கடந்த வாரம் கடவுளைச் சந்தித்தேன்…!

-அத்வைத் ஆனந்த்

கடந்தவாரம் கடவுளைச் சந்தித்தேன். அவர்மேல் அதிக கோபத்தில் இருந்ததால் அவரை நான் கண்டுகொள்ளவில்லை. உலகில், சிலர் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். பலர் சராசரிகளாக இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால், ‘தலைவிதி’ என்கிறார்கள். அதனால்தான் அதை எழுதிய கடவுள் மேல் கோபம் எனக்கு.

இதுவே மனிதனாக இருந்திருந்தால், இப்படி மாற்றி மாற்றி எழுதி வைத்ததற்கு, சட்டையைப் பிடித்து இரண்டு கேள்வி கேட்டிருப்பேன். கடவுளாய் போய்விட்டதால் கம்மென்று இருந்து விட்டேன்.

அவரை நான் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கடவுள் என்னை இழுத்துப்பிடித்து வைத்துப் பேசினார். என் வருத்தத்தை, பட படவென்று அவர் முன்னே கொட்டினேன். “ஏன் மனிதர்களின் தலைவிதியை ஒரே மாதிரி எழுதாமல் மாற்றி மாற்றி எழுதினீர்கள்?”
“ஒரு மனிதன் 75 ரூபாய்க்கு ஸ்டார் ஹோட்டலில் ஒரு வேளை காப்பி சாப்பிடுகிறான். ஆனால், இன்னொரு மனிதன் தள்ளுவண்டியில் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையையோ, கொசுக்கடியையோ பொருட் படுத்தாமல் பத்துரூபாய்க்கு ஒருவேளை சாப்பாட்டையே சாப்பிட்டு விடுகிறான். ஏன் இந்த வித்தியாசம் ?”

கடவுள், ஆர்ப்பாட்டமாக சிரித்தபடியே, “முட்டாள்! தலைவிதி என்றால் ஒவ்வொரு மனிதன் தலையிலும் நான் எழுதிய விதி என்று நினைத்துக் கொண்டாயா? அதனால்தான் குழந்தையின் தலையில் முடி இறக்கி என்ன எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறீர்கள் போலும்” என்றார் கிண்டலாக.

“கிண்டல் பேச்சு வேண்டாம். என் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். எல்லோருக்கும் அவர் தலைவிதியை நீங்கள் எழுதுகிறீர்களா? இல்லை, உங்கள் அலுவலகத்தில் யாரேனும் இந்த வேலையைச் செய்கிறார்களா? அதனால்தான் இப்படி தப்பும் தவறுமாக இருக்கிறது போலும்”.

கடவுள் இன்னும் ஆர்ப்பாட்டமாக சிரித்தார், ”எல்லோருடைய விதியையையும் நான் தான் எழுதுகிறேன்.” அவர் கம்பீரமாக அதைச் சொல்லும்போது, திருவிளையாடல் சிவாஜி போலவே இருந்தார்.

“பிறகு ஏன் மனிதர்களின் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்? சிலர் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் வாழ்க்கையில் தாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். வெற்றி பெறுகிறவர்கள் சிலராகவும் தோல்வியடைபவர்கள் பலராகவும் இருக்கிறார்களே. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? ஏன் இந்த இடைவெளி?”

என் கோபம் கண்டு, கடவுளே கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். என்னை இழுத்து அணைத்துக்கொண்டார். கிண்டல் தொனி விடுத்து, இப்போது ஆறுதலாக பேசத் தொடங்கினார்.

“தலைவிதி என்றால் தலையில் எழுதும் விதி என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டு விட்டார்கள். நான் எல்லோருக்குள்ளும் ஒரு விதியை எழுதி வைத்திருக்கிறேன். அது விதிகளிலேயே முதன்மையான விதி. அதாவது தலையாய விதி. அதைத்தான் நீங்களெல்லாம் நாளடைவில் தலைவிதி என்று சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்” என்றார்.

“சரி. தலைவிதியோ, தலையாய விதியோ என்ன எழுதினீர்கள். அதைச் சொல்லும்?”
”என்னால் முடியும் என்பதைத்தான் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓதிவைத்தேன்” என்றார்.

‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தைத் தான் எல்லோருக்குள்ளும் விதைத்திருந்தால், எல்லோரும் நம்பிக்கையோடு முயற்சி செய்து உயரங்களை தொட்டிருப்பார்களே. ஆனால் நிஜத்தில், ‘என்னால் முடியாது’ என்கிற கோஷ்டி அல்லவா அதிகம் இருக்கிறது? ஒருவேளை எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்குமோ? ச்சே! கடவுளாவது எழுத்துப் பிழை செய்வதாவது?

கடவுள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் பொய் சொல்பவர் இல்லை கடவுள். என் குழப்பத்தை புரிந்து கொண்ட கடவுள் அவராகவே எனக்கு இன்னும் விளக்கினார்.

“நீ டூவீலரை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்புகிறாய். முன்னால் உட்கார்ந்திருக்கிற உன் சின்னக் குழந்தை என்ன சொல்லும்?”

யோசித்துப்பார்த்தேன், ‘என்ன சொல்வான் என் பையன்?’ “அப்பா நான் ஓட்டுகிறேன்”
“உன் மனைவி தண்ணீர்க்குடம் எடுத்துக் கொண்டு செல்கிறாள், உன் குழந்தை என்ன சொல்கிறது?”

“அம்மா! நான் தூக்குகிறேன்.”

“அதனால் முடியுமா?”

“நிச்சயமாக முடியாது.”

“அப்புறம் ஏன் அது அப்படி பேசுகிறது? காரணம், நான் ஒவ்வொரு குழந்தையை படைக்கும் போதும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தையும் வைத்தேதான் படைத்தேன். இப்போதாவது நம்புகிறாயா என்னை?”

“இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன், கேள். உங்கள் குழந்தை, வீட்டில் உள்ள ஸ்டூல்மேல் ஏறி, பீரோவில் உள்ள எதையோ எடுக்க முயற்சி செய்யும்போது கீழே விழுந்துவிட்டது. கையில் பலமாக அடிபட்டுவிட்டது. கை நன்றாக வீங்கி விட்டது. அடுத்தநாள் உன் குழந்தை ஸ்டூல்மேல் ஏறுமா? இல்லை, என்னால் முடியாது. ஏற்கனவே விழுந்துவிட்டேன் எனப் பயந்து ஏறாதா?”

அட! ஆமாம். என் குழந்தை ஏறும். நிச்சயம் ஏறும். கடவுளே.. ‘என்னால் முடியும்’ என்று இந்த உலகத்தில் பிறந்த குழந்தை, பிறகு எப்படி ‘என்னால் முடியாது’ என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டது?

இது நான் கேட்கவேண்டிய கேள்வி. ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தோடு நான் படைத்தவனை, நீங்கள் எல்லோரும் சேர்ந்து ‘என்னால் முடியாது’ என்று யோசிக்கிறவனாய் எப்படி மாற்றினீர்கள்? கடவுள் வார்த்தைகள் வேகமாய் வந்தன. அந்தக்கணத்தில் கடவுள் அப்படியே மறைந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்து விடை தேட ஆரம்பித்தேன்.

என் குழந்தை முதன் முதலாக சேரை தூக்க முயற்சி செய்தபோது, என்ன சொன்னேன்? ‘உன்னால் முடியாது.’

நான் வண்டி ஓட்டுவதைப் பார்த்துவிட்டு, ‘அப்பா! நான் வண்டி ஓட்டுகிறேன்’ என்று சொன்ன போது, என்ன சொன்னேன்? ‘உன்னால் முடியாது.’ என் மனைவி தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும்போது, என் குழந்தை கேட்டது, “அம்மா! நான் குடத்தை தூக்குகிறேன்”. அப்போது என் மனைவி என்ன சொன்னாள்? ‘உன்னால் முடியாது’
திரும்பத் திரும்பக் கேட்டு, குழந்தைகள் மனதில் இப்போது இது பதிந்துவிட்டது.

நாம் எதைச் செய்யச்சொன்னாலும் இப்போது குழந்தைகள் சொல்கிறது, ‘என்னால் முடியாது.’

எத்தனை முறை விழுந்தாலும் என்னால் முடியும் என்று எழுந்த குழந்தைகள், வளர வளர சின்னச்சின்ன தோல்விகளில் துவண்டு, ‘என்னால் முடியாது’ என்று முடிவே செய்துவிட்டது.

நீ கிளாஸ் பர்ஸ்ட் வரவேண்டும் என்று சொன்னால், என்னால் முடியாது. எனக்கு சைன்ஸ் வராது என்கிறது. இன்னும் வளர்ந்து தொழில் செய்யும் போது, சிறிய தோல்வி வந்தால்கூட என்னால் முடியாது. நான் பிஸினஸ்க்கு தகுதியானவர் இல்லை என்கிறது.

முடியும் என்ற எண்ணத்தை, ‘முடியாது! முடியாது’ என்று திரும்பச்சொல்லி நாம்தான் மாற்றினோம். இந்த உலகத்தில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை நாம்தான் ஏற்படுத்தினோம்.

இப்போது என் பணி என்ன என்று எனக்கு புரிந்தது. எல்லோருக்கும் சொல்லவேண்டும். தலைவிதி இதுதான், தலையாய விதி இதுதான். ‘உன்னால் முடியும்! உலகை வெல்ல!’

பேப்பரை எடுத்துக்கொண்டு விறு விறுவென்று எழுத ஆரம்பித்தேன். முதலில் கட்டுரைக்கு தலைப்பு வைத்தேன்.

கடந்த வாரம் நான் கடவுளைச் சந்தித்தேன்.

 1. Guru

  Dear Sir,

  Realy nice..

  You have told very strong message in a light manner

  Thanks and keep up…

  All the best

  Regards,
  GURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *