தோல்விகள் ஒருவகையில் நல்லதுதான். ஏதாவது செயலில் ஈடுபடும்போதுதான் தோல்வி வருகிறது. இந்தத் தோல்வி, இன்னும் சரியாக செயல்படுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. வெற்றியாளர்கள் பலரும் தோல்வி கற்றுத்தந்த பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒரு தோல்வி வந்தவுடன், அதைத் தோல்வி என்று நினைப்பதைவிட்டு அதனை ‘அனுபவம்’ என்கிற கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த விநாடியே அந்த “அனுபவத்தை” ஆராய்ச்சி செய்யவும் வேண்டும்.
இந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டதென்ன?
எதில் கோட்டைவிட்டதால் இந்த அனுபவம் நேர்ந்தது?
இந்த அனுபவத்திலிருந்து அடுத்த படிநிலைக்குப் போகும்போது
நம்மிடம் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்?
இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது, அடுத்த கட்டம் ஆதாயம் தருவதாக மட்டுமே இருக்கும். இதோ, தோல்வி குறித்த சிலரின் அனுபவ மொழிகள்:
தோல்வியை ஓர் அனுபவமாக மட்டுமே பார்க்கும் யாரும் எந்த நேரத்திலும் தோற்றுப் போவதே கிடையாது.
தற்காலிகமான பின்னடைவு என்பதாகத் தோல்வியைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தோற்கமாட்டீர்கள்.
பெரிய பெரிய வெற்றியாளர்களும், ஒன்று தோல்வியிலிருந்து மீண்டவர்களாக இருப்பார்கள். அல்லது, தோற்கக்கூடாது என்று கூடுதல் எச்சரிக்கையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வெற்றிபெறவேண்டும் என்கிற ஆர்வம் மனிதனிடம் குறைகிறபோது, அந்த ஆர்வத்தை அதிகரிக்க இயற்கையே செய்யும் ஏற்பாடுதான் தோல்வி.
ஒரு முயற்சியை மேலும் மெருகேற்றி எதிர்காலத்தில் இமாலய வெற்றியை ஏற்படுத்துவதற்காக இப்போது நிகழ்வதுதான் தோல்வி.
தோல்வி என்பது சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் வருவதில்லை. எல்லோருக்குமே தோல்வி என்பது ஒருவரம். சிலர்தான் அதை சரியாக மாற்றிக் கொள்கிறார்கள். தோல்வியை வரம் என்று நினைப்பவர்கள் வெற்றி நோக்கி நகர்கிறார்கள். தோல்வியை சாபம் என்று நினைப்பவர்கள் தோல்வி நிலையிலேயே தங்கிவிடுகிறார்கள். அல்லது தேங்கிவிடுகிறார்கள்.
Leave a Reply