வாழ்க்கை அழகின் உச்சம்

– க. அம்சப்ரியா

முயற்சிக்கிற காரியங்கள் யாவுமே வெற்றியில் முடிய வேண்டுமென்றுதான் நினைக்கிறோம்! ஒன்றிரண்டு அப்படி அமையலாம்! அமையாமல் போகிறபோது முந்தையது எப்படி வெற்றியாக அமைந்தது என்று யோசிக்க மறுத்து, இப்போதைய தோல்வியைப் பற்றிய எண்ணங்களால் தன்னைப் புதைத்துக் கொண்டு அதிலிருந்து

வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது பலரும் செய்வதுதான்!

அந்தத் தோல்விக்கான காரணங்கள் பலவாயினும், மிக முக்கியமான ஒன்றுண்டு. நீந்துகிற போது நடப்பதும், நடந்து கொண்டிருக்கிற போது பறப்பதும், பறந்து கொண்டிருக்கிறபோது உட்கார்ந்து கொண்டிருப்பதுமாகும்!

வாழ்க்கையைக் கற்றுத் தருவதாகச் சொன்ன ஞானி ஒருவரின் பாடசாலைக்கு ஒருவன் சென்றிருந்தான்!

அந்த ஆசிரமத்தில் தினமும் ஒருவர் முறை வைத்து சமைக்க வேண்டும்! அன்று குருவின் முறை. குருவைத் தேடிப் போன அன்று குரு சமையலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

குரு சற்று தூரம் நடக்கத் துவங்கினார். இவனும் கூடவே சென்றான். காட்டில் ஒதுக்குப் புறமாய் கிடந்த காய்ந்த சுள்ளிகளை கவனமாகப் பொறுக்கிக் கொண்டிருந்தார். இத்தனை சீடர்கள் இருக்கும்போது, இம்மாதிரியான காரியங்களைக்கூட இவர்தான் செய்ய வேண்டுமா….? என்று யோசித்தான். ஆனாலும் கேட்கவில்லை.

அதைப் போலவே சமையலுக்குத் தேவையான தண்ணீர், மற்ற உப பொருட்கள் யாவற்றையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து சமையல் கூடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

சமையல் வேலை துவங்கியது, சமைத்து முடிக்கும் வரை அவர் யாரிடமும் எதுவுமே பேசவில்லை. வழக்கத்தைவிட அன்று கூடுதலான சுவையோடிருப்பதாக மற்ற சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுநாள் வரை தாங்கள் சமைத்தபோது இல்லாத ருசி குருவுக்கு எப்படிக் கைகூடியது? இதுதான் அன்றைய தலைமைப் பேச்சாக இருந்தது.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒன்று கூடினார்கள். இன்றைய பாடம் இத்துடன் முடிந்துவிட்டது என்றார்.

“நான் புதிய சீடன்… புரியவில்லை… விளக்க முடியுமா…? என்றான்.

‘இங்கு எந்த விளக்கமும் தரப்படுவதில்லை. அவரவர் புரிந்து கொள்வதுதான் பாடம்” என்றார்.

யோசிக்கத் துவங்கினான்.

நம்மில் பலரும் செய்கிற செயல்தான்! ஒரு வேலையைச் செய்கிறபோது இன்னொன்றைப் பற்றிய சிந்தனையை ஓடவிடுவது. துணைச் செயல்கள், முதன்மைச் செயலை பாதிக்கின்றன.

சமைக்கிறபோது பரிமாறுகிற எண்ணமும், சில சமயங்களில் அதனையும் கடந்து அலுவலகப் பணிகளுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது. அலுவலகப் பணிகளின் போதோ குடும்பமும், குழந்தைகளும் வலம் வருகிறார்கள். இரவு சந்திக்கப் போகிற துயரத்திற்காக காலை நேரத்து மகிழ்ச்சியை காவு கொடுக்கிறோம்! நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறபோது விரோதங்களையும் கடந்த காலத்தையும் தோளில் போட்டுக் கொள்கிறோம்!

துயரத்தின் நிழல்படியாத பொழுதும், மகிழ்ச்சியின் சாயல் இல்லாத வினாடிகளும் இந்த உலகத்தில் ஏது?

ஓய்வாகத்தான் யாராவது இருக்கிறார்களா…..? யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது கூட கைகால்கள் சேட்டைகள் செய்த படியிருக்கின்றன. ஆடைகளைத் திருத்துகின்றன! விரல்கள் சொடுக்குகின்றன. விழிகள் அலை பாய்கின்றன.

நிர்ப்பந்தம் அற்ற செயல்கள் விடுதலையைத் தருகின்றன. அந்த நேரத்தில் எந்தக் காரியம் செய்ய மனச் சுதந்திரம் இருக்கிறதோஅந்த நேரமே நிர்ப்பந்தம் அற்ற நேரம்.

முதலாளிக்காகவோ, நிறுவனத்திற்காகவோ, தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவோ செய்யப்படும் எல்லா வேலைகளுமே சில குற்றங்களைக் கொண்டே காட்சியாகின்றன. அவரவர்களுக்காகச் செய்யப்படும் வேலைகள் பல சமயங்களில் நேர்த்தியுடனும், அழகுணர்ச்சியுடனும் செய்யப்படுகின்றன.

குரு சீடனுக்குச் சொன்னதுதான்… நமக்கும்!

“சமையலைக் கவனித்துக் கொண்டிரு!!

வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்க, நீந்துகிற வேளையில் நீந்துவோம்! பறக்கிற கணத்தில் பறப்போம்! பேசுகிற நேரத்தில் பேசுவோம்! வாழ்க்கையை வாழ்க்கையாக்குவோம்! அப்போது வாழ்க்கையே அழகு மயமாகிவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *