புது வாசல்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்துவழங்கும் புது வாசல்

நம்பிக்கை எங்கே கிடைக்கும்?

நம்பிக்கை தரும் புத்தகங்கள் இப்போது அதிகம் விற்பனையாகிறது. நம்பிக்கை தரும் கூட்டங்களுக்கு மக்கள் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள்.

நம்பிக்கை எங்கே கிடைக்கும்? புத்தகங்களிலா? கூட்டங்களிலா? அல்லது வேறு ஏதாவதிலா?

தன்னம்பிக்கை புத்தகங்கள் எல்லாம் புதையல் இருக்குமிடம் பற்றிய குறிப்புகள் மட்டுமே தருகிறது. அதன் வழி நடந்து நீங்கள்தான் புதையலை கண்டறிய வேண்டும். ஆனால் பல பேர் புத்தகம் வாங்கியதையே நம்பிக்கை வாங்கியதைப் போல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.

நம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சிக்கூட்டங்கள், திசைகாட்டி மரங்கள் போலத்தான். திசைகாட்டி மரங்களையே சுற்றிக்கொண்டிருப்பது பயணம் ஆகாது.

நமது நம்பிக்கை எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஆனால் நம்பிக்கை உங்களுக்குள் மட்டும்தான் கிடைக்கும்.

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓட ஆரம்பித்த பிறகுதான் நம்மால் ஓட முடியும் என்று தெரியும். தொடர்ந்து ஓடினால்தான் நம்மால் நிச்சயம் பரிசு வாங்க முடியும் என்று தெரியும். எனவே உட்கார்ந்திருக்காதீர்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை நீங்களே சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்.

ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருங்கள். ஏதாவது ஒரு திசையில் ஓடிக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக ஏதாவது சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்.

நம்மால் முடியாது என்று நாமே நினைத்துக்கொண்டிருந்ததை செய்து முடிக்கும்போது, ஏன் செய்யத்துவங்கும்போதே நமக்குள் நம்மீது நம்பிக்கை பிறப்பதை உணர முடியும்.

நாம் சாதிக்கும் சிறிய சிறிய வெற்றிகள்கூட நமக்கே நம்மை சரியாக அறிமுகப் படுத்துகிறது. இதுநாள்வரை நம்மீது நாம் வைத்திருந்த தாழ்வான அல்லது தவறான அபிப்ராயங்களை அது தவிடுபொடியாக்குகிறது.

நம் செயல்கள் பாராட்டுப்பெறும்போது, நம் வெற்றிகள் அங்கீகரிக்கப்படும் போது நமக்குள் நம்பிக்கை பொங்குகிறது.

ஆனால், இது எல்லாவற்றிற்கும் அடிப்படை எதையாவது செய்து கொண்டே இருத்தல். உங்களால் முடியாது என்று நினைக்கும் விஷயத்தில்கூட எதையாவது செய்து பார்த்துக்கொண்டே இருங்கள்.

இது எல்லாவற்றையும்விட பொருளாதார ரீதியாக வெற்றி பெறும் போதுதான் ஒரு மனிதன் தன் மீதான நம்பிக்கையை நூறு சதவீதம் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஒரு துறையில் தொடர்ந்து முயற்சிக்கிறவர்களால்தான் பொருளாதார வெற்றியும் பெறமுடிகிறது என்பதால் நீங்கள் எதில் வெற்றி பெற வேண்டுமோ, அதில் எதையாவது செய்து கொண்டே இருங்கள்.

நம்பிக்கையால் வெற்றி விளைகிறது. வெற்றி நம்பிக்கை விதைகளை மேலும் நமக்குள் விதைக்கிறது.

ஒன்றை மறந்து விடாதீர்கள். உங்களுக்குள் தோண்டிக்கொண்டே இருங்கள். முடியாது என்ற கற்பாறைகளை தோண்டி எடுத்த பின்தான் உங்களுக்குள் நம்பிக்கை நீர் சுரப்பதை பார்க்க முடியும்.

நீங்கள் அடைந்த பழைய தோல்விகள்தான் உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கற்பாறைகள். எப்போதும் தனது தோல்வியைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் மனதில் சுமையை மேலும் கூட்டிக்கொள்கிறார்கள்.

தனக்குள் சுரக்கும் நம்பிக்கை நீரை, போர் போட்டு, மோட்டார் அமைத்து தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். பொதுக்கிணறாக்கி மற்றவர்களுக்கும் பயன்படுத்த அனுமதிப்பவர்களும் இருக்கிறார்கள். தனக்குள் ஊற்றெடுக்கும் நம்பிக்கை நீரை அருவியாக்கி உலகத்தை உய்விப்பவர்களும் இருக்கிறார்கள்.

தனக்குள்ளேயே நம்பிக்கை நீர் இருப்பதை, உங்களுக்குள் ஊற்றெடுக்கும் அருவியில் நனைந்த பின்னாவது புரிந்து கொண்டால் சரி.

அதன் பிறகு பாருங்கள். இந்த உலகம் உங்களை மிஸ்டர் நம்பிக்கை என்றே நினைவில் வைத்திருக்கும்.

என்றும் நம்பிக்கையுடன்..

கிருஷ்ண.வரதராஜன்
துணை ஆசிரியர் – நமது நம்பிக்கை
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு நூறு இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *