அப்துல் கலாமின் அலை அடிக்கடி வீசுகிறது. ஏன் தெரியுமா? அவர் ஒரு சரித்திரம் மட்டுமல்ல. சமுத்திரமும் கூட!! அவர் எப்போதும் சொல்லும் விஷயங்கள் போலவே எப்போதாவது சொல்லும் விஷயங்களும் மிகவும் முக்கியம். தன் வாழ்க்கை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் அந்த ரகசியங்களை
சிந்தித்தால் இந்தியா வல்லரசாகும் வரை பொறுக்காமல் நாம் வல்லவர்களாய் வளரலாம்.
இதோ… கலாமின் அந்த மந்திர வாசகங்களிலிருந்து வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரங்களை உணர்வோம்.. வாருங்கள்!!
“கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்”.
இது அப்துல்கலாமின் அறைகூவல்களில் ஒன்று.
இந்த வாசகத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து பாருங்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எதனை விடவும் நாம் பெரியவர்கள் என்று எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்??
தோல்விகள் வந்தால் துவள்கிறோம். சரிவுகள் வந்தால் சரிகிறோம். இழப்புகள் வந்தால் இடிகிறோம். இந்த மனநிலையிலிருந்து மீள்வது எப்படி? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
கடந்தகாலச் சறுக்கல்கள் பலவற்றின் போது பலமாகப் பதறியிருக்கிறோம். ஆனால் நாம் பயந்த அளவுக்கு அடி பலமாக இல்லை. அதிலிருந்து மீண்டிருக்கிறோம். சிலரை வாழ்வில் இழந்திருக்கிறோம். அதற்குப் பிறகும் வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாயின?
கடவுளின் குழந்தை என்பதால் நமக்கு நேர்ந்த பல விஷயங்களை விடவும் நாம் பெரியவர்கள். எனவே இந்த மீட்சிகள் நமக்கு நிகழ்ந்திருக்கின்றன.
வேலைக்குத் தொடர்ந்து பேருந்தில் போகிற ஒரு மனிதர் பேருந்தின் இடிபாட்டில் நசுங்கி பிதுங்கி, தாங்கவே முடியாமல் தவணை முறையில் இரு சக்கர வாகனம் வாங்குகிறார். வெய்யிலிலும் மழையிலும் பயணம் செய்யும் சோதனையிலிருந்து மீண்டுவர நான்கு சக்கர வாகனம் வாங்குகிறார். தனக்கு நேரும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய சவால்களின் போதும், அதைவிடத் தான் பெரியவர் என்கிற உணர்வு தெரிந்தோ தெரியாமலோ உந்தித்தள்ள தன் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்.
ஆனால் கண்ணுக்குத் தெரிந்த பெரிய சிக்கல்கள் வருகிறபோது மனிதர்கள் அச்சத்தாலும் பீதியாலும் தங்கள் அடிப்படையான பலங்களை மறக்கிறார்கள். அவர்களே தோல்வி வயப் படுகிறார்கள். எந்தப் பிரச்சினையை விடவும் நாம் பெரியவர்கள் என்று மட்டையடியாக நம்புவது தலைக்கனம். “கடவுளின் குழந்தை என்பதால்…” என்ற விழிப்புணர்வு, நம்பிக்கையின் வெளிப்பாடு. நம் சக்தியை உணர்ந்து, அதே நேரம் நம்மினும் பெரிய சக்தியின் வழிகாட்டுதலையும் உணர்வதால் பணிவு கலந்த நம்பிக்கையாய் இந்த நல்லுணர்வு பரிணமிக்கிறது. அப்படியானால், கடவுளின் குழந்தை நாம் என்கிற உணர்வுடன் சவால்களை சந்திப்பது எப்படி? இதற்கும் கலாம் சொல்லும் ரகசியமே கைகாட்டுகிறது. “நம்மைப் படைத்த கடவுள், நம் மனங்களிலும் ஆளுமைகளிலும் மகத்தான சக்திகளையும் திறமைகளையும் பொதித்து வைத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து, வெளிக்கொணர்ந்து செயல்படுத்த பிரார்த்தனை வழிவகுக்கிறது” என்கிறார் அப்துல் கலாம்.
பிரார்த்தனை என்பதற்கு ஆங்கிலத்தில் இன்வோகேஷன் என்றொரு சொல் உண்டு. உள்முகமாய்த் திரும்புதல் என்பதே இதன் பொருள். தனக்குள் பொதிந்திருக்கும் தெய்வீக சக்தியையும் ஆற்றலையும் தேடிக் கண்டடைதலே பிரார்த்தனை. ஆன்மீகத்தில் ஆழ்ந்த பலரும் ஆற்றல் பொருந்திய ஆன்ம வீரர்களாகப் பரிமளித்திருக்கிறார்கள். “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்” என்று முழக்கமிட்ட திருநாவுக்கரசரானாலும் சரி. அன்றாடம் பிரார்த்தனைக் கூட்டங்கள் நிகழ்த்தி தன் ஆன்மபலத்தைப் புதுப்பித்து அந்நியர்களை அலறச் செய்த காந்தியடிகளானாலும் சரி. பிரார்த்தனையின் பொருளுணர்ந்து செய்தவர்கள் இவர்கள்.
நம்மில் பலருக்கு பிரார்த்தனை என்றால் கடவுளுக்குக் கோரிக்கை மனு கொடுப்பது என்பதாகத்தான் பொருள். கோயில்களில் பலரின் பிரார்த்தனைகள் மூன்று வாசகங்கள்தான் என்பார் சத்குரு ஜகி வாசுதேவ். “அது கொடுப்பா! இது கொடுப்பா! காப்பாத்துப்பா!” என்ற மூன்று வாசகங்களுடன் வழிபடப் போகிறவர்கள் அநேகம் என்பது அவரின் கருத்து.
பிரார்த்தனையை நம்மிடம் இருக்கும் பலங்களைக் கண்டுணரும் மார்க்கங்களாக ஆக்கித் தருபவை யோகம், தியானம் ஆகியவை. நவீன உலகில் இவை செல்வாக்கு பெற்று வருவது மிகவும் ஆக்கபூர்வமான அம்சம்.
இந்த வரிசையில் கலாம் சொல்லும் சொல்லும் இன்னொரு வாழ்க்கை ரகசியம். நம் குழந்தைகள் நலனை மனதில் கொண்டது. “நம் குழந்தைகளின் நாளைகளுக்காக, நாம் நம் இன்றுகளைத் தியாகம் செய்வோம்” என்கிறார் கலாம்.
நம்மில் பலருக்கு குழந்தைகளை கவனிப்பதென்றால்.. அவர்களை மருத்துவரிடம் அழைத்துப் போவதும் டியூசனுக்கு அழைத்துப் போவதும்தான். அவர்களின் விருப்பங்கள், திறமைகள், தேடல்கள் ஆகியவற்றுக்காக நேரத்தையும் கவனத்தையும் செலவு செய்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.
இந்தச் சின்ன விஷயத்தில் தொடங்கி நாளைய தலைமுறைக்காக மரம் வளர்ப்பது, விலங்குகளை காப்பது போன்ற விழிப்புணர்வுகள் வரை அடுத்த தலைமுறைக்காக ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை.
இன்று குழந்தைகள் நலன் கருதி தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட தியாகம் செய்யப் பலரும் தயாராக இல்லை. கலாம் சொல்லும் இந்த ரகசியம் காலத்தின் கட்டாயம்.
இதுபோல் பலவற்றில் ஈடுபடுகிற மனிதர்கள் கூட காலப்போக்கில் சோர்வடைகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “என்ன செஞ்சு என்ன? நம்ம செயல்களுக்கு யாருமே துணை கிடையாது” என்பதுதான். இந்த சலிப்பாலேயே பலரும் தங்கள் சிறகுகளை சுருக்கிக் கொள்கிறார்கள். இதற்கு அப்துல்கலாம் சொல்லும் சூத்திரம் மிக அற்புதமானது. “ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். நாம் யாருமே தனியாக இல்லை. இந்த பிரபஞ்சமே நம்முடன் நட்பு கொண்டிருக்கிறது. கனவு காணவும் செயல்படவும் தயாராய் இருப்பவர்களுக்கு மொத்தப் பிரபஞ்சமே துணை நிற்கிறது” என்கிறார் கலாம்.
பிரபஞ்சத்தை விட பெரிய சக்தி நமக்குத் துணையாக வரமுடியுமா என்ன? நம்முடைய சக்தியை உணர்ந்து, நம்முடைய கடமையை அறிந்து நம்முடைய இலக்குகளை நோக்கி உழைத்தால் வாழ்க்கை வசப்படும் இதுவே கலாம் சொல்லும் வெற்றி ரகசியம்!! பெயர் பொறாமை.
Revathi
Thankyou Kalam Sir Helpful this Matter thankyou Verymuch