ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

என் இனிய மாணவ நண்பர்களே!

என்ன…. தலைப்பைப் பார்த்தவுடன் ஆர்வமாகவும், ஆச்சரியமாகவும், சற்றே சந்தேகமாகவும் இருக்கிறதா?

‘நூற்றுக்கு நூறு’ சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் படித்து வாங்குவது என்பது அவ்வளவு சுலபமில்லை – என்று தானே நினைக்கிறீர்கள்?

உங்கள் நண்பர், ஒருவரை பார்க்க உங்களை அழைத்துக்கொண்டு போகிறார். ஒரு உயரமான கட்டிடத்திற்குள் நுழைந்து, ‘இதில் நூறாவது மாடியில்தான் இருக்கிறார். வா, பார்த்து விட்டு வந்துவிடலாம்’ என்றால் முதலில், ‘என்ன நூறாவது மாடியா?’ என்று உங்களுக்கு மலைப்பாகத்தான் தோன்றும். உடனே உங்கள் நண்பர் சொல்கிறார். ‘வா, லிப்ட் இருக்கு. ஈஸியா போய் பார்த்துட்டு வந்துடலாம்’ என்று. உடனே மலைப்பு நீங்கி அவருடன் நூறாவது மாடிக்கு கிளம்பி விடுவீர்கள், இல்லையா?

இந்தக் கட்டுரைகூட நண்பர் செய்த வேலையைத்தான் செய்யப்போகிறது. உங்கள் தோள் மீது கைபோட்டு உற்ற நண்பனாய் உரிமையோடு வழி நடத்தப் போகிறது.

லிப்ட் டெக்னிக்

மேலே விரைவாகச் செல்ல லிlh உங்களுக்கு எப்படி உதவியதோ, அதே போல பாடங்களை சுலபமாகப் படிக்க, நன்றாக மனதில் பதிய வைக்க, சிறப்பாக தேர்வெழுத என இந்தத் தொடர் முழுக்க பல லிlh டெக்னிக்குகளை தெரிந்து கொண்டு அதைப் பயன்படுத்த கற்றுத்தரப் போகிறது.

உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று.

ஜப்பானில் உள்ள ப்யூஜிமா (Fujima) எரிமலையின் உயரம் பள்னிரெண்டாயிரத்து முன்னூற்று அறுபத்தைந்து அடி. இது உங்கள் பாடம் என்றால் எப்படி படிப்பீர்கள். கண்ணை மூடிக்கொண்டு திரும்பத் திரும்ப அதன் உயரத்தை சொல்லி சொல்லி பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஒரு வாரம் கழித்து கேட்டால் மண்டையைக் குடைந்து தான் விடையை சொல்ல வேண்டியிருக்கும். விடை சொன்ன பிறகும்கூட சரிதானா என்ற சந்தேகம் இருக்கும்.

இது வழக்கமான நீங்கள் படிக்கும் முறை. இப்பொழுது இதற்கு ஒரு லிlh டெக்னிக் பார்ப்போம். ப்யூஜிமா எரிமலையில் உயரத்தை வேறு எதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று யோசியுங்கள். 12,365 அதாவது வருடத்திற்கு 12 மாதம் 365 நாட்கள் – இப்படி ஞாபகம் வைத்துக்கொண்டால், இது படிக்க, நினைவில் வைக்க, எப்பொழுது கேட்டாலும் விடை சொல்ல என எவ்வளவு சுலபமாக இருக்கிறது பாருங்கள்.

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். நூற்றுக்கு நூறு ஈஸிதானே?

என்ன நண்பரே! ஒரே ஒரு டெக்னிக்கில் எப்படி நம்புவது என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்.இது போல நான் தரும் டெக்னிக்குகனை கடைப்பிடித்து நூற்றுக்கு நூறு எடுத்த பிறகு நீங்கள் நம்பினால் போதும். இப்பொழுதைக்கு நான் சொல்வதையெல்லாம் விடாமல் முயற்சித்துப் பாருங்கள். அதுபோதும். சரி. ஏன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும். அதை அடுத்த இதழில் தெரிந்து கொள்வோம்.

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

1.படிப்பதற்கென்று தனி அறை அல்லது ஒரே இடத்தை ஒதுக்குங்கள். அந்த இடத்தில் படிப்பது தவிர வேறு எந்த வேலைகளையும் செய்யாதீர்கள். இதனால் அந்த இடத்திற்கு வந்தவுடனே படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதே போல் ஒரே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். உதாரணத்திற்கு காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை. இதே நேரத்தில் தொடர்ந்து படியுங்கள். மதியம் ஒரு மணி ஆனால் பசி வருவது போல மிகச்சில நாட்களில் இந்த நேரம் வந்தாலே படிக்க வேண்டும் என்ற மனநிலையும் நமக்கு வர ஆரம்பித்துவிடும்.

2. படிக்கும் அறையில் ஊக்கம் தரும் வார்த்தைகளை மட்டுமே ஒட்டி வையுங்கள். நமது நம்பிக்கை இதழின் நூற்றுக்கு நூறு பக்கங்களில் வரும் வால் போஸ்டர்களை நீங்களே வடிவமைத்து உங்கள் அறையில் ஒட்டுங்கள். சினிமா போஸ்டர்கள் வேண்டாம்.

3. படிக்கும் போது எப்போதும் டிக்ஷனரி மற்றும் என்சைக்ளோபீடியா பக்கத்திலேயே இருக்கட்டும். அப்பொழுதுதான் சந்தேகத்தை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

4. படிக்கும்போது கண்டிப்பாக நோட்ஸ் எடுத்துக் கொண்டே படியுங்கள். நோட்ஸ் எடுக்கும்போதே அந்தக் கருத்தின் முக்கியத்துவத்தை மூளையும் குறித்து தன்னுள் நன்றாகப் பதிய வைத்துக்கொள்கிறது.

5. வரிசையாக படித்துக்கொண்டு வரும்போது ஒரு கேள்வி பதில் பெரிதாக இருக்கிறது என்ற காரணத்திற்காக அதைப் படிப்பதை தள்ளிப்போடாதீர்கள். காரணம் கருத்துக்களும் சில நேரம் வரிசையாக இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நாம் தள்ளிப் போட்டால் அடுத்த பதிலை புரிந்து கொள்ள தடுமாற வேண்டியிருக்கும்.

6. படிக்கும் போது அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு மூன்று நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். மூளையால் எந்தச் செயலிலும் முழு கவனத்தோடு தொடர்ச்சியாக ஈடுபட முடியாது. இப்படி சில நிமிடங்கள் இளைப்பாறும்போது மூளை மீண்டும் முழு கவனத்தோடு பாடங்களை உள் வாங்கத் தயாராகும்.

7. பாடங்களைப் படிக்க திட்டமிடும்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் படிக்க என்று ஒதுக்கினால் அதில் கால் மணி நேரம் இதற்கு முன்னால் படித்த பாடங்களை மீள் பார்வை பார்க்க ஒதுக்குங்கள்.

8. படிக்க ஒதுக்கிய நேரத்தில் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் யாருடனும் பேசாதிருப்பது நல்லது. முக்கியமாக உங்கள் செல்போனை அந்த நேரத்தில் அணைத்து வையுங்கள். இதனால் கவனம் சிதறாமல் படிக்க முடியும்.

9. எதற்காகவும் எழுந்திருக்க வேண்டியிருக்காதபடி தண்ணீர், ஸ்கேல், நோட்டு, பேனா, பென்சில் என அனைத்தையும் முதலிலேயே எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்காருங்கள்.

10. மூளையில் ஏற்படும் Dehydration-ஐ தவிர்க்க அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் அருந்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *