– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்
திருக்குறளில் புதிதாக எதுவும் விளக்கம் சொல்லிவிட முடியாது. அத்தனை விளக்கங்கள் அறிஞர்கள் பலரால் சொல்லப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு அதிகாரத்தின் கீழுள்ள குறட்களை, அந்த அதிகாரத் தலைப்புக்கு ஏற்றவாறு பொருள் கண்டும் மகிழலாம்; அதிகாரத் தலைப்பை மறந்து பொதுப்படையாகவும் பொருள் கண்டு மகிழலாம்.
“இலர் பலராகிய காரணம், நோற்பார்
சிலர்; பலர் நோலாதவர்”
என்னும் குறள் ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. தவத்தின் பெருமைகளைச் சொல்வதாக இக்குறளுக்கும் பொருள் காண்பது இயல்பானது. இதைத்தவிர, “கடினமான முயற்சி செய்பவரே நினைத்த காரியத்திலும் எடுத்த செயலிலும் வெற்றி பெறுகிறார்கள்” என்று பொதுப் பொருளும் கொள்ளலாம்.
குறளின் பெருமை இது. ஒரு குறளை, அதன் அதிகாரத் தலைப்பிலிருந்து பிரித்து பொருள் காண்பது மட்டுமல்ல; ஒரு முழுக்குறளை எடுத்து உடைத்து, பாதியை மட்டும் பிரித்து எடுத்தும் பொருள் காணலாம்.
முதல் வரியில் நான்கு சொற்கள்; இரண்டாம் வரியில் மூன்று சொற்கள் மட்டுமே உள்ள குறளில் இது சாத்தியமா என்ற ஐயம் எழுவது இயல்பு. ஆனால் அதுதான் குறளின் சிறப்பே!
குறள் பற்றி இவ்வளவு விரிவாக அடிப்படை போடுவதற்குக் காரணம் என்ன என்ற ஐயம் உங்களுக்கு எழலாம்! “நிற்க அதற்குத் தக”, என்ற மூன்று சொற்கள் எழுப்பிய சிந்தனைதான் காரணம்.
இந்த வரி, எந்தக் குறளில் வருகின்றது என்பதை அறியாதார் இருக்க முடியாது. ‘கற்க வேண்டியவற்றை ஐயமின்றி கற்று, கற்றதன்படி வாழவேண்டும்’ என்று வலியுறுத்தும் குறளின் இரண்டாம் அடிதான் இவ்வரி. முதல் வரியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, இரண்டாம் வரியை மட்டும் சிந்தித்துப் பார்த்தபோது இன்னும் ஆழமான பொருள் தோன்றிப் பரவச மூட்டியது!
நிற்க அதற்குத் தக! இந்த மூன்று சொற்களை படித்தவுடன் தோன்றும் கேள்வி, ‘நிற்க எதற்குத் தக?’ என்பதுதான். எதற்குத் தக்கவாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் விளக்கம் சொல்லி மாளாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்; “எது, எதுவாக இருக்க வேண்டுமோ; அது, அதுவாக இருக்க வேண்டும்”. “எவர் எவராக இருக்க வேண்டுமோ; அவர் அவராக இருக்க வேண்டும்”.
சற்று குழப்பமாக இருக்கிறதல்லவா? உதாரணத்திற்கு, இப்படிப் பார்க்கலாம். ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் வரவேற்புரை; ஒரு தலைமையுரை; ஒருவர் முன்னிலை; ஒருவர் வாழ்த்துரை; ஒரு சிறப்புரை, ஒருவர் நன்றியுரை. இந்தக் கூட்டம் நன்றாக நடைபெறுவதாக எப்போது கூறுவீர்கள்? சரியான நேரத்திற்குத் தொடங்கி இருக்க வேண்டும். மேடைக்கு வரவேண்டியவர்களை மதிப்புடன் மேடையேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, வரவேற்புரை 5 நிமிடங்களில் முடிதல் வேண்டும். எல்லா முன்னேற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தால் சிறப்புச் செய்தல் என்னும் சடங்கு 5 நிமிடங்களில் முடிந்துவிடும்.
முன்னிலை என்று அழைப்பிதழில் ஒருவர் பெயர் அச்சிட்டிருந்தால் அவர் 5 நிமிடத்திற்கு மேல் ஒலிபெருக்கி முன் நிற்கக்கூடாது என்று பொருள். தலைமையுரை 15 நிமிடங்களில் முடியலாம். வாழ்த்துரையும் 15 நிமிடங்களில் முடிதல் நலம். ஒரு மணி நேரம் அல்லது நேரத்தைப் பொறுத்து 15 நிமிடங்கள் கூடுதலாக சிறப்புரை அமையலாம். பின் நன்றியுரை; நாட்டுப் பண் அல்லது மொழி வாழ்த்துடன் 2 மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்தால் விழாவிற்கு வந்தவர்கள் மகிழ்வார்கள்.
பேசுபவர்கள் சுமாராகப் பேசினாலும் விழாவின் திட்டமிடலும் தேவைப்பட்டால் தொகுப்புரையும் 2 மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்தலும் ‘சிறப்பான விழா’ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். பேச்சாளர்களும் நன்றாகப் பேசுதல் கூடுதல் சிறப்பைச் சேர்க்கும்.
‘எவரேனும் வரவேண்டியுள்ளது’ என்று விழா தொடங்குவதைத் தாமதித்து; ‘மேடையேற்றம் செய்பவர்’ 15 நிமிடங்கள் பேசி; அவசரத்தில், மேடைக்கு வரவேண்டியவர் ஓரிருவரை விடுத்து; தமிழ்த்தாய் பாடும்போதே ஒலிநாடா தகராறு செய்து; வேறு எவரையேனும் பாடச் சொல்லி; வரவேற்புரை செய்பவர் 20 நிமிடங்கள் பேச முன்னிலை வகிப்பவர் எழுதிக் கொண்டு வந்ததைத் தட்டுத்தடுமாறிப் படித்து முடித்து; தலைமையுரையின்போது, ஒலி பெருக்கி தொல்லை செய்து அலறி; ‘விழாவில் சுருக்கமாகப் பேசுவது எப்படி?’ என்பதைப் பற்றித் தலைவர் 40 நிமிடங்கள் பேசி, மேடையில் இருப்பவர் கீழே உள்ளவர்; ஓரத்தில் நிற்பவர் என்று மாற்றி மாற்றி அழைத்து சால்வை போட்டு, வாழ்த்துரை முடித்து, சிறப்புரை ஆரம்பிக்கவே 2 மணி நேரத்துக்கு மேல் ஓடி விட்டால், விழா முடிய எவ்வளவு நேரமாகும்? வந்திருப்பவர்கள் ‘என்னப்பா இது’ என்று சலித்துக் கொள்வார்களா மாட்டார்களா?
ஏன் இந்த சலிப்பு வருகிறது? ஓர் இலக்கிய விழா எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அந்த விழா இல்லை. அதாவது, எது எதுவாக இருக்க வேண்டுமோ, அது அதுவாக இல்லை. அதனாலேயே அந்த விழா தோற்றுவிடுகிறது. ‘விழா’ என்று குறிப்பிட்டது, ஓர் உதாரணத்துக்குத்தான். எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஓர் அலுவலகம் எப்படி இயங்க வேண்டுமோ அப்படித்தான் அது இயங்க வேண்டும். அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு இவர்தான் பதில் சொல்வார்; நேரில் வருபவர்களிடம் இவர்தான் பேசுவார்; பணியில் இருக்கும் அவரவருக்கு இருக்கைகள் குறிப்பிட்ட இடங்களில்தான் இருக்கும்; குறிப்பிட்ட நேரப்படிதான் எதுவும் நடக்கும்; அலுவலகத்தில் இவர்தான் முதன்மை அதிகாரி; அவரது முடிவுதான் முடிவானது என்றெல்லாம் ஒழுங்காக இருக்கும் அலுவலகம் நிச்சயம் வளர்ச்சியடைகிறது.
காலை 10 மணி அலுவலகத்திற்கு ஊழியர்கள் 10.30 மணிக்கு வந்து; 11 மணிக்கு இருக்கையில் அமர்ந்து; 11.30 மணிக்கு தேனீர் குடிக்கப்போய் 12.15 மணிக்கு வந்து, 1 மணிக்கு உணவு இடைவேளைக்குச் சென்று பிற்பகல் 2.30 மணிக்கு திரும்பி வந்து, 5 மணிக்கு நேரம் முடியும் என்றால் 4.45 மணிக்கே முகம் கழுவி, தலைசீவி தயாராகிவிடும் அலுவலர்கள் உண்டா இல்லையா? அடையாள அட்டை கொடுத்து; 15 நிமிடத்திற்கு மேல் தாமதமாக வந்தால் 1/2 நாள் விடுமுறையாகக் கணக்கிட்டு, அலுவலகத்துக்குள்ளேயே நேரத்துக்குத் தேனீர் தந்து; நேரம் கடந்தும் வேலையை முடித்து பின்னர் மூடப்படும் அலுவலகங்களும் உண்டா இல்லையா?
அலுவலகம், அலுவலகமாக இயங்கினால் முன்னேற்றம் நிச்சயம். இந்த நிலை, எதற்கும் பொருந்துகிறது. பள்ளி, கல்லூரி, வீடு, நாடு, எதுவாயினும் சரி, அது அதுவாக இருந்தால் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் இடத்தில்தான் வளர்ச்சி இருக்கும். எதுவுமே, அது அதுவாகவே இல்லாததால்தான் வீழ்ச்சி அடைகிறது. அதே போன்றுதான் எவர் எவராக இருக்க வேண்டுமோ அவர் அவராக இருக்க வேண்டும்; அப்படி இல்லாதவர் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலே சொன்ன குறளை இங்கு மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்கலாம். ‘இவர் பலராகிய காரணம்’ என்று குறள் தொடங்குகிறது. “நிறைய பேர் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்,” என்று தான் குறள் சொல்கிறதே தவிர, என்ன இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ‘பணமில்லாமல் இருக்கிறார்கள்’; ‘அறிவில்லாமல் இருக்கிறார்கள்’; ‘பண்பில்லாமல் இருக்கிறார்கள்’; ‘அமைதியில்லாமல் இருக்கிறார்கள்’; ‘வளர்ச்சியில்லாமல் இருக்கிறார்கள்’; என்று நமது சூழலுக்கேற்ப சிந்திக்க விட்டு விடுகிறான் வள்ளுவன்.
‘இவையெல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான்,’ என்கிறான் வள்ளுவன். ‘நோற்பார்; சிலர் பலர் நோலாதவர்;’ முயல்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் முயலாதவர்கள் எண்ணிக்கை நிறையவும் இருக்கிறது. ‘இது வேண்டும்’ என்ற ஆசைமட்டும் எல்லோருக்கும் இருக்கிறது. ‘நான் இப்படி ஆகவேண்டும்; என்றோ, அல்லது ‘நான் இப்படி ஆகிவிட்டேன்’, என்றோ நினைத்துக் கொள்கிறார்களே தவிர, அதற்கான தேடுதலோ அல்லது முயற்சிகளோ பல பேரிடம் இல்லை என்பதைத்தான் வள்ளுவன் இப்படி குறிக்கிறான். இதை எந்தச் சூழலிலும் பொருத்திப் பார்க்கலாம்.
ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவும், மாணவர்கள் மாணவர்களாகவும் இருந்தால் தேர்வு முடிவுகள் ஊக்கம் தருவதாக இருக்கும். நம்பிக்கையூட்டும் இளைஞர்களும் நாட்டுக்கு கிடைப்பார்கள். ஊதியம் பெறக்கூடிய பணியாக மட்டுமே கற்பித்தல் தொழிலை ஆசிரியர்கள் எண்ணலாகாது அல்லவா? “எல்லை மீறுவோம்; எவரும் எங்களைக் கேட்கக்கூடாது” என்ற மனோநிலை மாணவர்க்கு நலம் பயக்குமா? ஒழுக்கமும் கல்வியும் மாணவர்களின் இரு கண்கள் என்று எண்ணாது தங்களின் நலத்துக்காக அவர்களை எல்லை மீறச் சொல்லும் தலைவர்களாகத் தாங்கள் அடையாளம் காட்டிக் கொள்பவர்களால் நாட்டுக்குத்தான் நலம் விளையுமா?
வீட்டின் தலைவன், குழந்தை என்று சொல்வார்கள். தாய் தந்தையர் எவ்வளவு அதிகாரம் படைத்த பொறுப்பில் இருந்தாலும் வீட்டைப் பொறுத்தவரை குழந்தை சொல்வதுதான் சட்டம். குழந்தை மீதுள்ள இயல்பான பாசமே இந்தக் கட்டுப்பாட்டை பெற்றோர்க்கு ஏற்படுத்திவிடுகிறது. இந்த அன்பும் பாசமும், இறுதிவரை தொடர்வதில்லை என்பதுதான் சிக்கல். குழந்தை வளர்ந்து இளமைப் பருவத்தை எட்டும்போதே, “அவனுக்கு அல்லது அவளுக்கென்று தனிச் சிந்தனை தனி வாழ்க்கை உண்டு” என்பதனைப் பெற்றோர் உணரத் தவறும்போதுதான் இடைவெளி உண்டாகிறது.
‘குழந்தைகள் தொடக்கத்தில் பெற்றோர்களை நேசிக்கவே செய்கிறார்கள். வளர வளரத் தங்கள் பெற்றோரை அவர்கள் எடை போடுகிறார்கள். பல நேரங்களில் அவர்கள் தங்களது பெற்றோரை மன்னித்து விடுகிறார்கள்’, என்றார் “ஆஸ்கார் ஒய்ல்ட்” என்ற ஆங்கில எழுத்தாளர்.
தாய் தாயாகவும், தந்தை தந்தையாகவும் இருந்து குழந்தையைப் பொறுப்புணர்ந்து வளர்க்கும் சூழலில், தன் பெற்றோரைக் குழந்தை எடைபோடாமல் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கடமை பெற்றோர்களிடம் தான் இருக்கிறதே தவிர, குழந்தையைக் குறை சொல்லலாகாது. பாசமும் கண்டிப்பும் எல்லை மீறாமல் காட்டப்படும் குழந்தைகளே, சிறந்த இளைஞர்களாக உருவாகிறார்கள். பெற்றோர், பெற்றோராக நடந்துகொண்டால், குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள். சில நாட்கள் இடைவெளியில் சென்னையிலும், மதுரையிலும் நடந்த மூன்று வெவ்வேறு கொலைகள் மனத்தை பாதித்தன.
திருமணமான சில நாட்களிலேயே கணவனின் மிக நெருக்கமான நண்பனுடன் கள்ளத்தனமாக எல்லை மீறிப் பழகத் தொடங்கிய மனைவி; பிறந்து ஓரிரு மாதங்களே ஆன குழந்தையும், இளம் கணவனும் வீட்டில் உறங்கிய ஓர் நள்ளிரவில், கணவனின் நண்பனை வரச்சொல்லி வீட்டுக்குப் பின்னாலிருந்த இருளில் கலந்திருந்தாள். குழந்தை அழ விழித்த கணவன் ஏற்கனவே சற்று ஐயம் கொண்டிருந்த நிலையில் மனைவியைப் படுக்கையில் காணாததால் ஒலி எழுப்பாமல் தேடிச் சென்று நிலை புரிந்து இரும்புத் தடிகொண்டு தாக்க, சிறு வயதுமுதல் பழகிய உயிர் நண்பன் அலறிப் பிணமானான். மனைவி இருட்டில் எங்கோ ஓடிப்போனாள். கணவன் கைது செய்யப்பட்டான். குழந்தையின் அழுகுரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
நண்பன் நண்பனாக இல்லாத நிலையில், மனைவி மனைவியாக இல்லாத நிலையில், குடும்பம் என்னாயிற்று? குழந்தைதான் என்னாயிற்று?
பிறிதோர் நிகழ்வில் சென்னைச் சாலைகளில் கைகளும், கால்களும் தனித்தனியாக, தலையற்ற உடல் தனியாக, சாக்குப் பைகளில் கிடைத்தன. தலை கிடைக்கவேயில்லை. கிடைத்தவற்றைத் தேடி சேர்த்து ஒன்றாக்கிப் பார்த்து அடையாளங்கள் வைத்து, ‘கொல்லப்பட்டது இன்னார்’ என்பது உறுதியாயிற்று. கொன்றதாகவும் ஒருவரை கைது செய்தாயிற்று. தங்க நகைகளின் மீது ஆசைப்பட்டு இக்கொலை நடந்ததாகக் கூறப்பட்டது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவனின் மனைவியையும், பள்ளி செல்லும் இரு குழந்தைகளையும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். “அப்பா எங்கே? நான் ஏன் இங்கே இருக்க வேண்டும்? வீட்டுக்கு எப்போது போவது? பள்ளிக்குப் போக வேண்டுமே…!” என்று அந்தக் குழந்தைகள் அழுதபோது, தாய்க்கு மட்டுமல்ல உடனிருந்த சில காவலர்களுக்கும் கண்கள் கலங்கியதாக செய்தித்தாள்கள் எழுதின.
வேறோர் நிகழ்வில் மதுரையில் இளைஞன் ஒருவனின் கை கால்கள் வெட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்தன. வீட்டில் இருந்த குளிரூட்டும் பெட்டியில் (Fridge), உடல் கிடைத்தது. விசாரணையில் வெளியான தகவல் அதிர்ச்சியாக இருந்தது. இந்த கொடூரச் செயலைச் செய்தவள், அவனைப் பெற்ற தாய்தான். வேறு ஒரு மனிதனுடன் பழகுவதைத் தடுத்ததால், மகனையே தாய் கொன்றாள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
“தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற நமது பழமொழி என்னவாயிற்று? மேற் சொன்ன இரு நிகழ்வுகள் விதிவிலக்குகள் என்று விலக்கித் தள்ளிவிடாமல் சிந்தித்தபோது அந்தப் பழமொழியே வேறோர் பொருளைத் தந்தது.
தாயின் பெருமையையும் தந்தையின் பெருமையையும் குழந்தைகளுக்குச் சொல்வதாக மட்டுமே இந்தப் பழமொழியைப் பார்க்கத் தேவையில்லை. வணங்குவதற்குத் தாயைவிட தனக்கு வேறோர் கோயில் இல்லை என்று குழந்தை எண்ணுமாறு வாழ்ந்து காட்ட வேண்டியவள் தாய். ‘தான் பெற்ற குழந்தைக்குத் தன் சொல்லைவிட உயர்ந்த மந்திரமில்லை’ என்று மனத்தில் உறுக்கொண்டு உயர்ந்த சிந்தனையோடு சொல்லி வளர்க்க வேண்டியவன் தந்தை.
தாய் தந்தையரை தெய்வமாக எண்ணி வணங்கிப் பின்பற்றவேண்டும் என்று குழந்தைக்குச் சொல்வது ஒரு பார்வை. குழந்தை அப்படி எண்ணும்படி தாய் தந்தையர் நடந்து கொள்ள வேண்டும் என்பது மறுபார்வை.
தாய் தாயாகவும், தந்தை தந்தையாகவும் நடந்து கொண்டால் குழந்தைகள் எல்லைமீறி போகவே மாட்டார்கள்.
எந்தப் பணியில் இருப்பவரும், எந்த நிலையில் இருப்பவரும் அவரவர் நிலையிலிருந்து மாறாது பணியினை செய்வார்கள் என்றால்; எந்த அலுவலில் இருப்பவரும் எந்த கடமையைச் செய்பவரும் அந்த நிலையில் இருந்து மாறாமல் கடமையாற்றுவாரேயானால், வெற்றி நிச்சயம்!
நிற்க, அதற்குத் தக!
Leave a Reply