வாழ்க்கையைக் கற்பிப்போம்

-ஸ்வாமி தேவ ஜோதிர்மய

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

‘பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?’ – இந்தக் கேள்விக்கான பதில், ‘பணத்தின் அருமையை முதலில் நாம் உணர்ந்து கொள்வது, பிறகு குழந்தைகளுக்கு உணர்த்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான்’.

வருமானத்திற்கேற்ப செலவு செய்த காலம் போய் இந்த மாசம் என்ன செலவு என்று முடிவு செய்துவிட்டு அதற்கான வருமானம் தேடி ஓடுகிற கால கட்டாயத்தில் நாம் விழுந்துவிட்டோம்.

அடிப்படை தேவைகள் வீடு, உடை, உணவு என்றிருந்த நிலை மாறி கார், கிரெடிட் கார்டு, மாடர்ன் செல்போன், கேபிள் டிவி என மாறி வருகிற உலகத்தில் பொருளில்லார்க்கு வாழ்க்கை இல்லை. இதையெல்லாம் புரிந்து கொண்டு சில புதிய தகுதிகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்தாவிட்டால் நாம் தவறு செய்தவர்களாகிவிடுவோம்.

நிறைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கு, நிறைய பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் எதிர்கால பாதுகாப்பிற்கு பெற்றோர் செய்ய வேண்டியது, ‘பணத்தை கையாள்வது எப்படி?’ என்று கற்றுக்கொடுப்பதுதான்.

உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருந்த ஷேர் மார்க்கெட் கிங் வாரென் பபெட் தன் சொத்தின் பெரும்பகுதியை பில்கேட்ஸ் நடத்தும் சமூக சேவை அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு சொன்னார், ‘எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்கிற அளவிற்கு நான் என் குழந்தைகளுக்கு சொத்தை வைத்துவிட்டு போக விரும்பவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு மட்டுமே சொத்தை வைத்து விட்டு போக விரும்புகிறேன்.’

உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருந்தவரே தன் குழந்தைகளுக்கு பணத்தை விட, வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனைத்தான் வழங்க விரும்புகிறார் என்றால் நாம் செய்ய வேண்டியதும் அது தானே.

நல்லதொரு கல்வி நிறுவனத்தில் படிப்பதும் மதிப்பெண் பெறுவதும் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற போதாது என்பதை பெற்றோர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நிதி நிர்வாகத்திறனை கல்லூரிகளில் படித்து மட்டும் கற்றுக்கொண்டுவிட முடியாது. எவ்வளவுதான் படித்தாலும் பணத்தை கையாளுவதென்பது பழக்கத்தில் வருவதுதான். அந்த பழக்கத்திற்கான வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தருவது எப்படி என்பதை இனிவரும் இதழ்களில் பார்க்கப் போகிறோம்.

படிக்கிற வயசில் பணத்தை கொடுப்பதா? என்று யோசிக்காதீர்கள். ஏனெனில் எக்ஸாமுக்கு முதல் நாள் மட்டும் படித்துவிட்டு எப்படி நல்ல மார்க் வாங்க முடியாதோ அதே போலத்தான் பண நிர்வாகத்தை தொழில் அல்லது வேலைக்கு போன பிறகு தானாக கற்றுக்கொள்ளட்டும் என்று நினைப்பதும்.

பந்தய நாளிற்கு முதல் நாள் மட்டும் பயிற்சி எடுத்தால் எந்த பந்தயத்திலும் ஜெயிக்க முடியாது. வாழ்க்கைப் பந்தயத்திலும் அப்படித்தான். எனவே குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு நிதி நிர்வாக உத்திகளை கற்றுத் தருவது நிச்சயம் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற உதவும்.

நிதி நிர்வாகம் என்பது ஒரு கலை. அதை குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அதைவிடவும் சிறந்த கலை.

5 மற்றும் 6 வயது மாணவர்களுக்கான எங்கள் கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்பில், சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, மாணவர்களுக்கு பரிசாக பல்வேறு நவீன மாடல்களில் உண்டியலை வாங்கி அடுக்கி வைத்திருந்தோம். போட்டிகளில் வென்றவர்கள் அவர்களுக்குப் பிடித்த மாடல் உண்டியலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்கள் எல்லோரும் எல்லா உண்டியல்களையும் பார்ப்பார்கள். அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட உண்டியலை, மிகவும் புதுமையான ஒன்றை எடுத்து திரும்ப திரும்ப பார்த்துவிட்டு கடைசியில் வேறு ஏதாவது ஒன்றை தேர்வு செய்தார்கள். எங்கள் குழுவினருக்கு ஆச்சரியம்.

அவ்வளவு புதுமையான ஒன்றை யாருமே ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விசாரித்த பிறகுதான் உண்மை தெரிந்த. அந்த உண்டியலை எப்படி திறப்பது என்பது தெரியாததால்தான் ஒருவரும் அதை தேர்ந்தெடுக்கவில்லை. சேமிக்கும் பழக்கத்தை துவக்கும் முன்னரே அதை திறந்து எடுத்து செலவு செய்வது எப்படி? என்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் முதலில் தோன்றியிருக்கிறது.

இன்றைய குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு மெனக்கெட வேண்டும்.

நீங்கள் மெனக்கெட தயார் என்றால் அதை சாத்தியப்படுத்த நாங்களும் தயார்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *