காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன்

டேக்கிங் ஸ்டாக்

வங்கிகளுக்கு ஆண்டிற்கு இருமுறைகட்டாய விடுமுறை கொடுப்பார்கள். செப்டெம்பர் 30ம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் தான் அந்த இரு நாட்கள். கணக்கு முடிப்பது என்பது அதற்கான காரணம். அரையாண்டு கணக்கு, ஆண்டுக்கணக்குகள் பார்ப்பது முடிப்பது பல ஆண்டுகளாக உள்ள வழக்கம்.

‘அக்கவுண்ட்ஸ்’ல் மற்றொரு பழக்கமும் உண்டு. அதன் பெயர் ‘ரெகன்சிலியேஷன்’. அதனை, தமிழில் ‘சரிபார்ப்பது’ அல்லது ‘ஒப்பிட்டுப்பார்ப்பது’ என்று சொல்லலாம். இதனையும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தவறாமல் நேரம் எடுத்துக்கொண்டு மெனெக்கட்டுச் செய்கிறார்கள்.

இவற்றைச் செய்வதால் அவர்களுக்கு வரவு கிடையாது. கூடுதல் வியாபாரம் செய்யக்கூடிய நேரம் இவற்றில் போகிறது. ஆனாலும் விடாமல் செய்வது ஏன்?

வங்கிகளில் மட்டுமில்லை. கதவினை பாதி திறந்து வைத்துவிட்டு, அன்றைய வியாபாரத்தினை தவிர்த்துவிட்டு, சில கடைகளில் ஸ்டாக் எடுப்பார்கள். என்ன இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது என்று அளப்பார்கள், எண்ணுவார்கள், கணக்குப் பார்ப்பார்கள்.

வரும் வியாபாரத்தினை விட்டுவிட்டு கணக்குப் பார்ப்பது எதற்காக?

தொழிற்சாலைகளில் வருடாந்திர பராமரிப்பு (ஆனுவல் மெயின்டெனென்ஸ்) என்று சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்திவைத்துவிட்டு, இயந்திரங்களை பாகம் பாகமாக கழற்றி, எண்ணெய் விட்டு, சேதாரங்கள் சரிசெய்து, பின் மாட்டுவார்கள்.

விற்கும் பொருளை உற்பத்தி செய்யாமல், பழுதடைந்து நிற்காத யந்திரங்களை பராமரிப்பு வேலை செய்ய என்ன காரணம்?

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். இவற்றைச் செய்வதால், பின்னால் வரக்கூடிய, தொடரக்கூடிய குழப்பங்களை, சிக்கல்களை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

சுறுசுறுப்பாக நடக்கும் வங்கிகள், வியாபாரங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை, நின்று நிதானித்து தன்னைத்தானே கவனித்துக் கொண்டுவிட்டு, தங்கள் வேலையை தொடருகின்றன. அதன் மூலம் செய்து கொண்டிருப்பவை சரிதானா? ஏதேனும் மாறுதல்கள் தேவையா? என்று சரிபார்த்துக் கொண்டுவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்கின்றன.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நம்மில் பலரும்கூட இதனை செய்ய வேண்டும். இந்த ‘டேகிங் ஸ்டாக்’ என்பது நமக்கும் பொருந்தும். என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எதனால் அதனை செய்து கொண்டிருக்கிறோம்? என்று கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்துக்கொண்டு, பின், செய்வதை தொடரலாம் . தேவைப்பட்டால் மாறுதல்கள் செய்யலாம்.

ஒரு விளையாட்டு மைதானம். தடகளப் போட்டி அது. விசில் சத்தம் கேட்டதும் ஓடுவதற்கு ஆயத்தமாக வீரர்கள். ஓட வேண்டிய தூரம் 100 மீட்டர்கள். விர்ர்ர்ர். விசில் அடித்தாகிவிட்டது. ஓட்டமா அது! பறந்தார்கள்.

முதலில் வந்தவருக்கு பரிசு. அவர் 100 மீட்டர் தூரத்தினை கடந்தது 16 வினாடிகளில். அவரைவிட வேகமாக ஓடிய இன்னொருவருக்கு பரிசு இல்லை. இத்தனைக்கும் அந்த இன்னொருவர் 100 மீட்டர் தூரத்தினை சுமார் 14 வினாடிகளில் கடந்தவர்!

அவருக்கு ஏன் பரிசில்லை என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்குமே! அவர் இலக்கு நோக்கி ஓடவில்லை. வேறு திசையில் ஓடினார்!

கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். யாராவது இப்படிக்கூட ஓடுவார்களா என்று. அவர் ஓடினார் என்றே வைத்துக்கொள்ளுவோம். எவ்வளவு வேகமாகத்தான் ஓடினால் என்ன? ஓடவேண்டிய பக்கம் ஓடாமல் வேறு பக்கம் போனால் என்ன கிடைக்கும்!

வேகமாக செய்கிறேன், கூடுதலாகவே செய்கிறேன் என்பதற்கெல்லாம் வாழ்க்கைப் பந்தயத்திலும் பரிசுகள் கிடையாது. எதை நோக்கி ஓடுகிறோமென்பது முக்கியம். அதனால், ஓடுகிற திசை சரிதானா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் ‘டேக்கிங் ஸ்டாக்’.

என்ன செய்கிறோம். எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்பனவற்றால் வேண்டிய பலன் கிடைக்காது. Why we do, what we do & Why we do, the way we do என்று ‘பிசினெஸ் பிராசஸ் ரீ இன்ஜினியரிங்’கில் ஒரு கான்செப்ட் உண்டு.

எதைச் செய்கிறோமோ அதனை ஏன் செய்கிறோம்? எதைச் செய்கிறோமோ, அதனை ஏன் அவ்விதமாகச் செய்கிறோம்?

இவைதான் அவ்வப்போது எவரும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். கால மாற்றத்தால், சூழ்நிலை மாற்றத்தால், வசதிகளின் பெருக்கத்தால், இன்னும் ஏனைய காரணங்களினால், நாம் செய்யும் முறைகளில் மாற்றம் தேவைப்படலாம். அது தெரியாமல் பழைய முறையிலேயே செய்து கொண்டிருக்கக் கூடாது.

அவற்றைச் சரி பார்த்துக் கொள்ளத்தான், செய்வதை கொஞ்சம் நிறுத்திவிட்டு, ஸ்டாக் எடுக்க வேண்டும் என்பது. இதனை செய்வது எப்படி?

வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த தந்தையிடம், தன்னோடு பேசுவதற்கு காசு கொடுத்து அப்பாயின்மெண்ட் கேட்ட பிள்ளையைப்பற்றி தெரிந்திருக்கும். அதைவிட கொடுமை, நாமே நம்மிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்கவேண்டிய நிலைதான். சிலர் நிலை அப்படித்தான் உள்ளது. அவர்கள் அவர்களுடன் பேசுவதில்லை. நல்லது கெட்டதை விவாதிப்பதில்லை. எடுத்தேன் கவிழ்ந்தேன் என்று செய்கிறார்கள். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாம் நம்மோடு பேச வேண்டும். காலை நடைப்பயிற்சியின் போதோ, காலையிலோ இரவிலோ படுக்கையில் படுத்தபடியாகவோ அல்லது, பூங்கா போன்றவற்றில் அமர்ந்தபடியோ, அல்லது நம் அறையில் தனியாகவோ, நம்மோடு நாம் சத்தமின்றிப் பேசவேண்டும்.

என்ன செய்ய விரும்புகிறோம்? என்ன செய்துகொண்டிருக்கிறோம். சரியாகத்தான் செய்கிறோமா? ஏதேனும் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டுமா? யோசிக்க வேண்டும்.

தேவைப்பட்டால், ஒரு பேப்பர் பேனா வைத்துக்கொண்டு எழுதியோ படமாக வரைந்தோகூடப் (ரிலேஷன்ஷிப் டைகிராம்) பார்க்கலாம். அப்படிச் செய்ய நமக்கே நம் செயல்பாடுகள் பற்றி ஒரு முழுப்பரிமாணம் கிடைக்கும். சரியாகப் போய்க்கொண்டிருப்பவை, சரி செய்ய வேண்டியவை பற்றியெல்லாம் எல்லாம் தெரியவரும்.

பரபரப்பாக இருப்பது நேரமேலாண்மை அல்ல. சில சமயங்களில் நிதானமாக இருப்பதும் நல்ல நேரமேலாண்மைதான். அதனால், சாலைகளில் நில்-கவனி-செல் போல, வாழ்க்கையிலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை, செய்ய வேண்டியது, நாம் செய்துகொண்டிருப்பனவற்றை, ஒரு கண்ணோட்டம் செய்தல் – ஸ்டாக் எடுத்தல் செய்யத்தான் வேண்டும். செய்வோம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *