தன்மை.
சிலருக்கு தனித்தன்மையென்பது பிறவியிலேயே அமைந்து விடுவதுண்டு ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் மறைந்திருக்கும் அதைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல் வேண்டும். யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை. தன்னிடமுள்ள தனித் தன்மையைக் கண்டுபிடித்து அதையே சிந்தித்து பல வடிவம் கொடுத்து முழுமை பெறும் போது அது மற்றவர்களால் ஏற்கப்பட்டு புகழ் பெறுவதுண்டு. ஆனால் பலருக்குத் தனித்தன்மையானது பழக்கத்தின் மூலமும், வாழும் சூழ்நிலைகளாலும் அமைவதுண்டு.
நாம் விரும்பும் துறை ஒன்றாயிருக்க, பணியாற்றும் துறை வேறாக அமைந்துவிடும் சூழ்நிலையிலும், இந்தத் துறையில் இருந்து கொண்டே நம் தனித்தன்மையை அதாவது நம் மனம் விரும்பும் துறையிலும் ஈடுபடலாம். வெற்றி காணலாம். அதற்கு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. டெலிகிராப் கண்டுபிடித்த மோர்ஸ் என்ற விஞ்ஞானி ஓவியக் கலைஞராக முதலில் இருந்து தன் மனம் விரும்பிய டெலிகிராப் பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்து இறுதியில் டெலிகிராப்பைக் கண்டுபிடித்து பெரும் புகழ்பெற்றார். அதே போல் ஜோசப்-டி-நீப்ஸே என்பவர் படைத் துறையில் லெப்டினன்ட்டாக பணியாற்றி விட்டு, பிறகு ஆளுனராகவும் சிறிது காலம் இருந்து விட்டு, கடைசியில் தன் மனம் இஷ்டப்பட்ட ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு போட்டோ கிராஃப்பைக் கண்டு பிடித்தார்.
காப்பி அடிப்பதல்ல தனித்தன்மை –
முன்னமே சொன்னது போல் தனித்தன்மை என்பது நமக்கான ஒரு பாணி ஒருவரைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதோ… அவர் எப்படியெல்லாம் செய்கிறாரோ, செயல்படுகிறாரோ… அப்படியே நடப்பது தனித்தன்மை ஆகாது.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இளைஞனொருவன் ஓர் இயக்குனரிடம் நடிக்க சந்தர்ப்பம் கேட்டுச் செல்கிறான். “என்ன உன் திறமை? சொல்லு!” என்று அந்த இயக்குனர் கேட்க,
“சார். நான் எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடுவேன்! சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்! ரஜனி மாதிரி ஸ்டைல் பண்ணுவேன், கமல் மாதிரி டான்ஸ் ஆடுவேன்!” என்கிறான்.
“தம்பி, நான் கேட்டது உன்னோட திறமையை. நீ சொன்னது மற்றவர்களோட திறமையை. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு. அப்பத்தான் நீ மேலே வருவே!” என்று சொல்லி அவனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் அந்த இயக்குனர்.
உண்மைதானே?
பிறரைப் பார்த்து அப்படியே பின்பற்றுவது நம் சோம்பேறித்தனத்தைக் காட்டுவதோடல்லாது நம்மிடம் தனித்தன்மை என்று ஒன்று இல்லை என்பதை தெளிவாக்கி விடுகின்றதே! நடிக்கச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்ற அந்த இளைஞன் பிறரின் பிம்பமாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தனது தனித்தன்மையைப் பயன்படுத்தி ஒரு புதுமையான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திக் காட்டியிருந்தால் சந்தர்ப்பம் அவனை நாடி ஓடி வந்திருக்குமே!
“முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன” என்பதுதானே ஒரிஸன் ஸ்வெட் மார்டெனின் கூற்று.
பன்னாட்டு நிறுவனமொன்றில் உற்பத்திப் பிரிவில் மேலாளராக இருக்கும் நண்பரொருவரை சமீபத்தில் சந்தித்தபோது அவர் முகம் வாட்டமாயிருக்கக் கண்டு மெல்ல விசாரித்தேன். “பொல..பொல”வென்று கொட்ட ஆரம்பித்துவிட்டார்.
“அதையேன்பா கேட்கறே?.. நேத்திக்கு ரீஜனல் மேனேஜர் வந்திருந்தார்.. அவரோட ஒரு மீட்டிங்… அந்த மீட்டிங்ல அவர் கேட்ட கேள்வியில் ஆடிப் போய்விட்டேன்”!
“அப்படி என்ன கேட்டுட்டார்?” இது நான்.
“கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேலே புரடக்ஷன் டிபாரட்மெண்ட்ல இருக்கும் என்கிட்ட என்னுடைய வேலை குறித்து கேட்டார்…. நானும் சொன்னேன்! கடைசியில அவர், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க வேலைல சேர்ந்தப்ப இங்க எந்த முறையில உற்பத்தி செய்யப்பட்டு வந்ததோ அதையேதான் நீங்களும் மாறாம பின்பற்றி வந்திருக்கீங்க! இதில் உங்க தனித்திறன் எங்கே இருக்கிறது? யாரோ, எப்பவோ ஏற்படுத்தி வைத்திருந்த அதே முறையைக் கடைப்பிடிப்பதற்கு நீங்கள் எதற்கு? யோசிங்க சார்!… புதுப்புது முறைகள் பற்றி சிந்தியுங்கள் சார்… இருக்கிற உற்பத்தி முறைகளில் என்னென்ன மாற்றங்களை… எப்படியெப்படிக் கொண்டு வரலாம்… அதன் மூலம் உற்பத்திச் செலவு எவ்வளவு குறையும்… தர மேம்பாட்டை எப்படி குறைந்த செலவிலேயே பண்ண முடியும்னு சிந்தனை பண்ணுங்க சார்”ன்னு சொல்லிவிட்டு அவர் பாட்டுக்குப் போயிட்டார்.. நான்தான் இங்க மூட் அவுட்டாகிக் கிடக்கிறேன்!” என்று இந்த நண்பர் சொல்லிவிட்டு, ஏதோ அவர் தவறு செய்யாதது போலவும் அந்த ரீஜனல் மேனேஜர் சொல்லிச் சென்றதுதான் தவறு என்பது போலவும் பேச, எனக்கு அவரை நினைத்து பரிதாபப்படுவதா… அல்லது கோபப்படுவதா என்று புரியவில்லை.
சிந்தனை செய்யும் தனித்திறன் காரணமாகவே மனிதன் உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். அவ்வாறு சிந்திக்க மறந்த காரணத்தால்தான் நண்பர் நேர்மையாளராயிருந்தும் மேன்மையடைய முடியாது போய்விட்டது. இயங்கியல் முறையில் மனிதன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தேடல் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே கடைசி வரை செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
எதிர்ப்பிலும் வளர வேண்டும் தனித்தன்மை
“ஒரு செயலை இப்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் வழக்கமாக எல்லோரும் இதை வேறு மாதிரிதான் செய்வார்கள் நான் சற்று மாற்றி புதுமையாகச் செய்தால் ஏற்றுக் கொள்வார்களோ, மாட்டார்களோ பயமாக இருக்கின்றதே!” என்று தயங்க வேண்டியதில்லை… தயங்கினால் அது வெற்றியாவதில்லை.
நம் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நாம் முதலில் ஒரு புதுமையைச் செய்தால் உலகம் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. பலமான எதிர்ப்புகளும் பல்வேறு பேச்சுகளும் கட்டாயம் நமக்குக் கிடைக்கும். அவற்றின் காரணமாக மனம் சோர்ந்து விடாமல் நம்பிக்கையோடு… தனித்தன்மையோடு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக சாதிக்கலாம்.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றார் டார்வின். உடனே மறுப்பொலி எழுந்தது. பின்னாளில் அதையே ஏற்றுக் கொண்டது.
நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைச் சொன்னபோது அவரைப் பைத்தியக்காரன் என்று கூறி ஏளனம் செய்த கூட்டம் பின்னாளில் அதை ஏற்றுக் கொண்டது.
பிரசவ வேதனை தெரியாமல் இருப்பதற்காக குளோரோபார்ம் மயக்க மருந்தை சர்.ஜான் சைமன் கண்டுபிடித்துச் சொன்ன போது, இயற்கையான வலியுடன் பெறவேண்டிய குழந்தைப் பேற்றை மயக்க மருந்து மூலம் பெறுவதால் தாய்ப்பாசம் இருக்காது என எதிர்த்தனர். ஆனால் அந்தக் கண்டுபிடிப்புதான் இன்று வரை நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றது.
உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளினை எடுத்துக் கொள்ளுங்கள். குள்ளமான உருவம், ஒல்லியான தேகம், குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னம். ஆனாலும் எப்படி சாதனை படைத்தார்?… தன் தனித்தன்மை மீதிருந்த நம்பிக்கை. பேசும் படம் பிரபலமாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் பேசாத ஊமைப் படத்தை எடுத்து உலகையே தன் பக்கம் திருப்பினார். “தொள…தொள” பேண்ட், இறுக்கமான சட்டை, சின்னத் தொப்பி, கைத்தடி, ஹிட்லர் மீசை, கால் மாற்றி போடப்பட்ட ஷு, வாத்து நடை போன்ற சாதாரணங்களைக் கொண்டு சாதித்தார். ஆரம்பத்தில் அனைவரும் ஏளனமாகச் சிரித்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்து மகிழ்ச்சியாக சிரித்தார்கள். கடைசியில் தேடிச்சென்று ரசிக்க போட்டா போட்டி போட்டனர். மக்களைச் சிரிக்க வைத்துப் பார்த்த சார்லி சாப்ளின் பிறர் சொல்ல பயந்த விஷயங்களைத் துணிச்சலாகச் சொல்லி மக்களைச் சிந்திக்கவும் வைத்தார். தன் தனித்தன்மையை மட்டுமே நம்பி வெற்றி பெற்ற மனிதர் என்பதற்கு சாப்ளினை விட வேறு சிறந்த உதாரணமே இல்லை எனலாம்.
தனித்தன்மையின் தளபதிகள்
உலக வரலாற்றில் தனித்தன்மையால் தனிப்புகழ் பெற்ற சாதனையாளர்களை கூர்ந்து நோக்கினால் இந்த நிலையில் இருந்தவர் எப்படி அந்த நிலைக்கு உயர்ந்தார் என வியப்பாக இருக்கும். வறிய குடும்பத்தில் தோன்றியிருப்பார். வானளாவிய புகழைப் பெற்றுத் திகழ்வார்.
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தன் குடும்பத்தில் பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். தன் உயரிய தனித்தன்மை மிளிரும் கவிதை வரிகளால் நோபல் பரிசைப் பெறும் அளவிற்கு உயர்ந்தார்.
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஸ்டாலின் தனது தனித்தன்மை உழைப்பால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உலகப் புகழோடு வாழ்ந்தார்.
ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய சட்ட மேதை அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ உழைத்துப் புகழ் பெற்றார்.
இரவு நேரங்களில் குடித்து எறியப்பட்டு சிதறிக் கிடக்கும் பீர் பாட்டில்களை எடுத்து விற்றும், கோவா கடற்கரையில் கேக் விற்றும் பிழைத்துக் கொண்டிருந்த அருந்ததிராய், கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தாம் சந்தித்த பிரச்சினைகளையும், எதிர்கொண்ட பல சிக்கல்களையும் தன் தனித்தன்மையால் வெற்றி கொண்டு தன் முதல் நூலிலேயே முத்திரை பதித்து தனிப்புகழ் பெற்றார்.
“எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் இனியும் தயங்க வேண்டாம், எல்லாத் தேவைகளையும், துன்பங்களையும் நீங்குவதற்கான தனித்தன்மை பேராற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்தும் உறைந்துள்ளது. அதைத் துணிவோடு பயன்படுத்துங்கள். துன்பங்கள் திசைமாறிப் போய்விடும்” என்பது சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம். நமக்குள்ள 24 மணி நேரத்தில் நமக்காகவும், நமது வளர்ச்சிக்காகவும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, சிந்தித்து, நம்மையே நாம் ஆராய்ந்து, நமது தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் நிச்சயம் மேன்மை தரும்.
எண்ணத்தில் வளமை வேண்டும்,
எடுத்ததெல்லாம் முடிக்க வேண்டும்,
நினைத்தது நடக்க வேண்டும்,
செய்வதில் புதுமை வேண்டும்,
புதுமையிலும் தனித்தன்மை வேண்டும்,
தனித்தன்மையில் சிறக்க வேண்டும்,
உலகமே போற்ற வேண்டும்.
V.Dhanusu
Dear Namadhu Nambikai,
This is dhanusu, one of your best reader, i like your books and always refer this great book to read my friends, I am working in a BPO, your are doing such a great job by publishing by this book, which really helps soo many people those who are not having confidence. Helps to improve our practical knowledge, Because our youths not having that much confidence but whish is rectified by you people.
Thanks,
V.Dhanusu
9789816802
Shabeer Ahmed
A good article.Really, this will help the youngsters to bring out their hidden talents.