வெற்றியோடு விளையாடு

– ஸ்ரீகிருஷ்ணா

விளையாட்டாக இருங்கள்:

‘கொஞ்சமாவது சீரியஸ்ஸா இரு. எப்பப்பாரு விளையாட்டுதான்.’ ‘விளையாட்டை மூட்டை கட்டி வைச்சிட்டு படிக்கிற வேலைய பாரு’. எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் வார்த்தை. அதாவது நம்மைப் பொறுத்தவரை விளையாட்டாக இருப்பது என்பது பொறுப்பற்ற தனத்தோடு சம்பந்தப்பட்டது என்றாகிவிட்டது. ஆனால் யோசித்துப்

பார்த்தால் எவருமே விளையாட்டில்தான் முழு கவனத்தோடு முழு உழைப்போடு இருக்கிறோம். வெற்றி பற்றிய நினைப்போடு மட்டும் இருக்கிறோம். எனவே இன்று முதல் ‘விளையாட்டாக இருங்கள்’ என்றே சொல்லுங்கள். இப்படி விளையாட்டாய் விளையாட்டிலிருந்து சில பாடங்களை இப்பகுதியில் தொடர்ந்து நாம் படிக்கப் போகிறோம்.

விளையாட்டு என்பது கல்விக்கு தடையாகிவிடக்கூடாது என்று பொதுத் தேர்வுகள் எதிர்கொள்ளும் மாணவர்களை விளையாட்டின் பக்கமே தலைகாட்ட விடுவதில்லை. ஆனால் விளையாட்டில் கூட நாம் கற்க வேண்டியது இருக்கிறது என்பதை உணர்த்தவே இக்குறுந்தொடர்.

ஓட்டப்பந்தயம் – நமக்கு தரும் படிப்பினைகள்:

1. முயற்சி ‘ பயிற்சி ‘ தொடர்ச்சி ‘ வெற்றி

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என்றால் போட்டிக்கு முதல் நாள் மட்டும் பயிற்சி செய்து வெற்றி பெற்றுவிட முடியாது. வெற்றி பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும் தொடர் பயிற்சி இருந்தால் மட்டுமே முதலில் பந்தய தூரத்தை ஓடி கடக்க முடியும். ஆக ஒன்றை அடைய வேண்டும் என்றால் முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும்போதே சிலர் இது நம்மால் முடியாது என்று நின்றுவிடுவது உண்டு. இன்னும் சிலர் பந்தயத்தில் கலந்து கொண்டு மற்றவர்களுக்கும் தனக்கும் உள்ள தூர வித்தியாசம் பார்த்துகூட பாதியில் விலகி விடுவதுண்டு.

உண்மையில் நாம் முயற்சியை நிறுத்துகிறபோதுதான் தோற்றுப்போகிறோம்.

2.வெற்றி கடைசி நிமிடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஓட்டப்பந்தயங்களை பார்க்கும்போது சில சமயங்களில் கவனித்திருப்பீர்கள். ஒரே நிலையில் பலர் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், வெற்றிக்கோட்டை, கடைசி நேரத்தில் காட்டுகிற கூடுதல் வேகத்தில் மைக்ரோ நொடி வித்தியாசத்தில் கடந்து ஒருவர் முதல் பரிசை பெறுவார். எனவே, எந்தக் கட்டத்திலும் துவளாதீர்கள். வெற்றி கடைசி நிமிடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்கிறபோது ஏன் கடைசி வரை முயற்சிக்கக்கூடாது.

3. வென்றால்தான் பரிசு.

நிறைய பேர் வருத்தப்படுவதுண்டு. நான் முன்னேற கஷ்டப்படும்போது யாரும் என்னை அங்கீகரிக்கவில்லை. நான் வெற்றி பெற்றபிறகு எனக்கு உதவ நிறைய பேர் வருகிறார்கள். அதாவது எனக்கு உதவி தேவைப்பட்ட காலங்களில் யாருமே என்னை கைதூக்கிவிடவில்லை என்று. அவர்களுக்காக ஒரு விளக்கம்.

ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருகிறவருக்குத்தான் பரிசு என்பதை மாற்றி கலந்து கொண்டாலே பரிசு என்று அறிவித்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். ஒருத்தரும் வெறியோடு ஓட மாட்டார்கள். ஓடுபவரை பார்த்து, ‘கலந்து கொண்டாலே பரிசு. பிறகு எதற்கு ஓடுகிறீர்கள்?’ என்று நிதானமாக ஓட வைத்துவிடுவார்கள். நிதானமாக ஓடுபவரை பார்த்து மற்றவர்கள் சொல்வார்கள், ‘கலந்து கொண்டாலே பரிசு’ எதற்கு ஓடுகிறீர்கள் என்று சொல்லி மெதுவாக நடக்க வைத்துவிடுவார்கள். வென்றவருக்கு மட்டுமே பரிசு என்பதால்தான் இங்கே பலர் உற்சாகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாமும் வெறியோடு ஓடுவோம். வெற்றிகள் பல பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *