நம்புங்கள்…

நம்புங்கள் எளிது எளிது வெற்றி எளிது

கெட்டிக்காரனை நதியில் தள்ளினாலும் அவன் வாயில் மீனோடுதான் வருவான் என்பது எகிப்திய பழமொழி. நண்பர்களே! எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தால் போதும் இந்த பழமொழி உண்மை என்பது புரியும். உயரத்தில் பறக்கின்ற கழுகுக்கு தன்னுடைய உணவு கீழே

போவது தெரிந்தால், சட்டென்று கீழே பறந்து வந்து தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். அந்த சமயோசிதமும், எந்நிலையிலும் தயாராக இருத்தலும் நம் வெற்றிக்கான காரணிகள். இருட்டில் கூட நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் பார்த்து வெளிச்சம் இருக்கிறதே என்றால் அது நம்பிக்கை. ஆனால் இருட்டாக இருக்கிறதே என்று தலையில் கை வைத்தால் அது நம் கை மட்டுமே.

சிட்டுக்குருவிகள்கூட இடம் பெயர்ந்து விட்டன, சிம் கார்டுகள் வந்தபிறகு. நம் சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்பட வேண்டும். சாதகப் பறவை என்று ஒன்றுண்டு. வானிலே பறக்கும்போது இடி மின்னல்களுக்கிடையே, சந்தோஷித்துச் செல்லும். ஆனால் அதனுடைய உணவு என்ன என்று பார்த்தால் மழைநீர் மட்டுமே. மழைநீருக்காக வாய்திறந்து காத்திருக்கும். மழைநீரைத் தவிர வேறு எதையும் உணவாக உட்கொள்ளாது. நாமும் சாதகப் பறவையாகத்தான் இருக்க வேண்டும். என் இலட்சியம் இதுதான். இதுமட்டுமே என்னும் உறுதி வேண்டும். இந்த இலட்சியம் இல்லேன்னா, கிடைக்கவில்லையென்றால் இன்னொன்று என்று எண்ணினால் இதன் விளைவும்கூட இன்னொன்று ஆகத்தான் இருக்கும்.

உணர்ச்சி வேகத்தில் அவசரத்தில் எடுக்கும் முடிவு நாம் பல காலம் முயற்சித்த ஒன்றைத் தவிடு பொடியாக்கி விடும். வெற்றி பெற பயன்படுவது நூலேணியாக இருந்தாலும் நமக்குத் தேவை கைகள் அல்ல! நம்பிக்கை. நம்பிக்கை விதை விதைக்கப் படும் பொழுது நூலேணிகளும்கூட கான்கிரீட் படிக்கட்டுக்கள்தான்.

பய-க்களில் வரும் சில விளம்பரங்கள்கூட நமக்கு செயல் ஊக்கியாக செயல்படுகிறது. ஒரு சோப் விளம்பரம். நெரிசல் மிகுந்த சாலை, பஸ்களும் கார்களும் போய்க் கொண்டிருக்கின்றன. சிக்னல் விழ நிற்கின்றன வாகனங்கள். காருக்குள்ளிருந்து கண்ணாடியை இறக்கிய வெள்ளைச் சட்டை, டை அணிந்த பணக்காரர் சிறுவனையும் சைக்கிளையும் சட்டையையும் பார்த்து முனகுகிறார். பையன் பார்க்கிறான். அவரின் டையையும் சட்டையையும். தான் மடித்து விட்டிருந்த சட்டையின் கைப் பகுதியை சரி செய்கிறான். பாக்கெட்டில் இருந்த டையைக் கட்டுகிறான். சட்டைப் பாக்கெட்டில் பேனாவைச் செருகுகிறான். அந்தப் பணக்காரனைத் திரும்பிப் பார்க்கிறான். ஆச்சரியத்துடன் பார்க்கிறார் அவர். சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. கார்க்கண்ணாடியை இறக்கி ஆச்சரியத்துடன் பார்க்கின்ற பணக்காரரிடம் பையன் சொல்கிறான், காரையும் தன் சைக்கிளையும் பார்த்தபடி, “இரண்டு சக்கரம் தான் வித்தியாசம் சார், அதையும் பெரியவனான பிறகு வாங்கிவிடுவேன்” என்று சொல்லி சைக்கிளில் பறக்கிறான். பணக்காரர் புன்னகையுடன் பார்க்கிறார். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஓடும் விளம்பரப் பாடம். பையனிடம் இருக்கும் நம்பிக்கையை மட்டும் சொல்லவில்லை. நமக்கும் கூட உற்சாகத்தைத் தந்து செல்கிறது. சவாலாக வாழ்ந்தால் சரித்திரம் படைக்கலாம்! இந்தப் பையன் மாதிரி, மோசம் ஒருவரும் இல்லை. உருப்பட மாட்டான் என்று வெகுஜனங்களால் விமர்சிக்கப்பட்டான் ஓர் இளைஞன். தான்தோன்றித்தனமாக அலைந்து கொண்டிருந்தான். “இவனை ஏதாவது வழியில் உருப்பட வைக்க முடியுமா? என்று பாருங்கள்” எனச் சொல்லி மனம் வருந்திய தாய் அந்த இளைஞனை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைத்தார். உருப்படாதவன் என்று விமர்சிக்கப்பட்ட அந்த இளைஞன் ஆங்கில சாம்ராஜ்யத்தை நம் பாரதத்தில் வேரூன்றியவன், இராபர்ட் க்ளைவ்.

தான் ஒரு விமானப்படை அதிகாரி என்ற கனவில் இருக்கும் இளைஞன், தன் அறை முழுவதும் விதவிதமான போர் விமானங்களின் படங்கள், நமச்சிவாய, நாராயணா என்னும் மந்திரத்துடன் நான் விமானப்படை அதிகாரி என்ற மந்திரம். கல்லூரியில் தேசிய அளவில் N.C.C-யில் வாயுசைனிக் பயிற்சியில் 14வது இடத்தையும், எழுத்துத் தேர்வில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்று அடுத்த ஆண்டு விமானப் படைக்குள் நுழைவதற்குத் தயாரான நிலையில் இருக்கிறார் சந்துரு என்ற இளைஞர். நம் இளைஞர்கள் தயார் நிலையில் மட்டுமல்ல, தேசத்தின் மேலும், தீவிர நேசத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வாழ வேண்டும் என்பது முக்கியமல்ல.

வாழ்க்கைக்கு அப்பால் நம் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதுதான் முக்கியம்.

– தோரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *