– முகில் தினகரன்
முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோட விரும்புகின்றவர்களுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டியது சகத் தொடர் சாதுர்யம். இது ஒரு கலை என்றேசொல்லலாம். ஆங்கிலத்தில் “ Communication” என்பர்.
அதென்ன சகத் தொடர்பு?… அதுல சாதுர்யம் வேற!… புரியவில்லையே!
ஒரு பெரிய எழுத்தாளர். நாடு முழுவதும் அவருடைய எழுத்துக்கு லட்சக்கணக்கில் வாசகர்கள். அவரது படைப்புக்களைப் பிரசுரிக்க பத்திரிக்கைகள் நான்…நீ…என்று போட்டி போட, பேரும் புகழும் அவரை இமயத்தின் உச்சியில் அமர வைத்திருக்கும் நிலையில், அந்த எழுத்தாளர் தன் சக மனிதர்களுடன்… அண்டை அயலாருடன்…. உறவுக்காரர்களுடன் கொண்டுள்ள அணுகுமுறைஒரு நாகரிகமானதாகவோ…நேய மனப்பான்மையுடனோ… சாந்த முறையிலோ இல்லாது போனதென்றால் அவர் என்னதான் பேரும் புகழும் பெற்றிருந்தும் என்ன பிரயோஜனம்?. அறிவுக்கூர்மை, தெளிவான எண்ணம், தீர்க்கமான செயல்பாடு, ஆக்கமான நோக்கம் எல்லாமும் இருந்தாலும் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையில் தேர்ச்சியில்லையென்றால் எதுவுமே அர்த்தமில்லாது போய்விடுமே!. சகத்தொடர்பில் சாதுர்யம் இல்லாது போகும் பட்சத்தில் ஒருவன் எத்துனை ஆற்றலுடையவனாய் இருந்தாலும், எத்துனை அறிவுடையவனாய் இருந்தாலும் பலன் பூஜ்யமே!
இன்றைய சமுதாயத்தில் தனிமனிதப் பிரயத்தனம் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்றி விடாது. சக மனிதனுடன் அனுசரித்துப் போகும் சாமர்தியமும் வேண்டும். அதைச் சாதுர்யத்துடன் செயல்படுத்தும் திறனும் வேண்டும். அதாவது பிறருடைய மனோபாவத்தையும், மன இயல்பையும், தெளிவாகப் புரிந்து கொண்டு அதை நேர்மறையாக… அனுசரணையுடன் கையாண்டு அதன் மூலம் வெற்றி கொள்வது அல்லது பெற்றவெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் சகத் தொடர்பு சாதுர்யம்.
சாமர்த்தியம் (Talent) என்பது ஒருவித சக்தி ஆனால் சாதுர்யம் (Tact) என்பது ஒருவித திறமை. சாமர்த்தியசாலி மரியாதைக்குரியவனாகிறான். அதே நேரம் சாதுர்யம் உள்ளவன் மதிப்பைப் பெறுகிறான் சாமர்த்தியம் பொக்கிஷம். சாதுர்யம் கையில் உள்ள காசு (Ready Money). என்ன செய்யவேண்டும் என்பது சாமர்த்தியத்திற்குத் தெரியும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது சாதுர்யத்திற்குத்தான் தெரியும். அதனால்தான் சகத்தொடர்புக் கலையில் சாமர்த்தியமாய் இருப்பதைக் காட்டிலும் சாதுர்யமாய் இருப்பதே சரியான முறையாகும்.
பணியிடத்தில் சகத் தொடர்பு
ஒருவன் வேறொருவரின் கீழ் வேலை செய்யும் போதும் சரி…. அல்லது வேறொருவரை வேலை வாங்கும் போதும் சரி.. இந்த சகத் தொடர்புக்கலைதான் முக்கிய இடம் வகிக்கின்றது.
நண்பரொருவர் மிகவும் மனம் நொந்து சொன்னார். “என்னன்னே தெரியலை ..என் கடைல எந்தப் பையனும் மூனு மாசத்துக்கு மேல வேலை செய்ய மாட்டேங்கறானுக!… இதுவரைக்கும் பத்துப் பேருக்கு மேல வந்து போயிட்டானுக..! இதே பக்கத்துக் கடைல எனக்குத் தெரிஞ்சு ஒரே பையன் ரெண்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கான்!”
தொடர்ந்து அவருடன் உரையாடியதில் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நண்பர் சகத்தொடர்புக் கலையில் படு வீக்! என்பது.
தன்னிடம் சம்பளம் வாங்குபவன்தானே?.. தனக்குக் கீழ் வேலை செய்பவன்தானே?… அவன் மேல் ஆதிக்கம் செலுத்த தனக்கு அதிகாரம் இருக்கிறதே!…என்றெல்லாம் எண்ணிக் கொண்டு அவனை விரட்டுவதும்… மிரட்டுவதுமாய் இருந்திருக்கின்றார் நண்பர். அதட்டி…மிரட்டி வேலை வாங்குவதைக் காட்டிலும் கனிவான பேச்சால்… அன்பான அணுகுமுறையால்…எளிதாக வேலை வாங்கலாம் என்பது நண்பரின் புத்திக்கு ஏனோ எட்டாமல் போய்விட்டது. “கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் எப்போதும் அளவாகவே வைத்துக்கொள்… இடம் கொடுத்தால் தலையில் ஏறிக் கொள்வார்கள்…ஜாக்கிரதை!” என்று யாரோ சொல்லிக் கொடுத்த தவறான அறிவுரையை நண்பர் கேட்டு அதன்படி நடந்திருக்கின்றார். பக்கத்துக் கடை உரிமையாளரோ தன் பணியாளரிடம் கண்ணியமான… வழிகாட்டும் முறையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளார். அதனாலேயே அந்தப் பணியாள் அங்கு நிரந்தரமாயத் தங்கிவிட்டார்.
பொதுவாகவே ஊழியர்களை வாங்கி…பயன்படுத்தி…பின் நிராகரிக்கும் பண்டமாக கருதுதல் கூடாது. மாறாக, அவர்களைப் பாதுகாத்து…பேணி வளர்க்க வேண்டிய ஒரு ஆஸ்தியாகவே கருத வேண்டும். மனிதவள மேம்பாடு என்பதே அதுதானே?
சகத்தொடர்புக் கலையில் திறமையற்றமுதன்மையாளர் நிர்வகிக்கும் நிறுவனத்தில் பொதுவாக ஊழியர்கள் தயக்க உணர்வும் அவநம்பிக்கையுமே கொண்டிருப்பர். நம்பிக்கையற்றஒரு சூழ்நிலையில் பணிபுரியும் ஒரு மனிதனின் செயல்பாடும் உள்ளப்பாங்கும் எப்படியிருக்கும்?… நிறுவனத்தின் ஒழுங்கின்மையே ஓங்கி நிற்கும்.
மனம் விட்டுப் பாரட்டிப் பழகுங்க சார்…
இயற்கையாகவே பணியிடத்தில் உற்பத்தி முன்னேற்றம்… இலக்கு… விற்பனைக் குறியீட்டில் ஏற்றம் போன்றவற்றில்தான் கவனமிருக்கும். அதை நோக்கியே அனைவரின் ஓட்டமும் இருக்கும். அந்த ஒரு நிலைப்பாட்டில் மேலாளர் ஆனவர் தன் சகத்தொடர்புக் கலையை சாதுர்யமாகப் பயன்படுத்தினால்தான் எட்ட வேண்டிய இலக்கை எளிதாகப் பிடிக்க முடியும். அவர் எப்படிப் பேசினால் காரியம் நிகழுமோ அப்படி பேசி சாதித்துக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக வேலையில்லாத முகஸ்துதி… காக்காய் பிடித்தல் போன்றவற்றில் ஈடுப்பட்டால் அது அநாகரீகம். உண்மையைச் சொன்னால் அதெல்லாம் நீண்ட நாளைக்கு உதவாத சரக்குகள். இடம் பார்த்து இரண்டொரு பாராட்டு வார்த்தைகளைப் போடும் போது அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். மேலும், கீழ்நிலைப் பணியாளர்கள் தங்களின் உயர் அதிகாரிகளின் அங்கீகாரம்…பாராட்டு போன்றவற்றிற்கு ஆசைப்படுவார்கள். அதனால் மற்றவர்களிடமிருக்கும் நல்ல அம்சங்களைக் கவனித்து… அவற்றைநாசூக்காகப் பாராட்ட வேண்டும். அதற்காக இல்லாதவற்றைஇருப்பதாக கூறி பாராட்டுப் பெறுபவரே நம்மைப் பழிக்கும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது.
மேலே சொன்ன நண்பரிடம் இது போன்றபாராட்டும் குணம் இல்லாததும் அவர் கடையில் பணியாளர்கள் நீண்ட நாள் தங்காமல் போனதற்கு ஒரு காரணம் எனலாம்.
“நம்ம அனுபவமென்ன…. வயசென்ன… இந்த பையன் என்னத்தப் புதுசா சொல்லிடப் போறான்?” என்று நினைத்துக் கொண்டு கீழ் நிலை பணியாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடவே சந்தர்ப்பம் தராதிருப்பது மாபெரும் தவறாகும்.
எமர்ஸன் சொல்லுவார். “நான் சந்திக்கின்றஒவ்வொருவரையும் என்னைவிட உயர்ந்தவராகவே நினைக்கின்றேன்!…அந்த நினைப்பு அவரைப் பற்றி நான் அறிந்து கொள்ள உதவுகின்றது”
வேலை வாங்கும் மனிதத் தொடர்பில் இரண்டு முறையுண்டு. ஒன்று, தண்டிப்பது…. அடுத்தது… இணக்கமாகப் பேசி வேலை வாங்குவது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கண்டிக்கும் சமயத்தில் கண்டிப்பதும், இணக்கமாகப் பேசும் நேரத்தில் அவ்வாறு பேசுவதும்தான் சரியான முறையாகும். மனிதநேயம் இருக்கவும் வேண்டும்… அதைக் காண்பிக்க வேண்டிய தருணத்தில் காண்பிக்கவும் வேண்டும்.
டானிக் வார்த்தைகள்
“வெல்டன் மிஸ்டர்!”
“வெரிகுட் பிரதர்!”
“அற்புதம் சார் அசத்திட்டீங்க!”
“பிரமாதம்யா… கீப் இட் அய்யா!”
இவையெல்லாம் வெறும் பாராட்டு வார்த்தைகள் மட்டுமல்ல… உங்களது சகத் தொடர்த்திறனுக்கு சக்தியூட்டும் டானிக் வார்த்தைகள்.
விமர்சனம் செய்யலாம்…. இடமறிந்து –
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லோருமே நம்மாளுங்கதான். அவர்கள் பல வகை அவர்களை நாம் முதலில் புரிந்து கொள்ள முயல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அவர்களை விமர்ச்சித்துவிட்டு, ‘திருத்துகிறேன் பேர்வழி’ என்று முயற்சியில் ஈடுபட்டால் அது எதிர்மறையாகப் போய்விடும். யோசித்துப் பாருங்கள், தங்களை மற்றவர்கள் குறைசொல்வதையோ…விமர்ச்சிப்பதையோ யாரவது விரும்புவார்களா?. நாலு பேர் மத்தியில் பிறரை நாம் விமர்ச்சிக்க முற்பட்டால் அதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. அது அவர்களுக்கு கோபத்தையேதான் கொடுக்கும். அதனால்… நாம் சொல்ல நினைப்பதை, சொல்ல விரும்புவதை, மறைமுகமாக…குறிப்பாக… சாதுர்யமாகத் தெரிவித்தால் நம்முடைய சக மனிதத் தொடர்பானது வெற்றிகரமானதாக இருக்கும், இல்லையேல்… வெற்றுக்கரமாகத்தான் இருக்கும்.
வீட்டுக்குள்ளிருந்து வெளிப்படுகிறமனிதன் பட்டை தீட்டப்படாத வைரம். அடுத்தவருடன் சாதுர்யத்துடன் பழகி அனுபவம் பெறுகின்றபோதுதான் அந்த வைரம் பட்டை தீட்டப்பட்டு ஒளி வீசுகின்றது.
நீங்கள் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மிளிர வேண்டுமா? உங்கள் சக மனிதத் தொடர்பில் சாதுர்யத்தைக் காட்டுங்கள்…பலன் பரவலாய்.
Leave a Reply