ஏன் வேண்டும் உற்சாகம்?

– சிநேகலதா

வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுயமுன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர்வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள்.

சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள்.

நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தைத் தூக்கி நிறுத்துவது யாருக்காக?

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா?

உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுது போகவா?

உங்கள் உற்சாகம் யாருக்காக? இதற்கு உண்மையான பதில்…

உங்களுக்கே உங்களுக்காக!!

உங்களுக்கு உங்களின் தகுதிகள், திறமைகள், ஆரோக்கியம், செல்வாக்கு எல்லாம் புரிகிறபோதெல்லாம் நீங்கள் உற்சாகமாகிறீர்கள். .

நடுத்தர வயதை எட்டும் போதும் வேகவேகமாய் நடக்கும்போதும் மூச்சிரைக்காமல் இருக்கிறதா? உங்களையும் அறியாமல் உற்சாகம் வரும். மற்றபடி, தெரு முனையில் இருக்கும் கடையில் கொத்தமல்லி வாங்கக்கூட பைக் சாவியைத் தேடுபவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் வியர்க்க விறுவிறுக்க ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வரும்போது மறுநாள் வாக்கிங் நேரம் வருகிறதா என்று மனசு ஏங்குகிறதே…. ஏன்?

விஷயம் நடைப்பயிற்சியில் இல்லை. உங்களால் நடக்க முடிகிறது என்பதில் உங்களுக்கு வருகிற உற்சாகம்தான் அது.
ஒவ்வொரு மனிதனும் தன் பலங்கள் புரியப் புரிய உற்சாகமாகிறான்.

அதற்கு அடிக்கடி வாய்ப்பளித்துக் கொள்பவர்கள் வளர்கிறார்கள். அது மற்றவர்களுக்கும் பயன்படுகிறது.

சிலசமயம் நாட்கள் நகர்வதே பெரிய விஷயமாய் இருக்கும். “அட! இன்றைக்கு சனிக்கிழமையில்லையா? வியாழக்கிழமைதானா?” என்று சலித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் அந்த வாரம் நீங்கள் அதிகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்.

ஒவ்வொரு வாரமும் எட்டுவதற்கென்று ஏதேனும் இலக்குகளை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப இயங்கினால் நாட்கள் நகர்வதே தெரியாது. இது உண்மையில் மிகவும் எளிது. இயங்கிக் கொண்டேயிருப்பவர்களுக்கு இயக்கம் என்பது பழக்கமாகவே படிந்துவிடும். தொடக்கத்தில் இயங்குவதற்கு சோம்பலாகவும் அயர்வாகவும் இருந்தால், நம்முடைய காரணங்களை நாமே முன்னிறுத்த வேண்டும். இயங்காததால் கிடைக்கும் விமர்சனம் நம் உந்துசக்தியாக இருக்கக்கூடாது. இயங்குவதால் கிடைக்கும் பாராட்டுதான் நம் உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

“ஒவ்வொரு நாள் விடியலிலும் படுக்கையை விட்டு எழும்போதே அந்த நாள் புலர்ந்ததற்கான காரணம் உங்களுக்குப் புலப்பட வேண்டும்” என்றார் ஓர் அறிஞர்.

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் வசதிகள்கூட அப்புறம்தான். உங்கள் ஆரோக்கியத்தை மற்றவர்கள் வியப்போடும் விருப்பத்தோடும் பார்க்கிறபோது கிடைக்கிற உற்சாகத்திற்காகவே நீங்கள் ஆரோக்கியத்தைப் பேணலாம். இரண்டாவதாய் உங்களை சார்ந்திருப்பவர்களுக்கு, வாழ்க்கை பற்றிய நம்பிக்கை உங்கள் ஆரோக்கியத்தால் கிடைக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் அவர்களுக்கு நீங்கள் தரமுடியாத பரிசல்லவா அது!!

நீங்கள் இப்படி எத்தனையோ காரணங்களால் உற்சாகமாக இருக்கிறபோது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த ஈர்ப்பு உங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

சோதனையான காலங்களிலும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்கிறார்களே. அதுவும் உங்களுக்காகத்தான். அப்போதும் நம்பிக்கையாக செயல்படுவதன் மூலம் நடக்கிற சம்பவத்திலிருந்து பாடம் பெறுகிறீர்கள்.

எந்தச் சூழலில் எப்படி செயல்பட்டால் நல்லது என்கிற அனுபவம் உங்களுக்குக் கிடைக்கிறது. அந்த அனுபவம் உங்களை மேலும் உறுதிமிக்கவர் ஆக்குகிறது.

உங்கள் உற்சாகத்தாலும் உங்கள் நம்பிக்கையாலும், உங்கள் குடும்பம், உங்கள் நிறுவனம், உங்கள் சமூகம் அனைத்தும் பயன்பெறும் என்பதுதான் உண்மை. ஆனால் எல்லோரை விடவும் முதலில் முழுமையான பயன் உங்களுக்குத்தான். ஒவ்வொரு செயலும் உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்கிறது, எனவே எப்போதும் உற்சாகமாயிருங்கள்….. உங்களுக்காக!!

zp8497586rq