மாதம் ஒரு நற்பழக்கம்

– அனு

பேச்சு வித்தை ‘ பேசப்பழக்கலாம் வாங்க – பேசும் விதம்

மற்றவர்களிடம் நாம் பேசிப் பழகும் விதம்தான் நம் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. (Interpersonal Intelligence).

ஆனால் எதிர்த்து பேசுவது, விவாதம் செய்வது, மரியாதையில்லாமல் பேசுவது, அலட்சியமாக பேசுவது என குழந்தைகள் தங்களிடம் பேசும் விதம் குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. அந்த வருத்தத்திற்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

‘ஏன் என்ன பெத்த?’ என்றெல்லாம் கூட கேட்டு சில குழந்தைகள் பெற்றோரை அதிர்ச்சியடைய வைப்பதுண்டு. இதையெல்லாம் மாற்ற முதலில் பெற்றோர்கள் பேசும்விதம் மாற வேண்டும்.

பள்ளியில் ஆசிரியர் அடித்துவிட்டார் என்று பையன் அழுதுகொண்டே வந்தான். அப்பா காரணம் விசாரித்தார். ‘பக்கத்து பையனோட பென்சில எடுத்துட்டேன். அதனால்தான் அடிச்சார்” என்று நடந்ததை விளக்கினான். அப்பாவும் இப்பொழுது வேகமாக ஒரு அடி வைத்தார். ‘எத்தனை தடவ சொல்லிருக்கேன் உனக்கு. வேணும்னா என்கிட்ட கேளு. நா ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வர்றேன்னு…’

கதை புரிகிறதா? நீதி இதுதான். குழந்தைகள், பெற்றோர்கள் செய்யும் பல செயல்களை தாங்களும் செய்கிறார்கள்.

சிறு குழந்தையாக இருக்கும்போது நீங்கள் பேசியதைக் கேட்டுத்தான் பேசக்கற்றார்கள். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பேசும் வார்த்தைகளை மட்டுமல்ல.. பேசும்விதத்தையும் உங்களிடம் இருந்துதான் கற்றார்கள்.

உங்கள் குழந்தைகள் மரியாதையாக பேச வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள். என் பையனிடம் நான், ‘வாங்க’ ‘உட்காருங்கள்’ என்றுதான் பேச வேண்டுமா? என்று சிலர் சண்டைக்கு கூட வரலாம்.

யோசியுங்கள். உங்கள் குழந்தையை நீங்களே மதிக்காவிட்டால் நாளை உங்கள் குழந்தையை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை மதித்தால் உங்கள் குழந்தை தன்னையே மதிக்கத் துவங்கும். பிறகு மற்றவர்களையும் மதிக்கும். மற்றவர்களை மதித்தால்தான் பேசும்விதமும் மரியாதையாக இருக்கும்.

குழந்தைகள் கோபமாக பேசினால் என்ன செய்வது?

குழந்தைகள் கோபமாக பேசினால் பதிலுக்கு நீங்களும் உணர்ச்சிவசப்பட்டு திட்டாமல், ‘கத்தாதே’ என்று ஒரே வார்த்தையில் அவர்களை அடக்காமல், அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தாதே என்பதற்கு பதில் உணர்ச்சி வசப்படாதே என்று சொல்லிக்கொடுங்கள்.

நாம் கோபப்படுவதும், திட்டுவதும் நமக்கு தவறாகத் தெரிவதில்லை. ஆனால் நம்மைப்பார்த்து குழந்தைகள் அதுபோல நடந்து கொள்ளும்போது நமக்கு தவறாகத் தெரிகிறது. ‘இந்த வயசுலயே உனக்கு இவ்வளவு கோபம் வருதே’ என்று ஆரம்பித்து சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி நம் கோபத்தை கொட்டி தீர்த்து விடுகிறோம். வயதில் பெரியவர்கள் என்பது கோபப்படுவதற்கும் கடுமையான சொற்களை சொல்வதற்கும் ஒரு தகுதியல்ல…. வயதின் முதிர்ச்சியை நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு காட்ட வேண்டுமே தவிர கோபப்பட்டு அல்ல.

அடிக்கடி கேட்கிற வார்த்தைகளை குழந்தைகளும் பயன்படுத்த துவங்குகிறார்கள். ‘கிளம்பிட்டாங்கய்யா…’ வடிவேல் டயலாக் எல்லா வீடுகளிலும் ஒலிப்பதற்கு இதுதான் காரணம். நீங்கள் கிண்டலான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளும் அதை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் பேசும் விதத்தை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். குழந்தைகள் எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் இனிமையாக பேசுங்கள். நிச்சயம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.

அடுத்து, வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தத்திற்கான தீர்வை பார்ப்போம்.

ஒரு பையன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது விருந்தினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள் மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவன் அப்பாவுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, ‘ஏன் வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவ. வந்து என்னன்னு கேட்டுட்டு போ’ என்றார்.

பையன் அதே கோபத்தோடே வந்து விருந்தினரிடம் ‘என்ன?’ என்றான். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையன் வந்து கோபமாக ‘என்ன’ என்றால் அவருக்கு என்ன புரியும். இருந்தாலும் மரியாதை கருதி ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார்.

இரவில் உணவு நேரத்தில் அவன் அம்மா அவனை அழைத்து, ‘மாமாவை சாப்பிட வரச்சொல்’ என்றார். பையன் நேராக விருந்தினரிடம் சென்று, ‘மாமா சாப்பிட வா’ என்றான். விருந்தினருக்கு மறுபடியும் அதிர்ச்சி, அவன் அம்மாவுக்கும்தான். அவனை கிச்சனுக்கு காதை பிடித்து இழுத்துச்சென்று, ‘போய் மரியாதையா சாப்பிட வாங்கன்னு சொல்லு’ என்றார். பையன் காது வலியோடு விருந்தினரிடம் வந்தான். எரிச்சலோடு அவரைப்பார்த்துச் சொன்னான். ‘மரியாதையா சாப்பிட வா’.

மரியாதையாக பேசுவதை ஒரு சடங்காக்க நினைத்தால் உங்கள் வீட்டிலும் இதுபோன்ற விபரீதங்கள் நிகழலாம். எனவே மரியாதையாக பேசுகிற பழக்கத்தை விட மற்றவர்களை மதிக்கிற உணர்வை வளர்த்தாலே போதும். பேச்சில் மரியாதை தானாக வெளிப்படும்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் குழந்தையை பார்த்து எல்லோரும் சொல்வார்கள் ‘ச்சோ ஸ்வீட்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *