– கவிஞர் இரமணன்
உண்மை என்பது தூய அறிவு உள்ள அனைத்திற்கும் ஆதாரமானது. உள்ளபடியே மிகவும் எளிது. உண்மை என்பது உயிரின் இயல்பு. ஊரில் எங்கோ உயரத்தில் இல்லை. இன்றும் என்றும் உண்மை உண்மை! உண்மையாய் இருப்பதின் மூலமே ஒருவன் உண்மையில் தன்னை நிறுவிக் கொள்கிறான். பெரியவர்கள்
சொல்வார்கள். ஒரு பன்னிரெண்டு வருடங்கள் உண்மையே பேசு. பிறகு நீ பேசுவதெல்லாம் உண்மையே ஆகும் என்று. உண்மையின் சக்தி அத்தனை மகத்தானது. பொய்சொல்ல நீண்ட நினைவாற்றல் வேண்டும், குயுக்தி, குதர்க்கம், ஆந்தை போல் விழிப்பு எல்லாம் வேண்டும். அது நம் சக்தி அனைத்தையும் கரைத்துவிடுகிறது.
மனவழுத்தம், வாதை, இறுக்கம், உள்ளே புழுக்கம், அச்சம் இவற்றுக்கெல்லாம் உண்மையே அருமருந்து. உண்மையாய் இருப்பதற்குப் புத்தக அறிவு தேவையில்லை, சாத்திர ஞானம் தேவையில்லை, மனசாட்சியின்படி நடந்தால் போதும்!
பொய் மூலம் நமக்குப் பணம், பதவி, இன்பம் போன்றவை கிடைக்கக்கூடும். ஆனால், நம்மையல்லவா தொலைத்துவிடுகிறோம்? நம் கௌரவத்தையல்லவா இழந்துவிடுகிறோம்? உண்மையாய் இருப்பதன் மூலம் நமக்குக் பொருள் நட்டங்கள் கூட ஏற்படலாம். ஆனால், நம் கௌரவமும், அமைதியும் நிலைபெறுமே! பொய்யால் வந்த லாபம் லாபமே அல்ல. மெய்யால் வந்த நட்டம் நட்டமே அல்ல. நமக்கு, நம் ஆன்மாவைக் காட்டிலும் அரிதானவொன்று இருக்க முடியுமா? இந்த வாக்கியத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டால், நாம் இயல்பாகவே உண்மையாக இருக்கமாட்டோமா?
உண்மையாய் இரு என்றால் உடனே ஐந்து சுவாரசியமான கேள்விகள் எழுகின்றன.
1. உண்மையாய் இருக்கவேண்டும் என்று முயன்றால் கூட முடியவில்லை. சமுதாயத்தைக் குறைகூறலாமா?
சமுதாயம் என்பது நமக்கு அன்னியமாய் எங்கோ வெளியே இல்லை. நாம்தான் சமுதாயத்தை ஆக்குகிறோம். தனிப்பட்ட மனிதனின் ஊழலே சமுதாயத்தில் மலிந்து விட்டது. பக்கத்து வீடு பற்றி எரிந்தால், உடனே அணைக்க ஓடலாம், தீயணைப்புப் பிரிவுக்கு போன் போடலாம். அல்லாமல், வீதியில் யாராவது காப்பாற்றுவார்கள் என்று தாழ்ப்போட்டுக் கொள்வதா? நம் வீடு எரியும்போது, வீதியே நம்மைபோல நினைத்தால் நம்கதிதான் என்ன? எங்கும் ஊழல் மண்டிக்கிடப்பது உண்மைதான். அது நமக்குப் பிடித்திருக்கிறதா? இல்லை! அதை நாம் அங்கீகரிக்கிறோமா? இல்லை! ஊழல் ஒழிந்து விட்டால், அல்லது அதிலே ஈடுபடும்படி நாம் வற்புறுத்தப் படாவிட்டால், நாம் மகிழ்வோமா? ஆமாம்! ஆமெனில், நாம் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். நமது பொறுப்பை, நம் காரியத்தை வேறு யாரோ ஒருவர் வந்து செய்வார் என்று எதிர்பார்த்து நிற்பது தவறு.
2. எது உண்மை என்று எனக்கு எப்படித் தெரியும்?
பெரும்பாலான சூழ்நிலைகளில் எது உண்மை என்பது நமக்குத் தெரியும். நாம் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளில் அது இன்னும் நன்றாகத் தெரியும். இதுபற்றிய நியதி, உலகெங்கும் எல்லா இனங்களிலும், ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதாவது, மனசாட்சியின்படி நட தெளிந்த புத்தியே மனசாட்சி. அது நம் எல்லோரிலும் இருக்கிறது. மனசாட்சி ஒரு காவல் நாய் போல, நம் நல்ல செயல்களுக்கு நம்மைத் தட்டிக் கொடுக்காது. ஆனால், நாம் தவறுசெய்ய நினைக்கும்போதே குரைக்கும்! அந்தக் குரலைக் கேட்டு நம்மை நாம் சரிசெய்து கொண்டால் பிழைத்தோம். அந்தக் குரலை ஒடுக்கிவிட்டுத் தவறான பாதையில் சென்றால் தொலைந்தோம். இன்றில்லாவிட்டால் , நாளை!
3. நான் மனசாட்சியின்படி நடந்து கொள்வதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் அது மனதின் மாய வேலையாயிருந்தால் என்ன செய்ய?
• மனசாட்சியைத் தொடரும் நெஞ்சில் சஞ்சலம் இருக்காது. அதில் ஐயங்கள் எழமாட்டா. ஏனெனில், அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நிகழ்ச்சி நிரல் கிடையாது.
• சிறப்பான நோக்கங்கள் இருக்கும் போதுகூடத் தவறாகிப் போகலாம் என்பது உண்மைதான். ஒன்றும் பரவாயில்லை. உத்தேசத்தின் நேர்மைதான் இங்கே முக்கியமே அன்றி அறிவோ, நொடியில் புரிந்து கொள்ளும் திறனோ அன்று. அவை தன்னைப்போல் தொடரும்.
4. நான் உண்மையாய் இருந்து என்னால் ஊறு விளைந்தால் என்ன செய்வது?
நம் பொய்யால் மற்றவர்க்கு விளையும் துன்பம்தான் அதிகமானது. உண்மை கசப்பாகவோ கடுமையாகவோ இருந்தாலும், அதை நாம் வெளிப்படுத்தும் முறை, நம் செயல் இவை கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நாம் இனிமையாகவே வேறுபடலாம்! மென்மையாக, அதே சமயம் உறுதியாக நம்மை வெளிப்படுத்தலாம். ஒரு கருத்தை நிறுவ உச்ச ஸ்தாயியில் கூப்பாடு போட வேண்டியதில்லை.
உண்மை பேசுவோர் உரக்கப் பேசுவதில்லை.
5. உண்மையாய் இருப்பதற்கு கிடைக்கும் வெகுமதி என்ன?
அம்மா, மழை, சூரியன், காற்று, பருவங்கள் இவை தமது தன்னலமற்ற சேவைக்கு என்ன வெகுமதி பெறுகின்றன? உண்மையாய் இருப்பது மானுடக் கடமை நாம் நம்மியல்பாகவே அப்படி இருக்க வேண்டும். நாம் மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால், நாம் எந்த நிபந்தனையுமின்றி, எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி உண்மையாக இருக்க வேண்டும்.
உண்மையாய் வாழ்வது நம்மைப் பேருண்மைக்கு இறுதி ஞானத்திற்கு இட்டுச் செல்கிறது. அது நமக்கு நிலையான அமைதியையும், ஆனந்தத்தையும் தருகிறது. இதோ, இந்தப் புவியில் வாழும்போதே நாம் அவற்றை அடையலாம்.
உண்மையாய் இருப்பது பற்றிச் சில உண்மைகள்
• வீரர்களே உண்மையாக இருக்கிறார்கள். கோழைகள், கரப்பான் பூச்சி ஒளியைத் தவிர்ப்பதுபோல் உண்மையைப் புறக்கணிக்கிறார்கள்.
• பொய்மையாகவும் இருந்து அமைதியையும் எதிர்பார்ப்பது, பெட்ரோலை ஊற்றி நெருப்பை அணைக்கலாம் என்று நம்புவதைப் போல!
• முழுக்க முழுக்கக் காசுமயமாகிப் போன உலகத்தில் இன்றும் கூட உண்மையாய் நடப்பவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கின்றன.
• பொய்யில் வாழ்பவர்களுக்கு நண்பர்கள் கிடையாது. உண்ணிகள்தான் உண்டு.
• உண்மையில் வாழ்பவன் பெறவோ, இழக்கவோ இங்கே எதுவுமில்லை என்று நன்கறிந்தவன். பொய்யனோ, நில்லாத சுகங்களுக்காக, நிலையான பேற்றை நிரந்தரமாக இழக்கிறான்.
ஒரு சூழ்நிலையில், நாம் தவறாக இருக்கலாம். அல்லது, விதியின் சூழ்ச்சியால் நாம் தவறு செய்ததாகக் காணப்படலாம். அப்போதும் உண்மையாய் இருத்தல் என்னும் நமது ஒரே உரிமையைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும். உண்மையை பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் தவறவிடக் கூடாது. அதே சமயம், பேசாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மை, பேசப்பட வேண்டும்தான். ஆனால், சில நேரங்களில், மௌனம், உண்மையை இன்னும் வலுவாக முழக்குகிறது!
உண்மையே மேன்மை உண்மையே தெய்வம்
உண்மையே அறிவிலே தெளிவு
உண்மையே மாண்பு உண்மையே பண்பு
உண்மையே உயிரதன் இயல்பு
பொய்யினால் வருவது பொய்யினைப் போலவே
பொழுதோடு பனியாக மறையும்
மெய்யினால் வருவதோ மெய்யினைப் போலவே
மேலுலகும் கீழுலகும் நிறையும்
நல்லாரும் கூட நில்லாத உலகில்
நட்டங்கள் லாபங்கள் என்ன?
எல்லோரும் வாழ எண்ணங்கள் கொண்டோர்
நிற்பதோ உண்மையின் கண்ணே!
உண்மையே பேசு! உன்னாவு பேசும்
சொல்லெலாம் உண்மையாய்ச் சுடரும்!
உண்மையே கண்ணாய் ஓரெட்டு வைத்தால்
ஓருண்மை நிழலாகத் தொடரும்!
Leave a Reply