ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு – 2

– சாதனா

என் இனிய மாணவ நண்பர்களே!

எல்லோரும் நன்றாகப் படித்து நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா?

பெரும்பாலான மாணவர்கள் என்னிடம் வருத்தப்படுவதுண்டு. ‘நான் 95 மார்க் எடுத்தாக்கூட எங்க வீட்டுல பாராட்ட மாட்டாங்க. ஏன் 5 மார்க் குறைஞ்சதுன்னுதான் கேட்பாங்க’.

இன்னும் சில மாணவர்கள் இருக்கிறார்கள். 45 மார்க்தான் வாங்குவார்கள். தங்களால் அவ்வளவுதான் முடியும் என்று முடிவே செய்துவிடுவார்கள். ஆனால் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற ஆசையால் தன்னைப்பற்றி தாழ்வாக நினைப்பார்கள். அதன் பிறகு யாராவது நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று அவர்கள் முன்னால் பேசினால் இதெல்லாம் நம்மால் முடியாது. இவர்கள் சொல்வது நமக்கு இல்லை என்று ஒதுங்கிவிடுவார்கள்.

இந்த இரண்டு வகை நண்பர்களுக்கும் சேர்ந்து ஒரே உதாரணம்.

உங்கள் வீட்டிற்கு டிவி வாங்குகிறீர்கள். டீவி-யைபோட்டு பார்த்தால் படம் துல்லியமாக தெரியவில்லை. கொஞ்சம் கிரைன்ஸ் வருகிறது. கடைக்காரரிடம் கேட்டால் 5 சதம்தானே காட்சியில் குறை இருக்கிறது. அப்படியே அதே டிவியை வைத்துக்கொள்ளுங்கள் என்றால் ஏற்றுக்கொள்வோமா?

நாம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட 100 சதவீதம் முழுமையாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அந்தப் பொருட்களைவிட மேலானவர்கள் இல்லையா நாம்? பொருட்களே நூறு சதவீதம் ரிசல்ட் தரவேண்டும் என்றால் நாம் 100 சதவீதத்திற்கும் மேலாக அல்லவா ரிசல்ட் தர வேண்டும்?

எனவே படிப்பில் மட்டுமல்ல, நான் எதை செய்தாலும் 100 சதவீதம் ரிசல்ட் கொடுப்பேன் என்று முடிவு செய்யுங்கள்.

உனக்கு நீயே உயர்வாக……

மாணவர்களின் புரிதல் திறனை சோதிப்பதற்காக, எதற்காக நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று மாணவ நண்பர்களை நான் கேட்பதுண்டு.

நூற்றுக்கு நூறு வாங்கினால்தான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நம் திறமை எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான பதில்கள் இதே மாதிரிதான் இருக்கும்.

இதெல்லாம் சரிதான் என்றாலும், உங்களை நூற்றுக்கு நூறு வாங்கச் சொல்வது உங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களை நீங்களே மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் நண்பர் நூற்றுக்கு நூறு வாங்கினால் உங்கள் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுவே நீங்களும் நூற்றுக்கு நூறு என்றால் எவ்வளவு பெருமையாக இருக்கும்.

மதிப்பெண் பெறுவது மட்டுமே திறமை அல்ல…. என்றாலும் மதிப்பெண் பெறத்தேவையான திறமையும் நம்மிடம் இருக்கிறது. அதை சுலபமாக அடையும் ஆற்றலும் நம்மிடம் இருக்கிறது என்கிறபோது அதையும்தான் ஒரு கை பார்த்துவிடுவோமே என்று சிந்தியுங்கள்.

நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லும்போது இனி எரிச்சலடையாதீர்கள். அவர்கள் உங்கள் உன்னதத்தை உங்களுக்கு நினைவு படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால். ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *