– ருக்மணி பன்னீர்செல்வம்
பொறுமை கடுகினும் சிறிது
நம்முடைய தொழில் வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, முன்னேற்றத்தை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டிகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுவது இயல்பு. இவற்றை நாம் தவிர்க்கவும் இயலாது,
தடுக்கவும் முடியாது. ஆனால் அவற்றை சமாளித்து எதிர் கொண்டு மேலேறிச் செல்வதில்தான் வெற்றியின் இரகசியம் அடங்கிக் கிடக்கின்றது.
நம் செயல்பாடுகளைக் காணுகின்ற சமூகம் நம்மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றது. இவற்றில் ஆக்கப்பூர்வமாய் நம்மை செயல்பட வைக்கும் விமர்சனங்களும் உண்டு. தாக்கி நம்மை நிலை கலங்கச் செய்யும் விமர்சனங்களும் உண்டு. இந்த விமர்சனங்கள் பல நேரங்களில் நம்முடைய செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாய் அமைந்துவிடுவதை பலரும் அனுபவித்திருக்கலாம்.
தேசத் தந்தையின் படமிருக்கும் போஸ்டராய் இருந்தாலும் கிழித்து தின்கின்ற மாட்டிற்கோ, கழுதைக்கோ தெரியப் போவதில்லை அது மகாத்மாவின் படம் என்று. அப்படியே தெரிந்தாலும் அதைப்பற்றி அவை கவலைப்படவும் போவதில்லை. மற்றவர்களை விமர்சிப்பவர்களும் அப்படித்தான். யாரையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. அதுமட்டுமில்லை, மகாத்மா என்பதற்காக அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்கின்ற ஜனநாயகச் சிந்தனையும்கூட யாரும் யாரையும் விமர்சிக்கலாம் என்கின்ற நிலைக்கு காரணமாகும்.
போட்டிகளோ, முட்டுக் கட்டைகளோ, விமர்சனங்களோ எதுவுமே தனக்கு ஏற்படக்கூடாதென்று யாராவது கருதுகின்றார்கள் என்றால் அவர்கள் இன்னும் குழந்தை மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள் என்று அர்த்தம். நம்முடைய முன்னேற்றத்திற்கு நண்பர்களும் சாதகமான சூழ்நிலைகளும் உதவுவதைக் காட்டிலும் நம்முடைய எதிரிகளும் பாதகமான சூழ்நிலைகளும்தான் உதவுகின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.
போட்டியோ, எதிர்ப்போ, சவால்களோ இல்லையென்றால் வாழ்வில் எதிலுமே சுவாரசியமோ, ஈடுபாடோ இல்லாமல் போய்விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டைவிட்டு வெளியே வருகின்றபோதே போட்டிகளை எதிர் கொள்கின்ற தன்னம்பிக்கையுடனும், விமர்சனங்களை பக்குவமாய் கையாள்கின்ற மனப்பான்மையுடனும், முட்டுக்கட்டைகளை தாண்டியோ அல்லது தூக்கியெறிந்து விட்டோ நடக்கின்ற துணிச்சலுடன் வருவதுதான் மிக முக்கியம்.
நம்முடைய பணிக்கோ அல்லது தொழிலுக்கோ போட்டிகள் என்பது முதலில் சக பணியாளர்கள், சக தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோரிடமிருந்து ஏற்படும். இவை நமக்கு நேரடியாய் தெரிந்திருக்கும். பல நேரங்களில் இரகசியமாய் நடந்து திடீரென வெளிப்படும். இவற்றை சமாளிப்பதென்பது முதலில் சிரமமாய் இருந்தாலும், இயல்பாக அவற்றை எதிர்கொள்வதும் அதே நேரத்தில் அதி கவனமாய்ச் செயல்படுதலும் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே முதலிடத்தை அடைவதற்கான அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளுவதும்தான் போட்டிகளால் நாம் எந்த வகையிலும பாதிக்கப்படாமல் இருப்பதற்கு வழிமுறைகளாகும்.
போட்டிகளும், தடைகளும், சவால்களும் ஏற்பட ஏற்படத்தான், நம் தொழிலினை புதுமைப்படுத்துவதற்கான வழிமுறைகளும், புதிய புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும். இவையே நமக்கு உந்துசக்தியாய் இருந்து நம்மை செயல்பட வைக்கும். நம்முடைய தன்னம்பிக்கையின் எல்லையையும் விரிவுபடுத்தும்.
நமக்கோ, நம் தொழிலுக்கோ சிறிதும் தொடர்பில்லாதவர்கள், தொடர்பில்லாத நிகழ்வுகள் கூட பல நேரங்களில் நமக்கு போட்டியாகவும் நம் வளர்ச்சிக்குத் தற்காலிகத் தடையாகவும் சில நேரங்களில் நீண்டகால தடையாகவும் அமைந்துவிடுவதுண்டு.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஓரிருவருக்கு பன்றிக்காய்ச்சல் போன்று அபாயகரமான நோயோ அல்லது விலங்குகளுக்கு பறவைக்காய்ச்சலோ ஏற்பட்டு விட்டதென்றால் நோய் வேகமாய பரவுகிறதோ இல்லையே தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ள நோய்கள் என்பதால் அந்தச் செய்தியானது மிக வேகமாக பரவுகிறது.
இந்தச் செய்திகளை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு எச்சரிக்கை செய்கின்ற பேரில் சில நேரங்களில் அதீதமாய் மக்களை பயமுறுத்தி விடுவதுண்டு.
மேலோட்டமாய் பார்த்தால் இதனால் என்ன நட்டம் என்று தோன்றும். ஆனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றதென்று பாருங்கள். முதலில் அன்னியச் செலாவணி வரத்து மிக வேகமாய் கீழ்நிலை நோக்கித் தள்ளப்படும். நம் நாட்டிலிருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்கள் வரவேற்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டு தேக்கமடையும். பெருமளவில் செலவினையும் நட்டத்தையும் உண்டாக்கும். அந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் அவர்களை நம்பியிருக்கும் பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப் படுவார்கள்.
தொழில் நிமித்தமாய் வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கும்போது நம்முடைய பயணமானது தடைசெய்யப்படும். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிடும். அல்லது சில காலத்திற்கு நின்று விடும். இதனால் நேரடியாய் பலரும் மறைமுகமாய் பலரும் பாதிக்கப் படுவார்கள்.
இந்நிலை சிறிது காலம் மட்டுமே நீடித்தாலும் இதன் தாக்கங்கள் சற்று கடுமையாகவே இருப்பதை சார்ந்தவர்கள் அனைவரும் உணர்வார்கள். எனவே முன்னெச்சரிக்கையாய் இருப்பதென்பது எல்லாவற்றிலும் சாத்தியப்பட்டு விடுவதில்லை. அப்படிப்பட்டவற்றை மனவலிமையால்தான் எதிர்கொள்ள வேண்டும்.
போட்டிகள், சவால்கள் உண்டாவதை உணர்ந்தபின்னரும் விரைந்து நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாய் இருந்துவிட்டு பிறகு வேதனைப்படுவது யாருக்குமே நல்லதல்ல.
பொருத்தமில்லாததற்கும்கூட சிலர் ‘பொறுமை கடலினும் பெரிது’ என்று வியாக்கியானங்கள் பேசிக்கொண்டு ஆமை வேகத்தில் செயல்படுவார்கள். விரைந்து செயல்பட வேண்டியவற்றிற்கும் வேகம் காட்டாமல் மெத்தனமாய் யார் செயல்பட்டாலும் அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்பதற்கு சரித்திரம் பல சான்றுகளை இன்றைக்கும் எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்கின்றது. வரலாற்றின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக வீழ்ச்சியுறுவார்கள் என்பது எத்தனை உண்மை.
இரும்புத்திரைப் போட்டு ஆட்சி நடத்தும் நம்முடைய அண்டை நாடான சீனா, நம் நாட்டின் எல்லைப் பகுதிகளிலே ஊடுருவி வருவது தெரிந்தும் உடனடியாய் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு மெதுவாய் இயங்குவதால் இன்றைக்கு எல்லைப்பகுதிகளில் ஆயுதங்களை குவித்து வருகிறது, சீனா. எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராத விதமாகவோ போர் மூளுமானால் நம் நாட்டில் எத்தகைய உயிரிழப்புகள் உண்டாகும்? பொருளாதாரம் எந்த அளவிற்கு வீழ்ச்சியுறும்? மீண்டெழுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? சாதாரண மக்களின் வாழ்வு எந்த அளவிற்கு கேள்விக்குள்ளாகும்? என்பதையெல்லாம் சற்று யோசித்துப் பாருங்கள். என்னதான் நம்முடைய இராணுவம் பதிலடி கொடுக்க எல்லாவகையிலும் தயார் நிலையில் இருந்தாலும் இழப்புகள் ஏற்படும் என்பது கண்கூடான உண்மைதானே.
ஏற்கனவே அயல்நாட்டுக் கடன்களைப் பெறுவதில் சாதனை படைத்து, பெரும் கடனாளியாகி வரும் நம் நாடு என்னவாகும்? போர் நிகழ்வுகள், போரின் விளைவுகள் இவையெல்லாம் பல்லாண்டுகளுக்கு மீளமுடியாத துன்பத்தில் அல்லவா நம்மை ஆழ்த்திவிடும்.
போட்டிகளை, சவால்களை சின்ன அளவில் இருக்கும்போதே எதிர்கொண்டு முறியடிக்கத் தயாராவதுதான், தனிப்பட்ட நிலையிலும் சரி, தேசிய அளவிலும் சரி, சிறந்த ஆளுமைப்பண்பின் அடையாளம் ஆகும்.
Leave a Reply