மாதம் ஒரு நற்பழக்கம்

– ஸ்ரீ கிருஷ்ணா

‘ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஒருமாதம் செய்தால் உங்களிடம் உருவாகும், மாதம் ஒரு நற்பழக்கம்’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு இந்த மாதம் அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய நற்பழக்கம் :

உணவுப் பழக்கம்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உணவுப் பழக்கங்கள்

சாப்பிடக்கூட நம் குழந்தைகளை பழக்க வேண்டுமா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் உண்மை அதுதான். இன்றைய குழந்தைகள் பலருக்கு சாப்பிடக்கூட தெரியவில்லை. எப்படிப் பட்ட உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? எப்போது, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பதை யாரும் சொல்லித்தருவதுமில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய முதல் பரிசு, ஆரோக்கியம்தான். எனவே ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுப் பழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

எப்போது சாப்பிட வேண்டும் ?

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம், நன்கு பசி எடுத்தபிறகே உமிழ்நீர் தேவையான அளவில் சுரக்க துவங்கிறது. பசி எடுத்தபின் சாப்பிட்டால்தான் உணவை செரிமானம் செய்ய தேவையான உமிழ்நீர் கிடைக்கும் . எனவே பசியின்றி சாப்பிடக்கூடாது.

எப்படி சாப்பிட வேண்டும் ?

உணவை மென்று, பற்களால் நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவு நன்கு செரிமானமாகும். சட்னியில் உள்ள பொட்டுக்கடலை, மிளகாய், புளி எல்லா வற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்காமல் சாப்பிடச் சொன்னால், நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள். உணவை அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளினால் நம் உடலுக்கும் அதே சிரமம்தான்.

சாப்பிடும்போது பிற சிந்தனைகளை தவிர்த்து விட்டு, முழு கவனத்தையும் உணவில் வைத்து நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். பலரும் அரக்கப் பரக்க எதையோ யோசித்துக் கொண்டு சாப்பிடுவதால், சாப்பிட்ட நிறைவும் கிடைப்பதில்லை.

மனம் நிறைந்தால்தான் வயிறு நிறையும். அள்ளி விழுங்கினால் அளவு தெரியாது. உடம்பை குறைக்க உணவை நன்கு மென்று ரசித்து சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள். முழு கவனத்துடன் சாப்பிடுவதால் மனமும் வயிறும் சீக்கிரமே நிறைந்துவிடுகிறது. சரியான அளவே சாப்பிடுவோம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எவ்வளவு சாப்பிட வேண்டும் ?

அரைவயிற்றுக்குத்தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். கால் வயிறு தண்ணீர் இருக்க வேண்டும். கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் அடுத்த வேளை உணவையும் சேர்த்தே சாப்பிட்டுவிடுகிறúôம். இது தவறு. உணவு நேரம் நெருங்கியதும் நன்றாக பசிக்க வேண்டும். அப்போதுதான் நீஙகள் சரியான அளவில் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நன்றாக சாப்பிடுவது வேறு, நிறைய சாப்பிடுவது வேறு. பெரும்பாலான பெற்றோர்கள் படிக்கிற குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்று நிறைய கொடுத்து படிக்க முடியாமல் செய்து விடுவதுண்டு. அதிகமாக சாப்பிட்டு திணற திணற அசைய முடியாமல் உட்கார்ந்திருப்பது, நம் குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, உடல் நலனுக்கும் கேடு.

அதிக உணவு மதமதப்பை ஏற்படுத்தி படிக்க முடியாமல் செய்துவிடும், எனவே உணவு விஷயத்தில் மட்டுமல்ல, அதன் அளவு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏன் சாப்பிட வேண்டும் ?

நொறுக்குதீனிகளில் காட்டுகிற ஈடுபாட்டை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதில் நம் குழந்தைகள் காட்டுவதேயில்லை. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு பழமும் நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காய்கறிகளை சூப் ஆகவும் பழங்களை ஜுஸாகவும் சாப்பிடவாவது பழக்கப் படுத்துங்கள்.

பொதுவாக சில:

மாணவர்கள் இப்பொழுது இரவு உணவு நேரத்தை ஒன்பது பத்து என நீட்ட ஆரம்பித்து விட்டார்கள். எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

உணவுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவு உணவுக்கு பிறகு அப்படியே படுத்து விடக்கூடாது. கட்டாயம் நடக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அசைவத்தையும் அதிக அரிசி உணவுகளையும் முக்கியமாக தேர்வு நேரத்தில் தவிர்த்திடுங்கள்.

படிக்கும் நேரத்தில் எடுத்துக்கொள்ள  வேண்டிய உணவுகள் :

சத்துமாவு உருண்டை, தேன் கலந்த தண்ணீர், தேனில் ஊறிய பேரீட்சை, பழங்கள், முளை கட்டிய பயிறு சுண்டல் (இவை அனைத்தையும் ஒரே நாளில் கொடுத்து மிரட்டி விடாதீர்கள். )

பாகற்காய் கசப்பாக இருக்கிறது என்பதால் பல குழந்தைகள் அதை தவிர்த்துவிடுகிறார்கள். நம் உடலில் உள்ள தேவையற்ற பேக்டீரியாக்களை அழிக்கக்கூடிய இயற்கையான பூச்சி மருந்துக்கள் பாகற்காயில் இருக்கிறது அதனால்தான் பாகற்காய் கசக்கிறது. இப்படி ஒவ்வொரு காய்கறிக்கும் பழத்திற்கும் உள்ள நன்மையை எடுத்துச் சொன்னால் ஏன் இதை தவிர்க்கக்கூடாது என்று குழந்தைகளுக்கு விளங்கும். கேள்வியே  கேட்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள்.

இதையெல்லாம் கடைப்பிடிக்கிறபோது உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கே விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *