எட்ட நில் பயமே, கிட்ட வராதே

– டாக்டர் எஸ். வெங்கடாசலம்

உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது

இயற்கைக்கு மாறான பலவீனம். அது அச்சமல்ல; அச்சநோய் (PHOBIA). மனிதரிடம் காணப்படும் அச்ச நோய்கள் நூற்றுக்கணக்கில் உளவியல் துறை பட்டியலிட்டுள்ளது.

அச்சநோய் சிங்கத்தையும் சிறு ஆட்டுக்குட்டியாக மாற்றிவிடும். பயத்தால் மன ஆற்றல் தளரும்; நினைவாற்றல் குறையும். பரீட்சை பயங்களால் சுரம், பதட்டம், படபடப்பு, நடுக்கம், வலிப்பு, மூச்சுத்திணறல், மயக்கம், தேர்வு எழுதுவதில் தடுமாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.

ஆறாம் வகுப்பில் பயிலும் இரு சிறுவர்கள் மதன், சுதன். இவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள். தோற்றத்திலும் ஒற்றுமை உள்ளவர்கள். மதனுக்குப் பள்ளிக்கூடத்தின் திசையைக் கண்டாலே பயம். அது தவிர அவனுக்கு காரணம் சொல்ல முடியாத, இனம் புரியாத, வேறு சில பயங்களும் ஏற்படும். அப்போதெல்லாம் அவன் சாப்பிட மறுப்பான். முகத்தில் பதட்டம் முகாமிட்டிருக்கும். அம்மா, அப்பாவால் அவனது மாற்றத்திற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்கமுடியாது. அந்த மாதிரி பயங்கள் தானாகவே குறைந்தால்தான் உண்டு.

சுதனுக்கு எப்போதும் ஒருவித மனச்சோர்வு இருக்கும். ஏதாவது ஒரு பாடத்தை, குறிப்பாக கணிதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் படிப்பே வேண்டாம் என்பான். மனம் சோர்ந்து முகம் இறுகி வாடிய நிலையில் இருக்கும்போது அவனைத் தேற்றுவது பெரும் பாடாகிவிடும். சில சந்தர்ப்பங்களில் வயதுக்குரிய உற்சாகத்தோடு வேடிக்கை, விளையாட்டுகளில் ஈடுபடாமல் மூலையில் சோகமாய் அமர்ந்திருப்பான். அதுபோன்ற மனச் சோர்வுக்கு எந்தக் குறிப்பிட்ட காரணமும் இருப்பதில்லை. ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் இந்த இரு குழந்தைகள். ஆனால் இருவரின் மனங்களும் இருவேறு உலகங்கள்.

ஒரு முறை இக்குழந்தைகளை எங்களிடம் சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வந்தனர். முழுமையாக ஆய்வு செய்தோம். மதனிடம் ஏற்படும் காரணத்துடன் கூடிய பயத்திற்கு ‘மிமுலஸ் (MIMULUS)’, காரணமின்றி வரக்கூடிய பயத்திற்கு ‘ஆஸ்பென் (ASPEN)’ என்ற இரண்டு மலர் மருந்துகள் வழங்கினோம். சுதனிடம் காணப்படும் காரணத்துடன் கூடிய சின்னச் சின்ன மனக் கவலைகளுக்காக ‘ஜென்ஷியன்(GENTIAN), காரணமேயில்லாமல் திடீரென கருமேகங்கள் வானில் திரள்வது போல மனதில் கவலை மேகங்கள் திரள்வதற்கு ‘மஸ்டார்டு(MUSTARD)’ என்ற இரு மலர் மருந்துகளும் வழங்கினோம். மதனிடம் ஒரே மாதத்தில் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் சுதனிடம் இரண்டு மாதத்தில்தான் முன்னேற்றம் தெரியத் துவங்கியது. எனினும் இருவரின் மனங்களிலும் நல்ல மாற்றங்கள் முழுமையாக நிகழ நான்கு மாதச் சிகிச்சை தேவைப்பட்டது.

இன்றைய உலகில் குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போலவே, குடும்பச்சூழல், சுற்றுப்புறச் சூழல் காரணமாக சிக்கலான மனநலப் பிரச்சனைகள் உருவாகின்றன. மன அழுத்தம், மன இறுக்கம், விரக்தி, தற்கொலை உணர்வு, அதீத கோபம், போன்றவை குழந்தைகளையும் தாக்குகின்றன.

தாயின் கருவறையில் வளரும் போது 5ஆம் மாதத்திலேயே குழந்தைகளுக்குக் கேட்புத் திறன், கிரகிப்புத் திறன் உருவாகி விடுகின்றன. பூட்டிய அறைக்குள் இருப்பவர்கள் அருகிலுள்ள புற உலகின் ஓசைகளையும் இயக்கங்களையும் அறிவது போல, தாயிடமும், தாயின் அண்மையிலும் நிகழக்கூடியவற்றை உணர்ந்தறிகின்றன. கர்ப்பிணித்தாய் நல்ல இசையைக் கேட்டும் நல்லுணர்வுகளோடு உரையாடியும் மகிழ்வோடிருக்கும் நிமிடங்களில் கருவிலுள்ள குழந்தையும் அதை அனுபவிக்கிறது.

கர்ப்பிணித் தாய் கவலைப்படும்போதும், கண்ணீர் வடிக்கும்போதும், கையறு நிலையில் மனம் வாடும்போதும், அவமானத்தால் துடிக்கும் போதும் கருவின் குழந்தையும் சேர்ந்தே அனுபவிக்கிறது. தாயின் பயமும், பரிதாப நிலையும், பாதுகாப்பின்மையும் குழந்தையையும் தொற்றுகிறது. பிறப்பதற்கு முன்பே மனநலம் பாதித்து விடுகிறது. இதனால் சிலபல குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளை ஆராயும்போது தாயின் கர்ப்பகாலம் வரை நுணுகி ஆராய வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுகுறித்து புதுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கருவிலுள்ள குழந்தை நல்ல இசையைக் கேட்கும்போது அதன் அறிவுத் திறனும் மற்ற திறமைகளும் மேம்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. சிட்னி நகரிலுள்ள ராயல் மருத்துவமனையில் 60 கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இனிமையான இசை, நல்ல சொற்பொழிவுகள் கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்பும் நட்பும் இணக்கமும் நிறைந்த சூழலில் அவர்கள் பராமரிக்கப்பட்டனர்.

அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை மூன்று ஆண்டுகள் கழித்து ஆய்வுகள் செய்த போது அறிவுத் திறன்களும், ஆர்வங்களும், பண்பு நலன்களும் மற்ற குழந்தைகளைவிடச் சிறப்பாக உயர்ந்து காணப்பட்டன.

குடிகாரக் கணவன்மார்கள், குணக்கேடுள்ள கணவன்மார்கள் தங்கள் மனைவியர்களிடம் கர்ப்பகாலத்தில்கூட நாகரிகமாக நடந்துகொள்வதில்லை. இதனால் மனிதனை வீழ்த்தும் மாபெரும் எதிரியான பயம், கவலை, நோய் அனைத்துமே கர்ப்ப காலத்தில் அவர்களை முற்றுகையிடுவதால்…. கூனிக்குறுகி குலை நடுங்கிக் கிடக்கும் கர்ப்பிணித் தாய்களின் வயிற்றிலிருந்து மூளை வளர்ச்சி குன்றிய, மனநலம் குன்றிய, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது.

மன வலிகள் வாழ்நிலையாலும் சூழ்நிலையாலும் உருப்பெற்று உக்கிரமடையும்போது மனித மனம் நிலைகொள்ள முடியாமல் தத்தளிக்கிறது; பேதலிக்கிறது. மருத்துவர்கள் என்ற முறையில் நோயாளிகளின் மனதையும் ஸ்கேன் செய்வதைப் போல ஊடுருவி அறியும் வழிமுறை அறிவை ஹோமியோபதியும், பாச் மலர் மருத்துவ முறையும் எங்களுக்கு வழங்கியுள்ளன.

பெரும்பாலான உடல் நோய்களுக்கும் கூட மனபாதிப்பே மூலகாரணம்; உடலில் நோய் தோன்றுவதற்குச் சிறிதுகாலம் முன்னரே மனதில் தோன்றிவிடுகிறது என்ற அரிய உண்மை டாக்டர் ஹானிமன் மற்றும் டாக்டர் எட்வர்டு பாச் இருவரது மருத்துவங்களிலும் அடிநாதமாய் இழையோடும் சீரிய பார்வை.

இந்த மருத்துவ முறைகளைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட எத்தனையோ பேர்கள் பல காரணங்களுக்காக நேரில் வரமுடியாமல் பல திசைகளிலிருந்து மடல்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சில கடித உறைகளுக்குள் கடிதங்களுடன் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இருக்கும். பெரும்பாலான கடிதங்கள் தனிமனிதருக்கும் குடும்பத்திற்கும் இடையிலான அல்லது தனிமனிதருக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான முரண்பாடுகளிலிருந்து தோன்றிய மனப் பிரச்சனைகள், மனத் துயரங்கள் பற்றியதாகவே இருக்கும்.

பெண்மனம் அறியாத, பண்பற்ற, கல்மனம் கொண்ட கணவன்மார்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பதாக வரும் பெண்களின் மடல்கள் மருத்துவத்தையும் கடந்து இந்தச் சமூகத்தைச் செப்பனிட வேண்டிய விஷயங்கள் ஏராளமாய் உள்ளன என்பதை உணர்த்தும். எங்களை வெகுவாகப் பாதித்த கடிதங்களில் ஒன்றை நீங்களும் வாசியுங்கள்:

“கடவுளுக்குச் சமமான மருத்துவத் தம்பதியருக்கு வணக்கம். கணவர் குடிகாரர், கொடுமைக்காரர், மகன் மனநிலை சரியில்லாதவன் என்று முதல் முதலில் தங்களைத் தொடர்பு கொண்ட நாளில் உடனடியான தங்களின் பதில் கிடைத்தது. அதன் மூலம் எனக்கு நம்பிக்கை பிறந்தது.

தங்கள் பதிலில் சிறு வெளிச்சம் கிடைத்தது. இருட்டில் தவித்த எனக்கு சிறு தீபம் கிடைத்தது. குடியை நிறுத்த மருந்து தந்தால் சாப்பிட மாட்டார் – என்ன செய்வது? என்று கேட்டபோது மாற்றுவழிகள் சொன்னீர்கள். குடிப்பழக்கம் குறைந்தால் கொடுமை செய்யும் குணமும் குறைந்து போகும் என்று எண்ணினேன். ஓரளவு அவரது குடிப்பழக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அலுவலக சகவாசம் அவரை நிர்ப்பந்தமாய் கெடுத்துக் கொண்டிருந்தது. எல்லோருக்குமான சிகிச்சையை இறைவன்தான் அருள முடியும். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்”.

குடிநோயிலிருந்து மனிதனை மீட்க ஹோமியோபதி மருத்துவ முறையிலும், பாச் மலர் மருத்துவ முறையிலும் சிறப்பான மருந்துகள் உள்ளன. ஆனால் குடிப்பழக்க அடிமைகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைத்தால் முழு நன்மையடைய முடியும். தினசரிப் பழக்கமாய், ஒருநாள் நிறுத்தினால்கூட (Withdrawel Symptoms) விலகல் அறிகுறிகள் தோன்றக்கூடிய குடிகாரர்களுக்கு ‘வால்நட் (Walnet)’ நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று குடியை நிறுத்துவதற்கு எதிர்கால தேதி, நேரம் நிச்சயித்துவிட்டு, அந்த நாள் வந்ததும் மீண்டும் குடிப்பவருக்கு ‘ஸ்கிளெராந்தஸ்(SCLERANTHUS) ‘ பெருமைக்காகக் குடிப்பவருக்கு ‘வைன் (VINE) ‘, மாதச் சம்பளமோ போனஸ் தொகையோ, கையில் பணமிருந்தால் மது அருந்தி மகிழும் மனநிலை உள்ளவருக்கு ‘வைல்டு ரோஸ் (WILD ROSE)’ குடியைத் தானாக நிறுத்திவிட்ட பிறகும், குடிப்பவர் அருகிலிருக்கும் தருணத்தில் கட்டுப்படுத்த முடியாத வேட்கை ஏற்பட்டு மீண்டும் குடிப்பவருக்கு ‘செர்ரிப்ளம் (CHERRY PLUM)’ அவமானங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள், இழப்புகளைத் தாங்கிக் கொள்வதற்காகக் குடிப்பவருக்கு ‘அக்ரிமோனி (AGRIMONY)’ பயத்தைப்போக்கி எதிரிகளை எதிர்கொள்ளக் குடிப்பவருக்கு ‘மிமுலஸ் (MIMULUS) ‘ போன்ற மலர் மருந்துகள் நம்பகமாகப் பலனளிக்கின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தில் “நகஸ்வாமிகா சல்பியூரிக் ஆசிட், குவார்க்கஸ் கிளாண்டியம், காப்சிகம், அவீனா சடீவா, அசாரம்,” போன்ற மருந்துகள் ஆழ் மனதிலுள்ள மதுவேட்கையை அகற்றி உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்துகின்றன. மனிதகுலம் கண்டறிந்த மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதியும், மலர் மருத்துவமும் மட்டுமே மனிதனை முழுமையான கண்ணோட்டத்தில் (HOLISTIC APPROACH) ஆராய்ந்து மருந்தளிக்கின்றன.மனித மனங்களை மறுசீரமைப்பு செய்தால் மனிதர்கள் வாழும் உலகமும் புதியதாய் மலரும் அல்லவா! Reconstruct the World by reconstructing the minds என்று அறை கூவுகின்றன இம்மருத்துவங்கள்.

இன்று உலகை அச்சுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்கு ஹோமியோபதியிலுள்ள “ஆர்சனிகம் ஆல்பம் 30 இ’ என்ற மருந்தினை இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் 04.09.2009 அன்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மனிதகுலத்தை மரண விளிம்பிலிருந்து காப்பாற்ற இயற்கையன்னை எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கியிருக்கிறாள்.

இனி….. பாதியில் நின்று போன அந்தப் பெண்மணியின் கடிதத்தைத் தொடருங்கள், “தங்களது சிகிச்சை மருந்துகளின் கண்கூடான பலனாக…. மனநிலை சரியில்லாமல் இருந்த என் மகனின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பள்ளிக்கூடம் போய் வருகிறான். எனது மனச்சோர்வும் பிரச்சனைகளும்கூட மருந்துகள் சாப்பிட்ட பின் குறைந்துள்ளன. மூட்டுவலி லேசாக மட்டுமே உள்ளது. அதனால் பரவாயில்லை. தற்போது அருகிலுள்ள ஒரு மில்லில் வேலைக்குப் போகிறேன்.

இப்போது என் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும் ஒரே எண்ணம்….. கணவர் என்றபெயரில் அராஜகம் செய்பவரை விரட்டிவிட்டு பையனுடன் தனித்து வாழ வேண்டும் என்பதுதான். மருத்துவர்கள் என்ற முறையில் தங்களால் மட்டுமே இந்நிலையை புரிந்து ஏற்க முடியும். மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள். சாகும்வரை இப்படியே இரு. அதுதான் தர்மம் என்பார்கள். நான் வாழ விரும்புகிறேன். என் முடிவு சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடாது என்பது எனக்குத் தேரியும். ஆனால் நரகத்தலிருந்து வெளிவந்துவிடுவேன் அல்லவா?

என்றும் வேண்டும் ஆசிர்வாதம் (கையொப்பம்)”

இதற்கு முந்தைய எல்லா கடிதங்களும் எங்களது பதிலையும் மருந்துகளையும் எதிர்பார்த்து எழுதப்பட்டவை. இக்கடிதம் அப்படியில்லை. நாங்களும் பதில் எழுதவில்லை. “ஆம் பெண்ணே! நீ வாழப் பிறந்தவள்! வாழு!!” என்று மனதிற்குள் வாழ்த்திக் கொண்டோம்.

2 Responses

  1. Ramesh

    Dear Sir,
    My father has Bipolar Disorder (i.e) Anxiety and Depression for the past fifteen years. He is taking English medicines for all these years but it is giving only temporary recovery. My father age is 52 and he has tremors and he is also suffering from obesity problem. Now I came to know that Acupuncture and Flower medicines(Malar Maruthuvam) are good in curing various diseases. I want to know whether the acupuncture and flower medicines will cure bipolar disease. I look forward to your reply.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *