நினைவு நல்லது வேண்டும்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்

வாத்துக்களுடன் நீந்தலா வானத்தில் பறத்தலா?

வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன், வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக்கூடாது.”

இவை சுய முன்னேற்றம் குறித்து எழுதும் அல்லது பேசும் ஒருவர் சொன்ன சொற்களல்ல. இப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாக ஓர் இதழில் படித்தேன். எவ்வளவு உண்மையான வரிகள்!

நம்முடைய பொழுதுகள் எவ்வாறு செலவாகிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியம் யாருடன் செலவாகிறது என்பதற்கும் உண்டு.

ஒபாமாவின் இந்தச் சொற்கள் மனத்தில் உழன்று கொண்டே இருந்தன.

வானத்தில் பறப்பது என்பது வல்லூறுகளுக்கு இயல்பாக நிகழ்வது. நீரில் ‘குவாக்’ சொல்லிக்கொண்டே கூட்டமாக நீந்துவதுதான் வாத்துக்களின் வாழ்க்கை முறை. நம் முன்னே இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று வானத்தில் பறப்பது; மற்றொன்று வாத்துக்களுடன் நீந்துவது.

வானத்தில் பறப்பது என்பது சுலபத்தில் கைகூடி விடாது. அதற்கு உழைப்பும் இடைவிடா முயற்சியும் வேண்டும். முதலில் அச்சத்தை வெல்ல வேண்டும்; விழுந்தாலும் பரவாயில்லை என்ற உறுதி வேண்டும்; தரையில் நடக்கும்போது இருக்கும் பாதுகாப்பை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நீந்துவது என்பதும் சுலபமானதில்லை. மேற்கூறிய அனைத்தும் நீச்சல் கற்பதற்கும் வேண்டும்தான். ஆனால் வாத்துக்கள், அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலில் நீந்துவதில்லையே! சலனமற்று இருக்கும் சாக்கடை, குளம், குட்டைகளில் நீந்தும். நினைத்தால் கரையேறிக் கொள்ளும் வாய்ப்போடு மட்டுமே அவை நீந்துகின்றன!

ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வாத்துக்களுடன் நீந்துவதுதான் வசதியாக இருக்கிறது நமக்கு! பெரும் முயற்சி எதுவும் தேவையற்ற வாழ்க்கை! வாத்துக்களுடன் நீந்த ஆரம்பித்தவுடன் முதலில் நமக்கு அவைகளால் ஓதப்படும் செய்தியே, ‘வானத்தில் பறப்பதே வீண்’ என்ற கருத்துத்தான்.

‘கீழே விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா?’ என்று ஒரு வாத்து கேட்கும்; “விமானமே கடலுக்குள் விழுகிறது; வல்லூறு விழ எவ்வளவு நேரமாகும்?” என்று ஒரு வாத்து, நம் காதுபடவே இன்னொரு வாத்திடம் சொல்லும். “அது மட்டுமல்ல! நமக்கு இருக்கும் கம்பீரமும் அழகும் வல்லூறுக்கு இருக்குமா?” என்று அந்த வாத்து கேள்வியாகவே பதில் சொல்லும். “காற்று முழுக்கப் புகையும் புழுதியும் தான்! பறக்கும்போது அத்தனை அழுக்கும் உடலில் படும்; உள்ளேயும் போகும். நீரிலே இருக்கும் சுகமும் தூய்மையும் கிடைக்குமா?” என்று சாக்கடையில் புழுவைத் தேடிக் கொண்டே இன்னொரு வாத்து சொல்லும்.

வாத்துக்களிடம் வல்லூறைப் பற்றிப் பேசிப் பயனில்லை. புரிய வைக்கவும் முடியாது; புரிந்து கொள்ள அவை முயற்சியும் செய்யாது. நாம் யாருக்குத் தோழனாக இருக்கப் போகிறோம்? யாருடைய தோழமை நம்மை வானத்தில் பறக்க வைக்கப் போகிறது? இதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

“உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று நான் சொல்கிறேன்?” என்ற பழைய மொழியின் மறுவடிவம்தான் ஒபாமாவின் இந்தக் கருத்தும்; ஆனால் சற்றே ஆழமாக!

“உன் நண்பனே உனக்கு அடையாளமாகிறான். எனவே நல்ல நண்பனுடன் சேர்” என்பது பழைய மொழியின் கருத்து.

“உன் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இரு; அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே, நோக்கத்தை நோக்கி செயல்படு.” என்று சற்றே மாறுபட்ட சிந்தனையைக் கொண்டது ‘வாத்தும், வல்லூறும் ‘ கருத்து!

ஒரே நோக்கம் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது போல் சுகம் ஏதுமில்லை! அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பதுதான் அரிது; அப்படி அடையாளம் உடையவர்கள் கண்ணில் பட்டால், அந்த நட்பை உருவாக்கி பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

சிக்கல் எங்கே வரும் என்றால், என்ன நோக்கம் கொண்டவர்கள் இப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்பதில்தான்! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் ‘Evil brings men together” என்றார். தீய நோக்கம் கொண்டவர்களே எளிதில் நண்பர்களாகிறார்கள்; எளிதில் பகையும் கொள்கிறார்கள். தூய நோக்கம் கொண்டவர்கள் பொதுவாகத் தனித்தனி தீவாகவே செயல் படுகிறார்கள். அவர்கள் இணைந்து செயல்படும் போதுதான் இருவருமே வானத்தில் பறக்கும் சிறகுகளைப் பெறுகிறார்கள்.

“உண்மையான நண்பனை இரு கைகளாலும் பிடித்துக்கொள்” என்று நைஜீரிய நாட்டுப் பழமொழி சொல்கிறது. வாழ்வின் வெளிச்சம் அவர்களால்தான் வருகிறது. உடன் இருப்பவரைத் தேர்ந்தெடுப்பதில் அல்லது விலக்குவதில் நாம் எடுக்கும் முடிவுகளே, பல நேரங்களில் நமது விதியை நிர்ணயிக்கின்றன.

காரணமேயில்லாமல் சிலவற்றின் மீது வெறுப்புடன் இருக்கும் சிலரை நீங்கள் கண்டிருக்கக்கூடும், நமக்கு அந்தப் பொருள் அல்லது செயல் நல்லதாக, தேவையானதாகக் கூடத் தெரியும். ஆனால், உடன் இருந்துகொண்டு, “இது தேவையில்லாதது; நன்றாக இருக்காது; முடியாது; பயன்படாது; உருப்படாது” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

நண்பர் ஒருவர் ஓர் அனுபவத்தைச் சொன்னார். ஊட்டிக்குச் செல்பவர்கள் பொதுவாக எதை வாங்கி வர விரும்புவார்கள்? நீலகிரி தைலமும், தேயிலைப் பொட்டலங்களும்தான். வீட்டு உபயோகத்திற்கு இல்லாவிட்டாலும், உறவினர்களுக்கு, நண்பர்களுக்குத் தருவதற்காகவேனும் இப்படி வாங்குவார்கள். அலுவல் நிமித்தம் ஊட்டிக்கு அவர் போயிருந்த போது, உடன் வந்த நண்பர் ஒருவர் இவரை வாங்கவிடவே இல்லை. எந்தக் கடைக்குப் போனாலும் அவரே கையில் வாங்கிப் பார்த்து, “இது நன்றாயில்லை. இதைவிட நல்லதாக சென்னையிலேயே கிடைக்கும்.” என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி இவரைத் தடுத்துக் கொண்டேயிருந்தார். எதையும் வாங்க விடாமல் தடுக்கிறாரே என்று, “நீங்கள் இருங்கள்! நான் சும்மா கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்”, என்று கிளம்பினாலும் விடவில்லை. “போரடிக்குது. நானும் வருகிறேன். ஊட்டியில் கடைகளைப் பார்த்தாற்போல் இருக்கும்”, என்று சொல்லி, கூடவே வந்து எதையும் இறுதிவரை வாங்கவே விடவில்லை. “மலையைவிட்டு இறங்கிய பின்னர் தான் அந்தத் தொல்லை விலகியது. இல்லாவிட்டால் குன்னூரில் ஏதாவது வாங்கிவிடுவேன் என்று பயந்தார் போல!” என்று சிரித்துக் கொண்டே சொன்ன நண்பர் தொடர்ந்து சொன்னார், “அது ஒரு மன நோய்தான்”! அவர் எதுவும் யாருக்கும் வாங்கித் தரமாட்டார். வீட்டுக்கும் வாங்கிக் கொண்டு போக மாட்டார்; ‘இதெல்லாம் வீண் பந்தா’ என்பார். அதனாலேயே, உடன் இருப்பவர் ஏதேனும் இப்படி வாங்கினாலும் அவருக்கும் பிடிப்பதில்லை. என்ன செய்வது? பழகின தோஷத்துக்காக பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது”.

இப்படி, தன் விருப்பத்தை மட்டுமே பேசி நம் மீது திணிப்போரை நாம் கண்டிப்பாக அறிந்திருப்போம். நடக்க முடியாதவர் ஓட்டப்பந்தயமே கிரிமினல் வேஸ்ட் என்று விமர்சனம் செய்வார். படிக்க விரும்பாதவர், “படிச்சவங்க என்ன கிழிச்சிட்டாங்க” என்பார்; ரசிக்கத் தெரியாதவர், “கவிதை எழுதுகிறவர்களை நாடு கடத்த வேண்டும்” என்பார்.

தன்னால் என்ன இயலாதோ, அதுவே வீண் என்று பேசுபவர்களின் உறவு, நம்மையே பள்ளத்தில் தள்ளிவிடும். இப்படிப்பட்டவர்கள், கூடுமானவரை நமக்கு எந்தத் திறமையும் சேர்ந்துவிடக்கூடாது; வாய்ப்புகள் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருப்பார்கள்; ஏதோ ஒரு விதத்தில் நம்மீது ஆளுமை செலுத்தவே எண்ணுவார்கள். “பழகின தோஷத்திற்காக” பொறுத்துக் கொண்டால் நம் தனித்தன்மை என்னாவது?

“அட்டை” என்றொரு உயிரினம் உண்டு. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்! சிலர் பார்த்திருப்பீர்கள்! சிலர் அனுபவித்தும் இருக்கக்கூடும். உடம்பில் ஒட்டினால் போதுமான இரத்தத்தை உறிஞ்சும்; போதும் என்று அதுவாக உணர்ந்தால்தான் விடும்! அதைவிட வியப்பு, அது இரத்தத்தை உறிஞ்சும்போது வலியே தெரியாதாம். ‘மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்’ என்ற பட்டியலில், இந்த அட்டைகளின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

ஒரு நோக்கத்துடன் இவர்கள் நம்முடன் பழகுகிறார்கள் என்பதே நமக்குத் தெரியாது. இன்னும் சொல்வதானால், இவர்கள் பழக்கம் தொடக்கத்தில் மனதுக்கு இதமாகக்கூட இருக்கும். நமக்கே சலிப்பு வந்து விலக்க நினைத்தாலும் உருகி உருகிப் பேசி ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். நம்முடைய உழைப்போ அல்லது பணமோ அல்லது அனுபவமோ அல்லது நமது தொடர்புகளோ கூட, மெதுவாக அவர்களால் உறிஞ்சப்படும், ‘போதும்; அவ்வளவுதான் முடியும்’, என்று அவர்களே விலகியபோதுதான், நாம் இரத்தம் சிந்தி நிற்பதையே உணர முடியும். முன்கூட்டியே இவர்களின் ‘திறம் தெரிதல்’ என்ற ஆற்றல் நமக்கு வேண்டும்! அப்போதுதான் நமது செயல்களை ஒருமுனைப்படுத்த முடியும்.

‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பது நமது வழக்கத்தில் இருக்கும் பழமொழிதான். வள்ளுவனே இதை ஒரு குறளில் சொல்கிறான்.

“வலிஇல் நிலைமையான் வல்உருவம், பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.”

இந்தக் குறள் வரும் அதிகாரம் “கூடா ஒழுக்கம்”, தவம் செய்பவன் மனத்தில் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்று இந்தக்குறள் சொல்கிறது; ஆனால், இந்தக் குறளையும் பொருளையும், நாம் எங்கும் பொருந்திப் பார்க்கலாம்.

உண்மையான குணநலனை வெளியே காட்டிக் கொள்ளாமல் பழகுபவர்களும் உண்டு. இவர்கள் நம்மிடம் அப்பாவிபோல் நடப்பார்கள். “இந்தப் பூனையும் பால் குடிக்குமோ’ என்ற பழமொழி இவர்களுக்குப் பொருந்தும். நம்மிடம் இருக்கும் இரக்க குணம்தான் அவர்கள் நம்மை இயக்கும் சவுக்காக இருக்கும். சரியான நேரத்தில் அவர்களின் உண்மையான உள்ளமும் செயலும் தெரியவரும் போது, நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நம்முடைய நேரம் வீணான வருத்தத்தைவிட ‘ஏமாந்து விட்டோமே’ என்ற கழிவிரக்கம் தலைதூக்கும்.

‘நான் தான் உலகம்’ அல்லது ‘உலகமே எனக்குத்தான்’ என்று திரிகிறவர்களும் உண்டு. தன்னைப் பற்றிய சிந்தனை தவிர வேறெதுவும் இவர்களுக்கு வராது. “எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; இன்னும் ஏழு ஆண்டுகளில் நான் ஒரு காபினெட் மந்திரி” என்பார்கள். “இங்கேயே இப்படியே இருந்து, என் அறிவே மங்குகிறது” என்பார்கள். ஐந்து நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து ஓய்வாகப் பேசி சிரித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மட்டும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, நான் வித்தியாசமானவன் என்பது போல படித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு குழுவாக உட்கார்ந்து கலந்தாலோசனை செய்து பேசிக் கொண்டு இருக்கும்போது பக்கத்தில் இருப்பவரின் காதுக்குள் எதையோ சொல்வார்கள். நமக்கே ஒரு பின்னோக்கிய சிந்தனையை இவர்கள் தந்துவிடுவார்கள்.

‘நம்மால் இது முடியாது’ என்று சொல்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். தங்களை சுருக்கிக் கொள்வது மட்டுமல்ல; நம்மையும் சேர்த்து உள்ளே இழுப்பார்கள். நீந்தத் தெரியாதவன் நீரில் மூழ்கினால் கையில் கிடைப்பதையெல்லாம் சேர்த்து இழுப்பானே அப்படி, தப்பித் தவறிக்கூட இப்படிப் பட்டவர்களிடம் நாம் சிக்கிவிடக் கூடாது.

“எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர்கள்” என்று இதுவரை ஒரு பட்டியலே பார்த்தோம். இதில் இடம் பெறாமல் போனவர்கள்கூட இருக்கக்கூடும். ஆனால் இதன் தொடர்ச்சியாக, மிக முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் இரண்டு உண்டு.

முதல் கருத்து: நாம பழக வேண்டியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்று பார்த்தோம். வாழ்க்கைத்துணையே இப்படி அமைந்துவிட்டால்….?

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கண்ணதாசன் பாடல் எழுதியது கணவன் அமைவதற்கும் பொருந்தும். பழகிப் பார்த்து இவற்றையெல்லாம் தெரிந்து புரிந்து உணர்ந்து கொண்டா திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள முடியும்?

‘அதற்காகத்தான் திருமணத்திற்கு முன்பே காதலிக்க வேண்டும்’ என்கிற வாதமும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. காதலிக்கிற எல்லோருமே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் காதலிப்பதில்லை. அப்படி புரிந்து கொண்டதாக நினைத்துத் திருமணம் செய்து கொண்டவர்களிலும் மணமுறிவு கேட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஒன்றை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். மேலே கூறிய குண நிலைகள் திருமண முறிவிற்கான காரணமாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், இத்தகைய குணநிலைகள், வாழ்க்கைத் துணையிடம் இருந்து நமக்கு ஒட்டிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது நிலையில் நாம் உறுதியாக நின்றுகொண்டு, பொறுமையையும், அன்பையும் அதிகமாகவே பயன்படுத்தி அவசரப் படாமல், கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கைத் துணையை மாற்ற முயல வேண்டும். மாற்றவே முடியவில்லையென்றால் மனதுக்குள் ‘அது உன் எல்லை; இது என் எல்லை’ என்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இரண்டாம் கருத்துதான் மிக முக்கியமானது. இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு வந்ததன் நோக்கமே, இந்தக் கருத்தில் வந்து சேர்வதற்காகத்தான்.

தவிர்க்கப்பட வேண்டியவர்கள்; எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர்கள் என்ற குண நிலைகளை இவ்வளவு நேரம் பார்த்தோமே…? இவை நம்மிடையே இருந்தால்….. இந்தக் குறைகள் நம்மிடம் இல்லை என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

நம்மில் பலருக்கு யாரோ ஒருவர் மீதோ அல்லது சிலர் மீதோ, ‘அவர் எனக்கு துரோகம்’ செய்து விட்டார் என்றோ, ‘என்னை ஏமாற்றிவிட்டார்’ என்றோ வருத்தமும் கவலையும் இருக்கின்றன. சரி! நாம் யாரைப்பற்றி இப்படி நினைக்கிறோமோ, அவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார் என்று நினைக்கிறீர்கள்? ஏறக்குறைய நம்மைப் போன்றுதான் அவரும் நினைப்பார்; அதாவது நாம் அவரை ஏமாற்றிவிட்டதாக அல்லது துரோகம் செய்துவிட்டதாக!

நாம் அதை ஒப்புக் கொள்வோமா? கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டோம். ஏனென்றால், நாம் செய்த ஒவ்வொரு செயலையும் அல்லது சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நியாயப்படுத்த நம்மிடம் ஒரு காரணம் இருக்கும். அடுத்தவருக்கும் அப்படி ஏதோ ஒரு காரணம் இருக்கும்! ஆனால் அதை நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். எல்லாச் சிக்கல்களும் இங்கேதான் தொடங்குகின்றன என்பதனை நாம் உணர வேண்டாமா? இக்குறைகள் நம்மிடம் இல்லாமல் இருப்பதுதான், நமது வெற்றிக்கான அடித்தளம் அல்லவா?

“ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம்” என்று வள்ளுவன் இதையே குறிப்பிடுகிறான். இந்தக் குறளை கூட மேற்கோள் காட்ட மட்டுமே நாம் பயன்படுத்தினால், நமக்கென்ன பெருமை? இல்லை. வள்ளுவனுக்குத்தான் என்ன பெருமை?

அடுத்தவரை நாம் விலக்குவது இருக்கட்டும்; அடுத்தவர்களின் ‘விலக்கப்பட வேண்டியவர்’ பட்டியலில் நாம் இருக்கலாகாது அல்லவா?

“இந்தப் பதர்களையே நெல்லாமென எண்ணி இருப்பேனோ”

என்று எழுதுகிறான் பாரதி. அவன் கை காட்டி இப்படிக் குறிப்பிட்டது நம்மையல்ல எனும்படி நாம் வீரியம் மிக்க விதைகளாக இருக்க வேண்டும்.

வல்லூறாகப் பறக்க விரும்புபவர் வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக் கூடாது. அதைவிட முக்கியம் நாம் வாத்து இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *