நேர்காணல்

சூழ்நிலையால் பல நாடுகள் சென்று எண்ணற்ற சோதனை வழியிலும், சாதனை மடியை எட்டிப்பிடித்த திரு நாகூர் கனியிடம் நேர்காணல்…….

உங்களைப் பற்றி………

என் பெயர் நாகூர் கனி. என் சொந்த ஊர் அஞ்சுகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம். என் தந்தை பெயர் அப்துல் வகாப். அம்மா பெயர் பரிதா. படிப்பு B.A. தமிழ் இரண்டாம் ஆண்டு.

பின்னாளில் சிறையில் இருக்க நேர்ந்ததால் என்னால் தொடர இயலவில்லை. மீண்டும் தொடர முயற்சி செய்தபோது முடியாது என்று கூறிவிட்டார்கள்.

நீங்கள் எங்கே எதற்காக சிறையில் அடைக்கப் பட்டீர்கள்?

ஒருமுறை நான் மாலத்தீவுக்கு சுற்றுலாப் பயணியாக போனபோது, ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தேன். சரியாக இரவு ஒரு மணி. அங்கெல்லாம் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும். அப்பொழுது எல்.டி.டீ.இ. சார்ந்தவர்களைப் பிடிக்க வந்த போலீஸ் சந்தேகப்படும்படியாக இருந்த எல்லோரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் மாட்டிக்கொண்டு 3 மாதம் சிறையில் இருந்தேன். அங்கெல்லாம் விசாரணை என்றால் நீதிமன்றத்திற்கு அழைத்துப்போய் அவர்களே ஜட்ஜ்மெண்ட் வாங்கி வந்துவிடுவார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியாது. எங்களை காரணமில்லாமல் அடைத்து வைத்து இருக்கிறீர்களே என்று 3 நாள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது எங்கள் பக்கத்து அறையில் இருந்த அந்த நாட்டை சேர்ந்த பெண் இறந்து போனார். அதனால் எங்களை அபராதம் கட்டிவிட்டு வெளியேற சொன்னார்கள். நானும் அபராதம் கட்டி வெளியே வந்துவிட்டேன்.

உங்களை அடையாள சான்றிதழ் இல்லாமல் கைது செய்ததாக சொன்னீர்கள். அப்படியானால் உங்கள் சான்றிதழ்கள் எங்கே யாரிடம் இருந்தது?

என் நண்பரிடம் பாஸ்போர்ட்டை கொடுத்து வைத்திருந்தேன். அது கிடைக்கத் தாமதமானதால் என்னை நிரூபிக்க இயலவில்லை. என் நண்பனுக்கு போலீஸ் என்றால் பயம். அதனால் வேறொரு ஆள் மூலமாக கொடுத்தனுப்பினார். எனவே, என் சான்றிதழ்கள் கிடைக்க ரொம்ப நேரமானது.

மாலத்தீவிலிருந்து நாடு திரும்பியவுடன் என்ன செய்தீர்கள்?

இந்தியாவில் 3 வருடம் இருந்தேன். பின்பு “மலேசியாவில்” – “போர்டிக்சன்” என்ற இடத்தில் வேலை செய்தேன். 2001-இல் இந்தியாவில் திருமணம் நடந்தது. பின்பு சில ஆண்டுகள் இருந்துவிட்டு நாடு திரும்பிவிட்டேன்.

நீங்கள் வேறு ஏதாவது வெளிநாடு சென்றதுண்டா?. எதற்காக அங்கு சென்றீர்கள்?

மலேசியாவில் இருந்து திரும்ப வந்து இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, நாளிதழ் ஒன்றில் மலேசியாவில் இருந்து மலேசியா பாஷை பேசத் தெரிந்த ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வந்தது. அந்த நிறுவனத்தை அணுகி வேலை விபரம் கேட்டபோது, “ஹாங்காங்கில் 8 மணி நேர வேலை. புரோட்டா மாஸ்டராக பணியாற்ற வேண்டும், அங்கு நிறைய மலேசிய மக்கள் வருவார்கள். அவர்களுடன் மலேசியா பாஷையில் பேச வேண்டும்” என்றார்கள். அந்த வேலைக்கு என்னைத் தேர்வும் செய்தார்கள். வேலையில் சேர 1,25,000 ரூபாய் கட்ட வேண்டும் என்ற போது நான் கடன் வாங்கி 90,000 கட்டினேன். மீதியை பிறகு தருவதாக சொல்லி ஹாங்காங் சென்றேன்.

ஹாங்காங்கில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினீர்கள். அந்த சூழ்நிலை எப்படியிருந்தது?
ஆண்டுகள் அல்ல. வெறும் 15 நாட்கள் தான் வேலை செய்தேன். பின்பு, இங்கே விசா பிரச்சனை உள்ளது. உங்கள் ‘ஒர்க் பர்மிட்டை’ தடை செய்துவிட்டார்கள். அதனால் சீனாவில் சென்று வேலை செய்யுமாறு அந்த நிறுவனம் சொன்னது. சீனாவில் எனக்கு யாரையும் தெரியாது. எப்படி செல்வது என்று கேட்டபொழுது ஓர் ஆள் வைத்து என்னை அங்கு கொண்டு விட்டார்கள். எத்தனையோ ஏமாற்றம், ஆள்மாறாட்டங்கள். எங்கள் பாஸ்போர்ட்டையும் அவர்கள் வசம் வைத்துக்கொண்டார்கள். “சுற்றுலா பயணி விசா” தான் வைத்திருந்தேன்.

உங்களுக்கு உண்ண உணவு சம்பளம் எல்லாம் சரியாக வழங்கப்பட்டதா?

6 மாதம் ஒரே கம்பெனியில் இருந்தேன். 3 மாத சம்பளம், விசாவிற்கும் ஹாங்காங், சீனா சென்று வரவும் செலவானது. மீதி சம்பளம் கேட்டபோது உன் விலாசத்தைக் கொடு. சம்பளத்தை அனுப்பி விடுகிறோம் என்று என்னை அனுப்பி வைத்த நிறுவனம் சொன்னது. என் சொந்த செலவுக்குப் பணம் கேட்டபோது, நாங்கள் அரிசி தருகிறோம். மீதியை நீ வேலை செய்யும் இடத்தில் இருந்து எடுத்து வா என்றார்கள். என்னை செய்யக்கூடாத வேலையைச் செய்யச் சொல்கிறீர்களே என்ற போது, இங்கே சீனர்களை தவிர வேறு யாருக்கும் பொருட்கள் தரமாட்டார்கள். வேண்டுமானால் எடுத்துக்கொண்டு வந்து சமைத்துச் சாப்பிடு என்றார்கள். அங்கிருந்த நாட்களில் ஒரு வேளை தான் சாப்பாடு. வேலை முடிய இரவு 2 மணியாகிவிடும். சம்பளமும் சாப்பாடும் தரலாமே என்று கேட்டபோது ஆள் வைத்து மிரட்டினார்கள்.

உங்களுக்கு அங்கு யாரும் உதவ முன்வரவில்லையா?

என்னோடு ஒரு மலையாளி நண்பர் இருந்தார். ஏறத்தாழ என் நிலைதான் அவர்க்கும். அவர் 3,00,000 கொடுத்து ஏமாந்தவர். நாங்கள் இருவரும் நியாயம் கேட்க ஆரம்பித்தோம். ஒரு சீனரின் உதவியோடு நாங்கள் வேலை செய்த நிறுவனத்தில் சம்பளம் கேட்டோம். அவர்கள் எங்களை அனுப்பி வைத்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டதாகவும் அவர்களிடம் கேட்டுக்கொள்ளும்படியும் கூறினார்கள்.

உங்களை அனுப்பி வைத்த நிறுவனம் உங்களுக்கு உதவியதா?

நாங்கள் வேலை பார்த்த முதலாளியிடம் எங்களை அனுப்பி வைத்த நிறுவனம் பல பொய்களைச் சொல்லி என் கான்ட்ராக்ட்டை ரத்து பண்ண செய்தது. எனக்கு பதிலாக வேறொரு ஆளை அனுப்பியது. என்னை அனுப்பிய நிறுவனம் பாஸ்போர்ட் தராமல் பிரச்சனை செய்தது. நான் என் அம்மாவை தொடர்பு கொண்டு என் நிலையை விளக்கினேன். இந்தியாவில் உள்ள ஏஜெண்டிடம் போலீஸில் புகார் செய்வோம் என்று அணுகியதன் மூலம் எனக்கு பாஸ்போர்ட்டும் சம்பள பாக்கியும் கொடுத்தனுப்பச் சொல்லி இந்திய ஏஜெண்டிடம் இருந்து தகவல் வந்தது. ஆனால் எனக்கு பாஸ்போர்ட் மட்டும் தான் கொடுத்தார்கள். பணம் தரவில்லை. மேலும் இந்த சீனாவில் எவன் உனக்கு வேலை தருகிறான் என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டார்கள்.

நீங்கள் இத்தனை சோதனையிலும் துவண்டு போகவில்லையா?. எப்படி இந்த தடைகளைத் தாண்டி வந்தீர்கள்?

சீனாவில் வேலை செய்தபோது என் வாடிக்கையாளர் ஒருவர் பீச்ஜிங்கில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். என்னை அனுப்பி வைத்த நிறுவனம் என்னிடம் சவால் விட்டபோது அந்த வாடிக்கையாளர் உதவியால் பீச்ஜிங் சென்றேன். அங்கே மாதம் 3000 வெள்ளி சம்பளம். புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனம். அங்கு வியாபாரம் நன்றாக நடந்தால் உன் முதலாளி நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்று அந்த வாடிக்கையாளர் சொல்லி அனுப்பினார். அது ஒரு நட்சத்திர ஹோட்டல். டீ போடும் வேலை எனக்கு. எப்படி வாடிக்கையாளரைக் கவர்வது என்று சிந்தித்தபோது, வாடிக்கையாளர் கண் முன்னே டீ போட்டு கொடுக்க ஆரம்பித்தேன். வியாபாரம் நன்றாக நடந்தது. 4 1/2 ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன்.

உங்கள் சாதனையாக நீங்கள் கருதுவது என்ன?

டீ மாஸ்டரும், டீ கப்பும் வாடிக்கையாளர் கண் முன் வரவேண்டும் என்று நாங்கள் கொண்டு வந்த யுக்தி பிரபலம் அடைந்தது. டிவி, நாளிதழ் எல்லாவற்றிலும் பிரபலமாக வந்து பேட்டி எடுத்தார்கள். 4 1/2 வருட அனுபவத்தில் ஒரு முறை கூட ஒரு துளி டீ கீழே சிந்தியது கிடையாது. இவை அனைத்தையும் தாண்டி என் சாதனையாக கருதுவது, என்னை பல சோதனைக்கு உட்படுத்தி என்னிடம் சவால் விட்டவருக்கு நான் சொன்ன வரிகள் தான்.

“என்னால சீனாவுல இருக்க முடியுமான்னு நீ சொன்ன இப்ப சீனாவுல நானும் ஒரு ஸ்டார்!! உனக்கு நம்பிக்கை இல்லைன்னா வந்து பார்!!” என்று சொன்னேன்.

நீங்கள் இத்தனை சோதனைகளைத் தாண்டி செய்த சாதனையில் கற்றுக்கொண்டது மற்றும் பிறர்க்கு சொல்ல நினைப்பது?

என் பழைய மலேசியா முதலாளி திரு. ராஜேந்திரன் சொல்வார், ” கஷ்டப்படணும். கஷ்டப்பட்டாத்தான் எல்லாம் கிடைக்கும். கஷ்டப்படுகிற நேரத்தில் சோர்ந்து போய்விடக்கூடாது. கஷ்டம் வந்தால் எப்படி வித்தியாசமாக சமாளித்து மற்றவருக்கு முன்னோடியாக வாழ்வது என்பதை உணர வேண்டும்” என்ற வார்த்தைகள் என் அடிமனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. நான் கற்றுக் கொண்டது, மொழி கலாச்சாரம் எல்லாவற்றையும் பொறுத்து எப்படி மனிதர்கள் மாறுபடுகிறார்கள் . குறிப்பாக சீனாவில் சுத்தம், நேர நிர்வாகம் என பலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று கனி என்றால் பீஜிங்கில் பலருக்கு என்னை தெரியும்.

“பொருளாதார வீழ்ச்சி காரணமாக என்னை இந்தியா அனுப்பினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் போக முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் செல்வேன்” என்று நம்பிக்கை தெறிக்க நேர்காணலை முடித்துக் கொண்டார்…

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *