சர்வம் மார்க்கெட்டிங் மயம்

-பேரா.சதாசிவம்

சந்தை பொருளின் மதிப்பு

இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. பொருட்களை வாங்குபவர்களின்

தேவைகள் பலமடங்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர்கள் இருக்கும் இடத்திற்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கு பல வகையில் இன்று நிறுவனங்கள் தொழில் நுட்ப வசதி செய்து கொடுக்கின்றனர்.

நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமான அளவில் இன்று பொருட்களும் வினியோகம் செய்யப்படுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் கிடைக்கக் கூடிய பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கப் பெறும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சந்தையிடும் முறை என்றால் அது மிகையாகாது.

நுகர்வோர்களுக்கு பல தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் தேவையான தகவல்கள் கிடைக்கப் பெறுவதால் விழிப்புணர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் நிறுவனங்களின் பொறுப்பும் அதிகமாகியுள்ளது. போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு பொருளை நுகர்வோரின் தலையில் கட்டிவிட்டு சென்றுவிடலாம் என்கின்ற நிலைமை மாறியுள்ளது. நிறுவனங்களும் நுகர்வோர்களிடம் நீண்ட கால தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். அப்படி செயல்படும் நிறுவனங்கள் மட்டுமேதான் சந்தையில் நிலைத்து நிற்கின்றனர்.

மார்க்கெட்டிங் என்கின்ற ஓர் அம்சத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு நான்கு தூண்களாக இருப்பது பொருட்கள், வினியோகம், செய்யப்படும் சந்தை, விலை மற்றும் விளம்பரம். இதைத்தான் 4டள் என்று கூறுவர் (Product, Place, Price and Promotion) இவை நான்கும் எந்த அளவு சிறப்பாக அமைகிறது என்பதைப் பொறுத்து மார்க்கெட்டிங் என்பது வெற்றியடைகிறது. இந்த நான்கு தூண்களில் நிறுவனங்கள் கையாண்டு வந்த உத்திகளை நாம் பார்த்து வந்தோம். பொருள் என்று எடுத்துக் கொண்டால் அதில் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை என்ன என்று பார்த்தால் பொருளின் வகைகள், பொருளின் தரம், பொருட்களின் அமைப்பு, பொருட்களின் குணாதிசயங்கள், பொருட்களின் பெயர் (Brand Name), பொருட்களின் Package பொருட்கள் கிடைக்கப்பெறும் அளவு, பொருட்களைச் சார்ந்திருக்கும் சேவை, சேவையை செயல்முறைப்படுத்தும் மக்கள், சேவை செய்வோரின் திறமை, கால அளவு, சேவை அளிக்கப்படும் இடங்கள், பொருட்களின் மூலம் நிறுவனங்கள் தரும் உத்தரவாதம், பொருட்களில் தேவையான மாற்றம், பொருட்களில் அமைந்துள்ள அல்லது தேவையான தொழில்நுட்பம் போன்றவவை நிறுவனங்களை வெற்றிபெறச் செய்கின்றது. சந்தையில் விற்பனையை மேற்கொள்பவர்கள் இதை முழுவதும் உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

அடுத்து பொருள் வினியோகம் செய்யப்படும் இடங்களைப் பற்றி பார்த்தால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள், வினியோகம் செய்யப்படும் இட்ஹய்ய்ங்ப் அதாவது Stockist, Wholesalers, Retailers போன்றவர்கள், வினியோகம் எந்த அளவு சந்தையை முழுமையாக சென்றடைகிறது போன்றவை, முக்கியமான சந்தைகள், கொள்முதல் மற்றும் போக்குவரத்து போன்றவை மிகவும் கவனிக்கப்பட வேண்டியவைகளாகும். வினியோகம் சிறப்பாக இருந்தால் மட்டுமே போட்டியுள்ள களத்தில் வெற்றி பெறமுடியும்.

அடுத்து பொருட்களின் விலை. விலையை பொறுத்த வரையில் நுகர்வோர்கள் தான் முடிவெடுக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. எந்த விலையில் பொருளை விற்றுவிடலாம் என்ற நிலை மாறிவிட்டது. பொருட்களின் மதிப்பு (Value) என்பதைப் பொறுத்துத்தான் நுகர்வோர்கள் பொருளை அங்கீகரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பொருட்களின் விலையில் அளிக்கப்படும் தள்ளுபடி, பொருளுடன் மதிப்பு சார்ந்த அம்சங்கள் எந்த அளவு கூட்டப்படுகின்றது என்பதும் முக்கியமானதாகும். சொல்லப் போனால் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பாக இருந்தால் பொருளின் விற்பனையும் சிறப்பாக அமையும்.

அடுத்து பொருள் எப்படி விளம்பரம் செய்யப்படுகிறது என்பதும், பொருளின் வெற்றியை முடிவு செய்கின்றது. விளம்பரம் என்று பார்த்தால் அதற்காக நிறுவனங்கள் எந்த அளவு தம் நிதியை ஒதுக்குகிறார்கள் என்பதும் முக்கியமானதாகும். ஒரு விற்பனையை மேற்கொள்ளும் பொருளைப் பற்றிய விழிப்புணர்வு என்பது நுகர்வோர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தகவல்கள் எந்த அளவு நுகர்வோர்களைச் சென்று அடைகின்றதோ அந்த அளவு விற்பனை என்பது சுலபமாகும். அடுத்து விற்பனையை மேற்கொள்ளும் குழு. இவர்கள் கையில்தான் ஒரு நிறுவனத்தின் லாபம் முழுவதும் இருக்கின்றது. ஆகையால் விற்பனையை மேற்கொள்ளும் குழுவிற்கு தகுந்த முறையில் பயிற்சியளிப்பது பொருளை விற்க தேவையான விஷயங்களை முறையாக மக்களிடம் சேர்க்க மிகவும் உதவும்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் மார்க்கெட்டிங் என்பது வெற்றியுடன் திகழும் நிறுவனங்களின் தாரக மந்திரமாக உள்ளது. ஒரு விற்பனை பிரதிநிதியின் வெற்றியும் திறம்பட அவர்கள் மார்க்கெட்டிங் செய்வதை பொறுத்துத்தான் உள்ளது. ஆகவே மார்க்கெட்டிங் என்பது எங்கும் எதிலும் வியாபித்துள்ளது. வியாபாரம் சாராத பல விஷயங்களிலும், செயல்களிலும், மார்க்கெட்டிங் என்பது விளங்கி வருவது பலருக்கு தெரிவதில்லை. மார்க்கெட்டிங் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாக அமைந்துள்ளதால்தான் நாம் சர்வம் மார்க்கெட்டிங் மயம் என்று கருதி வந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *