வீட்டுக்குள் வெற்றி

-கிருஷ்ண. வரதராஜன்

உங்கள் குழந்தைகள் கசடற கற்க

முதலில் ஒரு குட்டிக்கதை

எல்லா தேர்வுகளிலும் பெயிலாகிக்கொண்டிருந்த பையனை அழைத்து, ஆசிரியர் அறிவுரை சொன்னார். ‘சரியோ. தவறோ எதையாவது பேப்பரில் எழுதினால்தான் அட்லீஸ்ட் ஒன்றிரண்டு மார்க்காவது போட முடியும். அப்பொழுதுதான் நீ பாஸாகவாவது ஆக முடியும். எதுவுமே

எழுதாமல் நீ வெறும் பேப்பராக கொடுத்தால் எப்படி மார்க் போடுவது? எனவே எதையாவது எழுதி வை’ என்றார்.

மாணவன் மகிழ்ச்சியடைந்தான். ‘இத்தனை நாள் பாஸாவதற்கு என்று உள்ள இந்த டெக்னிக் தெரியாமல் போய்விட்டதே. இனி பாஸாகிவிடலாம்.’

வழக்கமாக புத்தகத்தை தொட்டாவது பார்ப்பவன் அதன் பிறகு தொடுவது கூட இல்லை. அரையாண்டு தேர்வு வந்தது. படிக்காததால் ஒரு கேள்விக்குக்கூட பதில் தெரியவில்லை. அதனால் டீச்சர் கொடுத்த டெக்னிக்கை பின்பற்ற நினைத்தான். எதையாவது எழுதலாம் என்றால் படித்திருந்தால்தானே.

எல்லா கேள்வி எண்களையும் லெப்ட் மார்ஜினில் எழுதினான். விடை எழுத வேண்டிய பகுதியில், ‘இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். அப்பாடா நான் பாஸ். கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டான்.

விடுமுறை முடிந்து பள்ளி துவங்கிய முதல் நாள் வகுப்பில் எல்லோருக்கும் விடைத்தாள்கள் திருத்தி வழங்கப்பட்டது. நம் மாணவனும் விடைத்தாளை வாங்கி ஆர்வமாக திறந்து பார்த்தான். அதில் ஆசிரியர் எழுதி இருந்தார். ‘கடவுள் பாஸ் நீ பெயில். புத்தாண்டு வாழ்த்துக்கள்.’

சிரித்துவிட்டு கொஞ்சம் யோசிப்போம். பாஸாக வேண்டியது நம் குழந்தைகளா? அல்லது வருடம் மட்டுமா?

நிச்சயம் நம் குழந்தைகள்தான். அதுவும் பாஸ் ஆனால் மட்டும் போதாது வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்.

படிக்க முடியாததற்கு எந்த பாடத்திலாவது மதிப்பெண் எடுக்க முடியாததற்கு நம் மாணவர்கள் சொல்லும் முக்கிய காரணம் பாடங்கள் புரியாதது.

பெரும்பாலான மாணவர்கள் எந்தப் பாடத்திலாவது மதிப்பெண் குறைவாக வாங்கிவிட்டாலோ அல்லது பாடம் படிக்க கஷ்டமாக இருந்தாலோ, பாடம் புரியாததால், தங்களுக்கு படிப்பு வராது என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு நீங்காத தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறது.

நம் குழந்தைகளுக்கு பாடங்கள் புரியாததன் காரணம் என்ன? அவர்கள் பாடங்களை சுலபமாக புரிந்துகொள்ள பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

1. ஆர்வம் இல்லை.

நியூட்டன் விதியை ஒரு மாணவர் படிக்கிறார். முதல் பார்வையில் ஒன்றும் புரியவில்லை. இதை படித்தால் என்ன பயன்? வாழ்க்கையில் இது எங்கே பயன்படப்போகிறது? என்பதும் தெரியவில்லை. ஆக படிப்பது எதற்காக என்பதே புரியாத போது அதை படிப்பதற்கு ஆர்வமே ஏற்படாது. படிக்க ஆர்வம் இல்லாதபோது புரிந்து கொள்ளவும் ஆர்வம் வராது.

வெறுப்போடு சாப்பிடும் உணவு ஜீரணமாவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். எளிதில் ஜீரணமாகும்
இட்லியாகக்கூட இருக்கட்டும். அதை வெறுப்போடு சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாவதில்லை. இது படிக்கும் பாடத்திற்கும் பொருந்தும். மனம் அதை ஏற்பதில்லை. அதனால் மனதில் பதிவதில்லை.

பாடங்கள் மனதில் பதிய மறுப்பதால் தான் அது கடினம் என்றும் படிப்பு நமக்கு வராது என்றும் முடிவு
செய்கிறார்கள். பிறகு புரியாது என்ற அந்த எண்ணமே பாடங்களை புரிந்துகொள்ள தடையாகிவிடுகிறது.

2. அடிப்படை அறிவு இல்லாதது:

சில பாடங்களை பொறுத்தவரையில் அதை புரிந்து கொள்ள கடந்த வருடம் படித்த பாடங்கள் பற்றிய தெளிவு வேண்டும். உதாரணத்திற்கு ஆறாவதில் உள்ள பாடங்களை சரியாகப்படித்தால்தான் ஏழாவது பாடங்கள் புரியும். ஆறாவது படிக்கும்போது அடிப்படை பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து பாஸாகிவிட்டால் ஏழாம் வகுப்பிலும் பாடங்கள் புரியவில்லை என்ற நிலை தொடரும்.

3. மொழிகூட பிரச்சினைதான்:

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு இங்கிலீஷ் மீடியம் மாறும்போது புரியவில்லை என்ற பிரச்சனை அதிகம் இருக்கும்.

4. வகுப்பறையில் கவனிக்காதது:

பெரும்பாலான மாணவர்கள் வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படும்போது கவனிப்பதே இல்லை. கற்றலின் முதல் நிலையே கவனித்தல்தான். ஆனால் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது சக மாணவர்கள் செய்யும் குறும்புகளிலேயே மனம் நிலைக்கிறது. என்ன பாடம் நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வே இல்லாமல் வகுப்பறையில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள்.

வகுப்பறையில் கவனிக்காததற்கு அதிக உற்சாகம், அதிக சோகம் என பல காரணங்கள் உண்டு. இன்னொரு முக்கிய காரணம் ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் பாடத்தில் ஒரு இடம் புரியவில்லை என்றால் அந்த குழப்பத்திலேயே அதற்கு பிறகு நடத்துவதை கவனிப்பதில்லை.

5. சிந்தனை வயப்படுவது:

ஆசிரியர் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை சிந்தனையை தூண்ட அது தொடர்பான எண்ணங்களில் மனம் ஆழ்ந்து வகுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிடுவதுகூட பலருக்கு நடப்பதுண்டு.
ஆக கவனிக்காத எந்த விஷயமும் புரியாமல்தானே போகும்.

தீர்வுகள்:

பாடங்கள் புரியவில்லை அதனால்தான் படிக்க முடியவில்லை என்று பாடங்களை படிக்காததற்கு மாணவர்கள் சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியை தடுக்க வேண்டுமானால் இது உதவலாமே தவிர முன்னேற்றத்திற்கு இது உதவாது.

படிக்க படிக்கத்தான் பாடங்கள் புரிய ஆரம்பிக்கும். புரியவில்லை என்பதால் படிக்கவில்லை என்பது சரியல்ல.
மதிப்பெண் குறைவிற்கு உங்கள் குழந்தைகள் பாடங்கள் புரியவில்லை என்று காரணம் சொன்னால், ‘புரிந்து கொள்ள என்ன முயற்சி எடுத்தாய்?’ என்று அக்கறையுடன் கேட்டு தன் செயல்பாடுகளைப்பற்றி சிந்திக்க தூண்டுங்கள். எப்படி பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது முழு கவனத்துடன் இருப்பதுதான். எப்படி இருந்தாலும் டியூசனில் நடத்தப்போகிறார்கள் என்று பலரும் வகுப்பில் முழுமையாக கவனிப்பதில்லை. எப்படி இருந்தாலும் மனப்பாடம் செய்துதான் எழுதப்போகிறோம் என்ற எண்ணத்தால் கூட கவனக்குறைவு ஏற்பட்டு விடுகிறது.

வகுப்பறையில் நடத்துவதை கவனிக்க மிகச்சிறந்த வழி ஒன்று உண்டு. ஆசிரியர் அடுத்த நாள் நடத்தப்போகும் பாடத்தை முதல் நாளே படிக்கச் சொல்லுங்கள். பாடங்கள் 25 சதவீதம்தான் புரியும். நிறைய பகுதிகள் நடத்தாத பாடம் என்பதால் புரியாது. ஆனால் மறுநாள் ஆசிரியர் நடத்த நடத்த புரியாமல் சந்தேகங்களாக இருந்த பகுதிகள் தானாக தெளிவாகும். பாடங்கள் நன்றாக புரிய புரிய கவனிக்கும் உற்சாகம் அதிகரிக்கும். படிப்பதும் சுலபமாகும்.

பாடத்தை கவனிப்பதில் ஆர்வம் அதிகரிப்பதால் சக மாணவர்களின் குறும்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

இன்னொரு வழியும் இருக்கிறது. அது ‘சந்தேகம் கேட்பது’.

இன்று மாணவர்களிடம் சந்தேகம் கேட்பது என்ற பழக்கமே இல்லை. அதுவும் குறிப்பாக ஆசிரியர்களிடம். இதற்கு சிலர் சந்தேகம் கேட்டால் ‘ஆசிரியர்கள் கோபப்படுவதாக காரணம் சொல்வது உண்டு’.

ஆசிரியர்களிடம் சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள முடியாவிட்டால் நன்றாக படிக்கும் மாணவர்களிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெற ஊக்குவியுங்கள். இதற்கு முன்னுதாரணமாக உங்கள் குழந்தைகள் புத்தகத்தை எடுத்து படித்து உங்களுக்கு எதெல்லாம் புரியவில்லையோ, அதையெல்லாம் சந்தேகமாக கேளுங்கள். அவர்கள் விளக்கிய பின், ‘இதெல்லாம் புரியவே புரியாது என்று நினைத்தேன் நீ விளக்கிய பிறகு இவ்வளவு எளிதா என்று ஆச்சரியமாக இருக்கிறது’ என்று சொல்லுங்கள். இது கூட நீங்கள் சொல்லாமல் சொல்லும் பாடம்தான். புரியவில்லை என்றால் இது யாருக்குமே புரியாது என்று அர்த்தம் இல்லை. நமக்குத்தான் புரியவில்லை. எனவே அவர்களிடம் கேட்டு நாமும் புரிந்து கொள்ளலாம் என்பதே நீங்கள் சொல்லாமல் சொல்லும் பாடம்.

நீங்கள் உங்கள் குழந்தைகளின் பாடத்தில் கேட்ட சந்தேகங்கள் அவர்களுக்கே புரியவில்லை என்றால் அந்த பாடம் பற்றிய கூடுதல் தகவல்களை இன்டர்நெட்டில் தேட ஊக்குவியுங்கள். கூடுதல் தகவல்கள் கிடைக்க கிடைக்க பாடங்கள் நன்றாக புரிய ஆரம்பிக்கும்.

பாடத்தை புரிந்து கொள்ள பாடத்தில் இல்லாத விளக்கங்களை ஆசிரியர்கள் சொல்லும்போது குறிப்பெடுத்துக் கொள்ளுதல்கூட நிரந்தர புரிதலுக்கு வழிவகுக்கும்.

உங்கள் குழந்தையிடம் ஒரு கேள்வி கேளுங்கள். ‘ஒரு பெரிய கோடு இருக்கிறது. அதை அழிக்க முடியாது. ஆனால் அதை சின்னதாக்க வேண்டும். என்ன செய்யலாம்?’

‘அந்த கோடு பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட வேண்டும்’, என்று உற்சாகமாக பதில் சொல்வார்கள்.

‘அதுபோல பாடம் என்பது ஒரு பெரிய கோடு. அதை மாற்றமுடியாது. அப்பொழுது புரிந்து கொள்ளும் நம் அறிவை அதனினும் பெரிய கோடாக மாற்றிவிட்டால் பாடம் என்ற கோடு சின்னதாகிவிடும்’ என்று விளக்குங்கள்.

‘4ம் வகுப்பு படிக்கும் பையனுக்கு 5ம் வகுப்பு பாடம் புரியாது. ஆனால் 5ம் வகுப்பு வந்த பிறகு 4ம் வகுப்பு பாடம் எளிதாக புரியும். அதாவது உன் நிலை உயர்ந்தால் பாடங்கள் எளிதாக புரிய ஆரம்பித்துவிடும்.

இதை நீங்கள் எடுத்துச் சொன்னதும் உங்கள் குழந்தையிடம் உடனே ஒரு உற்சாகம் பிறக்கும்.

பெற்றோரின் வேலையே இப்படி உற்சாகத்தை ஏற்படுத்துவதும் அதை தக்க வைப்பதும்தானே. இந்த உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *