சறுக்கலில், ஊன்றுகோல்!

தே. சௌந்தரராஜன்

வழுக்கலில் ஊன்றுகோல்
(Don’t slip. Have a grip)

நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் நம் மனதில் பலவித

உணர்வுகளைத் தூண்டுகின்றன. இந்த உணர்வுகளின் பாதிப்பு நம் எண்ணங்களிலும், நம் செயல்களிலும் பிரதிபலிக்கின்றன.

கடல் அலைகள் மாறி மாறி பொங்கினாலும் ஆழ்கடல் அமைதியாக இருப்பதுபோல இந்த உணர்வுகளால் பாதிக்கப்படாத நிலையில் நம் அறிவை பாதுகாக்க வேண்டும். உடலில் எத்தனை குலுக்கல்கள், அதிர்வுகள் வந்தாலும் மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை பாதுகாப்பாக அசையாமல் இருப்பதுபோல உணர்வுகளின் பாதிப்பில் அறிவு தள்ளாடாமல் நாம் அதை பாதுகாக்க வேண்டும். அப்போது உணர்வுகளின் தாக்கம் நம் வெற்றியை பாதிக்காமல், நாம் வாழ்வின் வெற்றியை முன்னெடுத்து செல்ல முடியும்.

தெளிவற்ற நிலை

தேவையான வெளிச்சமற்ற ஒரு அரை இருட்டில் கயிறு பாம்பு போலவும், பாம்பு கயிறு போலவும் தோன்றலாம். விழிப்பற்ற தூக்க மயக்கம், மது மயக்கம், மாதர் மயக்கம் இதுபோன்ற வேளைகளில் நம் அறிவு மங்கிப்போகிறது. இந்த நேரங்களில் எந்த முடிவும் எடுக்காதிருப்பது உத்தமம்.

தெரிந்தோ தெரியாமலோ மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் தன்னையும் தன் மதிப்பு மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழி, வாயைத் திறக்காமல் உடனடியாக தன் வீட்டுக்குச் சென்று தூங்கிவிடுவதுதான்.

சில காட்சிகளைக் கண்டோ, சிலர் சொற்களை கேட்டோ நாம் எந்த முடிவும் கொள்ளலாகாது.

“கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரித்து அறிவதே மெய்”.

உணர்வுகளின் ஆதிக்கம்

ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பார்வையும் அதன் ஆதிக்கமும், ஒவ்வொரு ராசிக்கும் மாறி மாறி வருகிறது. அதுபோல மனிதர்களிடமும், உணர்வுகளின் ஆதிக்கம் மாறி மாறி வருகிறது. நாம் எப்போதும் ஒரே வித உணர்வில் வாழ்வதில்லை. ஒரு வேளை உற்சாகம் பொங்கி எழும். மறு வேளை சோர்வு தோன்றும். இதுபோல கோபம், எரிச்சல், பயம், விரக்தி, கவலை, ஆசாபாசம் என்று மனநிலை மாறி மாறி வரும்.

“குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது போல ஒரு வித மன நிலையில் எடுக்கும் முடிவுகள் மாறுபட்ட மனநிலைக்கு ஒத்து வருவதில்லை. நாம் களிப்பான மன நிலையிலோ, கடுகடுத்த மனநிலையிலோ யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்கக் கூடாது.


அந்தோ பரிதாபம்

ஒரு இளம்பெண் தன் கணவனிடம் சண்டையிட்டு கொதிப்படைந்தாள், விரக்தியுற்றாள். ஆத்திரத்தின் உச்சத்தில் அவசர கோலத்தில் தன்னை தீக்கிரையாக்கினாள். பாதி வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மருத்துவர்கள் யாவரும் கை விட்டு விட்டனர். அந்த நிலையில் அவன் தன் கணவனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள். எப்பாடு பட்டாவது என்னை காப்பாற்றுங்கள். உங்களோடும் நம் குழந்தைகளோடும் வாழ விரும்புகிறேன் என்று கதறினாள். ஆனால் அவள் ஆசை நிராசையானது.

விரக்தியின் உச்சத்தில் எடுக்கும் முடிவு வாழத் துடிக்கும் ஏக்கத்தில் எடுக்கும் முடிவுக்கு எதிராக உள்ளது.

ஆத்திரம் பொங்க, அறிவுமங்க அரிவாளைத் தூக்கி, தலைகளை கொய்து, சிறைகளில் வாடும் சில உணர்ச்சிமிக்க மனிதர்கள் இன்று நல்வாழ்வுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.

எப்படி முடிவுகள் எடுப்பது?

முடிவுகளை எடுக்க எண்ணும்போது இப்போது நாம் என்ன முடிவு எடுக்க நினைக்கிறோமோ அதை ஒரு குறிப்பேட்டில் எழுதவும். மீண்டும் ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் சென்றபின் என்ன முடிவு தோன்றுகிறதோ அதையும் குறிப்பேட்டில் குறிக்கவும். பின் ஒரு வாரம் சென்றபின் அந்த இரு முடிவுகளையும் தற்போதைய மனநிலையில் பரிசீலித்து முடிவான முடிவு எடுக்கவும்.

காதல் மயக்கம்

காதல் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் காதலர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். காதல் என்ற மலர் சீக்கிரமே வாடி விடுகிறது. தேய்பிறை போல காதலும் சீக்கிரமே தேய்ந்து போகிறது. அந்த நிலவொளியில் காதலர்களின் மேல் உள்ள கரும்புள்ளிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. காதல் மயக்கம் மறையும்போது அந்த கரும் புள்ளிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

சுதியும் தாளமும் கலந்தால் இனிய சங்கீதம். பாச உணர்வும், மோக உணர்வும் கலந்ததே காதல் என்னும் இனிய சங்கீதம். இதில் ஏதோ ஒன்று மறைந்தால் காதல் கரைந்துவிடும்.

துணையைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியது

கருத்துக்கள், ரசனைகள், ஈடுபாடுகள் ஒத்து இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால்கூட தப்பில்லை. ஆனால் பொறுப்புணர்வு, சிரத்தை உணர்வு (Sincerity) புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உடமைத் தனம் இல்லாது (Possessiveness) அன்பு செலுத்தும் குணம் இவைகள் இருந்தால் என்றும் நிம்மதி.

ஏற்றுக்கொள்ளுதலும் ஒப்புவித்தலும் நல்ல காதலின் இரு பரிமாணங்கள். ஏற்றுக் கொள்ளுதல் என்றால் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளுதல். மலரில் முள் இருப்பதுபோல எல்லோரிடமும் நிறையும் குறையும் இருக்கும். அந்த குறையைக்கண்டு முகம் சுளிக்காமல், மனம் வெறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒப்புவித்தல் என்றால் அவர்களுக்காக தன்னை அர்ப்பணித்தல். தன் சுக துக்கங்களை சற்று தியாகம் செய்தல்.

எட்டத்தில் இருக்க (Keep Distance)

“கிட்ட வந்தால் முட்ட பகை” “கிட்ட வந்தால் முட்ட வரும்” என்ற பழமொழிகள் மனிதர்களிடம் சற்று எட்ட இரு என்று நமக்கு உணர்த்துகின்றன. யானைகள் பிரமிப்பாக இருக்கலாம். காளைகளும் குதிரைகளும் துறுதுறுவென்று அழகாக இருக்கலாம். சற்று எட்ட இருந்து ரசித்தால் பாதுகாப்பு உண்டு. கிட்டச் சென்றால் பாரதி போல தொட்டுப் பார்த்தால் ஆபத்து.

குளிர் காலங்களில் நெருப்பில் குளிர் காயலாம். அதற்காக இன்னும் நெருக்கமாகச் சென்று கட்டியணைக்க முடியுமா? கதிரவன் உயிர்களின் காவலன் அதற்காக பூமி இன்னும் நெருங்கினால் ஆபத்தல்லவா? சூரியனில் இருந்து பூமி சரியான தூரத்தில் உள்ளது.

இது போலவே நாம் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மிகச் சரியான தூரத்தில் இருக்க வேண்டும். அந்த தூரத்தை நாம்தான் சரியாக நிதானிக்க வேண்டும். அப்போது மன வருத்தங்களை தவிர்க்கலாம்.

நேர்மை:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு சரியாக உள்ளதா என அவ்வப்போது சரி பார்க்கிறோம். அதுபோல, நேர்மை, நியாயம் நம்மிடம் சரியாக இருக்கிறதா என அவ்வப்போது பார பட்சமின்றி சோதித்து சரி பார்க்க வேண்டும். நமக்காக மட்டுமல்ல நம் நண்பர்களுக்காக, நம் உறவினர்களுக்காக, நமக்கு மிக மிக நெருக்கமானவர்களுக்காக, நம் இனத்துக்காக, நம் மதத்துக்காக, நாம் எப்போதும் நேர்மை, நியாயம், தவறக்கூடாது என்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்க வேண்டும். நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம் நம் எதிரிகளுக்கு ஒரு நியாயம் என்று வேறுபாடு காட்டக்கூடாது, நம்மவர்கள் மேல் நாம் கொண்ட அளவற்ற பாசம் நம்மை நேர்மை தவறி நடக்க நாம் அனுமதிக்கலாகாது.

அந்த நேர்மை நம்மை சிகரத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். காந்தியின் நேர்மையால் அவர் எதிராளிகளும் அவரை பாராட்டினார்கள். உலகம் போற்றும் உத்தமரானார்.

நட்பும் பகையும்

இருபடங்கள் கலந்துள்ள ஒரு அட்டைப்படத்தை வைத்து குழந்தைகள் விளையாடுவதுண்டு. சாதுவான மானும் கொடும் புலியும் அந்த ஒரே படத்தில் பாதி பாதியாக மாறி மாறி கலந்திருக்கும் ஒரு பாதியை மறைத்தால் மான் படம் தெரியும். மறைத்த பாதியில் மானின் மீதி படம் இருப்பதாக நினைக்கத் தோன்றும். மறுபாதியை மறைத்தால் வேங்கை படம் தெரியும். மறைக்கப்பட்ட பகுதியில் வேங்கையின் மற்ற பகுதி இருப்பதாக நினைக்கத் தோன்றும். ஆனால் நம் எண்ணம் போல் உண்மை இல்லை. இரண்டிலும் பாதி பாதிதான் உள்ளது. எதுவுமே முழுமையாக இல்லை.

ஒவ்வொரு மனிதனும் வேங்கை பாதி, மான் பாதியாக உள்ளான். சிரிக்கும் பகுதி பாதி, சீறும் பகுதி பாதி. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தான் மனிதன்.

நம்மிடம் ஒரு மனிதன் நல்லுறவு கொள்ளும்போது அவனது நற்குணங்கள் நமக்கு புலப்படுகின்றன. அப்போது தீய குணங்கள் பின்னால் இருக்கின்றன. அவனே பகையாளி ஆகும்போது மறுபாதி முன்னுக்கு வருகின்றன. நற்குணங்கள் பின் தள்ளப்படுகின்றன.

ஊடுருவிப் பார்க்கும் (X Ray) கண்கள் பெற்ற நபர்கள் இரு குணங்களையும் ஒருசேரப் பார்க்கிறார்கள். நண்பனின் நடவடிக்கை அவன் பகையாளியிடம் எப்படி இருக்கிறது என்பதை உற்று நோக்கினால் அவனது மறு பகுதியும் நமக்குத் தெரியவரும்.

எதிரிகள்:

தன் சொற்களாலும், செயல்களாலும் இடைவிடாது எல்லைமீறி நம்மை எரிச்சலூட்டிக் கொண்டிருப்பவர் சிலர், நம் அருகில் இருக்கும் இன்னும் சிலர் இந்த செயல்களை பெரிதுபடுத்தி சண்டையிட நம்மை உசுப்பேற்றிக் கொண்டிருப்பர். இந்த இரு வகையான தூண்டுதல்களையும் ஒதுக்கிவிட்டு முழு நிதானத்துடன் பொறுமை காக்க வேண்டும். இந்த உளிகளின் அடிகள் நம்மை சிதைப்பதற்கு அல்ல. கல்லான நம்மை சிலையாக்க, இறைவனால் அனுப்பப்பட்ட உளிகள் இவர்கள். ஆகவே பொறுத்துக் கொள்வோர் ஜொலிப்பார்கள்.


விட்டுக் கொடுத்தல்

நம் நீண்ட நாளைய நட்புகள், உறவுகளின் சில சொற்கள் நம் அகந்தையை சீண்டி நம்மை பொங்கி எழச் செய்கிறது. அதற்கு பதிலாக நமது நடவடிக்கைகள், நாம் நீண்ட நாட்களாக போற்றி வளர்த்த நட்பும், பல தியாகங்களால் உருவான அந்த உறவுப் பாலமும் உடைய காரணமாகிறது. இது போன்ற நேரங்களில் சற்று பொறுத்துக் கொண்டால், சற்று இறங்கிச் சென்றால் அந்த நட்புப்பாலம் காக்கப்படும். பெரிய இழப்புகள் தவிர்க்கப்படும். யார்விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள். அதன் நம்மை இருவருக்கும் உண்டு. அதன் பெருமை விட்டுக் கொடுத்தவருக்கே சேரும்.

தண்டனை:

நாம் யாரையும் தண்டிக்க நேர்ந்தாலும் அந்த வேளையில் துளிகூட அவர்கள் மீது வெறுப்பின்றி இரக்கத்தோடு செயல்படவேண்டும். நீதிபதி தண்டனை வழங்கும்போது தன் கடமையைச் செய்கிறார், குற்றவாளி மீது வெறுப்பு கொள்வதில்லை.

ஒரு கொசுவை அடிப்பதாக இருந்தாலும் மிகுந்த இரக்கத்துடனே அதைச் செய்ய வேண்டும். அதுவும் இறைவனின் ஒரு அங்கமே. எப்போதும் நாம் எல்லை மீறிச் செல்லாமல் நம்மை தடுப்பது இந்த நல் உணர்வே. மிக மிக தேவைப்பட்டாலன்றி தண்டிப்பதோ, நீதி வழங்குவதோ, குற்றம் சாட்டுவதோ நம் வேலையில்லை.

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே!
– பாரதியார்

தூண்டலும், துலங்கலும்

தினம் தினம் நாம் பல தூண்டல்களை சந்திக்கிறோம். அதற்கு எப்படி மறுவினை செய்கிறோம் என்பதில்தான் நமது வாழ்வின் வெற்றி அமைகிறது.

திரைப்படத்தின் சுவரொட்டிகள், உணவின் வாசனைகள், தொலைக் காட்சிகள், பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் மட்டுமல்ல பிறரின் பாராட்டுக்கள், திட்டுதல்கள் யாவும் நம்மை தூண்டுகின்றன. தேவையற்ற பயனற்ற தூண்டுதல்களை ஒதுக்கித்தள்ள தெரிய வேண்டும். அந்த தெளிந்த ஞானம் நமக்கு வேண்டும்.

ஆனந்தத்தில் திளைக்கும்போதும், அவமானப்படும்போதும், புகழப் படும்போதும், வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதும் அதிகாரங்கள் நிறைந்த பதவியை அலங்கரிக்கும் போதும், அதிர்ச்சியூட்டும் தகவல்களை கேட்கும்போதும், எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போதும் எப்போதும், எந்நேரமும், நமக்குத் தேவை நிதானம், கவனம், எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *