– ஸ்வாமி தேவ ஜோதிர்மய
வாழ்க்கையை கற்பிப்போம் – தொடர் 3
உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர்
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.
பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். 20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.
அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.
11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்?
அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள்.
சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்?
ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.
அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.
20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.
சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.
பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.
படிப்பதோடு நின்றுவிடாமல் பயிற்சி செய்து பார்க்க ஒவ்வொருமாதமும் உங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க் வழங்கப்படும். அதை மறக்காமல் பயிற்சி செய்யுங்கள்.
இந்த மாத ஹோம் ஒர்க்: எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு
மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள். இது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.
athi
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது
Mahalakshmi
this story very intersting and useful for parents and students.
Thank u
By
Maha
Mahalakshmi
nice story
p.karthikeyan
useful story in life