‘வாழ்க்கை ஒரு மாற்றுப்பாதை’

க. அம்சப்ரியா

வாழ்க்கையை எப்படி வாழ்வதென்பது குறித்து நெடுநாட்களாகவே அவனுக்குள் சந்தேகம். காற்று அசைக்கிற மரமாகவும், வலைக்குச் சிக்குகிற மீனாகவும், யார் யாரோ கிழித்தெறிகிற வெற்றுக் காகிதமாகவும் தான் மாறிக் கொண்டிருப்பதாக எப்போதும் அவனுக்குள் இடைவிடாத உறுத்தல்.

தன் ஊரைக் கடந்து அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் மலையடிவாரத்திற்கு துறவியொருவர் வந்திருப்பதாகவும் தன்னைப் போன்றவர்களுக்காகவே அவர் அவதாரமெடுத்திருப்பதாகவும் நண்பர்கள் கூறினார்களென்று கிளம்பியிருந்தான்.

அது மாலைநேரம்! குரு தியானத்திலிருந்தார். காத்திருந்தான்! குரு விழித்ததும் தன் நிலையை எடுத்துச் சொன்னான். உண்மையில் நாக்கு குளறியது. உலகத்தின் மொத்தத் துன்பங்களும் தன்மீது மட்டும் படிந்திருப்பதாக ஒப்புவித்தான்!

“நீ நான்கு நாட்களாவது தங்கியிருந்து படிக்க வேண்டியதாயிருக்கும்”

அவன் சரியென்று ஒப்புக்கொண்டான்.

முதல் நாள் பாடம் துவங்கியது.
“மலை நகர்ந்து கொண்டிருக்கிறது”

இதுதான்! இவ்வளவுதான் பாடம்! வேறொன்றும் சொல்லித்தரவில்லை. பொருள் என்னவென்றும் புரியவில்லை. கேட்கவும் தயக்கமாக இருந்தது. ஒரு நாளும் கடந்துவிட்டது.
இரண்டாம் நாள் அதிகாலையில் இன்றாவது பாடம் உருப்படியாக இருக்குமா என்று மனதில் கேள்வி!
“நதி நின்று கொண்டிருக்கிறது” – பார்த்து வா…..” என்றார்.

அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. நதி எங்காவது நின்று கொண்டிருக்குமா…..? கேட்க நினைத்தான்! எதற்கும் பார்த்து வருவோம் என்று கிளம்பினான். அருகில் நதி இருப்பது அவனுக்குத் தெரியும்.
உண்மையில் நதி வழக்கத்தைவிட இன்று சற்று வேகமாக ஓடிக்கொண்டிருந்ததாக உணர்ந்தான்! மூன்றாம் நாள் காலையில் இனி திரும்பி விடுவதென்று கூட யோசித்தான். இவன் இருந்த இடம் தேடியே குரு வந்துவிட்டார்.

“குளம் ஓடிக்கொண்டிருக்கிறது…. பிடித்துக் கொள்” என்றார்.

பாடம் கற்க வந்தவனுக்கு சினம் பெருக்கெடுக்கத் துவங்கியது. தன்னை ஏமாற்றுகிறாரா…..? தான்தான் பைத்தியத்திடம் மாட்டிக் கொண்டோமோ என்று குழப்பத்தில் மூழ்கினான்! பாடம் படிக்க வந்த இடத்திலும் குழப்பமா….?
இன்று குளத்தைப் பார்க்க எப்படியும் முப்பது மைல் தூரம் கடந்து போகவேண்டும்! இது தேவையற்ற வேலை என்று அவ்வெண்ணத்தைக் கைவிட்டான்.
நான்காம் நாள் பாடம் துவங்கியது.

“மழை வானத்திற்குத் திரும்புகிறது” என்றார்.

குருவிற்கு பைத்தியம்! அது இப்போது முற்றிப்போய்விட்டது என்ற நிலைக்கு வந்திருந்தான். எப்படியாவது கிளம்பிவிடலாமென்று முடிவானான்.
குரு தன்னை அழைத்து வரச்சொன்னதாக சீடன் ஒருவன் சொல்ல, குருவின் இருப்பிடத்திற்கே வந்தான்.
“பாடம் முடிந்து விட்டது…. சந்தேகம் இருந்தால் கேள்….” என்றார்.

என்னத்தைச் சொல்வான் அவன்! இதுவரை எதுவுமே புரியாமல்தானே கடந்து கொண்டிருந்தான்!

“இதுவரை நீங்கள் கூறியது எதுவுமே புரியவில்லை” தயக்கமாகக் கூறினான்.

“மற்றவர்களின் சொற்களுக்கான பொருளை தங்களின் மூளையைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். இதுதான் உன் பிரச்சனையும்…! நீ மலை போன்ற சக்தியுடையவன். ஆனால் மனதளவில் நகர்ந்து கொண்டேயிருக்கிறாய்… அதனால் நிறைய இழக்கிறாய்…. அதைத்தான் மலை நகர்ந்து கொண்டிருக்கிறது”… என்றேன்.

“நதிபோல் சிந்தனை நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். நீயோ நகர வேண்டிய இடத்தில், பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறாய். துன்பங்களும் உன்னைவிட்டுப் போக மறுக்கின்றன.

சில இடங்களில் எல்லோரின் கருத்துகளையும் நிதானமாக கவனிக்க வேண்டும். குளத்தில் சலனம் குறைவு. நீயோ சலனங்களாலும், சபலங்களாலும் அலைக்கழிக்கிறவனாக இருக்கிறாய்! அதைத்தான் குளம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றேன்”.

“மழை திரும்பிக் கொண்டிருக்கிறது” என்பதற்கு நீயே யோசித்துக் கண்டுபிடி… பாடமும் முடிந்துவிட்டது…. நீ… ஊர் திரும்பலாம்….”

எல்லாவற்றையும் யாராவது சொல்ல வேண்டும்! நமக்கான பாதையைக் காட்ட வேண்டும் என்று காத்திருக்கிறோம்! எல்லோர்க்குள்ளும் பாதைக்கான வெளிச்சமும் பயணத்திற்கான துணையும் அமிழ்ந்திருக்கிறது. அதைக் கண்டறிகிறபோது, வாழ்க்கையின் அப்போதைய பயணத்திற்கு இன்னொரு மாற்றுப் பாதையும் காத்திருக்கும்! மாற்றுப் பாதையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கைப் பயணம் வண்ணக்கோலம்!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *