எதைச் சொல்வது?

புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும்
இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும்
மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும்
உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும்

அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும்
பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும்
விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும்
அனுபவ உரையே ஆயிரம் செய்யும்

பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும்
மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும்
கலக்கத்தில் சொல்வது கவலைகள் வளர்க்கும்
கவனமாய் சொல்வதே காரியம் நடத்தும்.

நேசத்தைச் சொல்வது நட்பை வளர்க்கும்
பாசத்தில் சொல்வது பழியை மறக்கும்
ஆசையில் சொல்வது வேகத்தைக் கொடுக்கும்
யோசித்துச் சொல்வதே உண்மையில் நிலைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *