சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று. ஆனால், அடுத்தவர்களின் அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும். அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசமும் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.

உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும். உதாரணமாக, ஒருவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதைவிடவும் சரியானவழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத்துவரிடம் போவது. மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடியிலிருந்தே அவர் அந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.

உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப் பின்னடைவு வரும்போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.

பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பயணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூட்டுவதற்காகவே நேர்கின்றன.

பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில் நம்மை துரிதப்படுத்துகிறது. இன்னும் தெளிவான பயணத்தை நமக்குத் தருகிறது.

உலகின் பல சாதனையாளர்கள், பின்னடைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில் சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதிவுகள் சோர்விலிருக்கும் யாரையுமே தீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந்தவை.

  • எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமைகிறது.
  • சவாலான நிமிஷங்களை சாதாரணமான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமே செய்கிறார்கள். சாதனையாளர்களோ, சவாலை எதிர்கொண்டு, இன்னும் பலமாய் வெளிப்படுகிறார்கள்.
  • பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என்று நினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமுனை என்று நினைப்பவர்கள் வளருவார்கள்.
  • எதிர்மறையான மனிதர்களை எதிர்கொண்டும் நேர்மறையாய் செயல்படுவதுதான் உண்மையான முன்னேற்றம். எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கும் நம்பிக்கை மனிதர்களை மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை.
  • ஒரு செயலைச் செய்ய உங்களால் முடியாதென்று நினைப்பவர்களை சந்திக்க நேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கே தோன்றட்டும்.
  • ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில் விழுகின்றனவா? அதில் இருக்கும் நடுநிலையான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில் தங்கட்டும்.
  • உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோன்றுகிறதா? உங்களுடன் நீங்கள் உட்கார்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் – பலவீனங்களை அலசுங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.
  • உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும் சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழி இருக்கிறது. உங்களை உயர்த்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவில் கொண்டு நிறுத்துங்கள்.
  • அதிகாலை நேர நடைப்பயிற்சியின்போது, உங்கள் திறன்களுக்காகவும், உங்கள் வாழ்க்கைக்காகவும், கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாய், நன்றியுணர்வை உங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.
  • அச்சம் வரும்போதெல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கையின் உயரம், அச்சத்தின் உயரத்தைவிட அதிகமாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும்போது கடவுளை நோக்கி உங்களை முழுவதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும்சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக்கொண்டு மீண்டு வாருங்கள்.
  • நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான். அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காக வருந்தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்போதுதான். உலகுக்கும் உங்களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.
  • சில விஷயங்களைத் தக்கவைக்க முயல்வதால் வாழ்வின் மற்ற விஷயங்கள் பாதிக்கிறதா? சிறிதும் தயங்காமல் அவற்றை வெளியேற விடுங்கள்.
  • ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட்டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும் உங்களை எதிர் நோக்குகிற போது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *