– சோம வள்ளியப்பன்
உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய கேள்வி
கண்ட்ரோல் உள்ளேயா? வெளியேவா?
அவர் எழுந்தபோது காலை மணி பத்து. அவர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு ஆச்சரியம். நீங்களா இப்படி? மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவராயிற்றே! என்றார். தாமதமாய் எழுந்த அவர் சொன்னார்,
‘எழுந்து என்ன செய்யபோகிறோம்? அதுதான் மெதுவாக எழுந்தேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அவருக்கு அலுவலகம் கிடையாது. விடுமுறை. அதனால்தான் இப்படி. ஆனால் வாரம் முழுக்க அவர் எழுவது, காலை மணி ஐந்தரைக்கே! காரணம் தொழிற் சாலையின் மெட்டாடர் வேன் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடும். தவறவிடமுடியாது.
தேவை இருக்கிறது செய்கிறார். தேவையில்லாத போது எதற்காக வீணாக. சரிதான். குற்றம் சொல்லமுடியாது.
அலுவலகங்களில் பிப்ரவரி மாதம் மார்ச் மாதமெல்லாம் கணக்குத்துறை அலுவலர்கள் வேலை முடித்து வீட்டிற்குப்போக இரவே ஆகிவிடும். மற்ற மாதங்களில் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுபவர்கள்தான். ஆனால் அந்த மாதங்களில் மட்டும் கிளம்புவதில் தாமதம். அதே காரணம் தான். செய்வதற்கு கூடுதல் வேலையிருக்கையில் இருந்து செய்கிறார்கள். இல்லாத நேரங்களில் கிளம்பிவிடுகிறார்கள்.
வேலை இருக்கும் போது செய்வது. வேலையில்லாவிட்டால் விட்டுவிடுவது. இந்த அணுகுமுறையில் ‘லகான்’ எங்கே இருக்கிறது?
கண்ட்ரோல் இருப்பிடம் நம்மிடம் இல்லை. வெளியில் இருக்கிறது. யாரோ கேட்கிறார்கள். தருகிறோம். யாரும் கேட்கவில்லையா. தருவதில்லை.
நாம் செய்வதுதான் நாம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதுபோல, நம் சாதனைகளும் நாமே செய்தால்தான் உண்டு.
நான் திருச்சி பெல் நிறுவனத்தில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்திருந்த நேரம். எனக்கு மேலதிகாரி திரு. வாசுதேவன் அவர்கள். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். தொழிலாளர் சட்டங்களில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவரிடம் பணியாற்றிய ஆரம்ப காலத்தில் நான் அதிகம் சிரமப்பட்டேன். காரணம், அவர் நான் எதை செய்து முடித்தாலும் அது போதாது என்பார். அதில் உள்ள குறைகளை தவறாது சுட்டிக்காட்டுவார். ஒருமுறை இருமுறைகள் அல்ல. எத்தனை முறை ஆனாலும் விடவே மாட்டார்.
அப்போதெல்லாம் அவர் மீது வருத்தம் வரும். ஆனால் பின்னால் நான் வேறு நிறுவனங்களுக்குச் சென்று, நானே பொறுப்பு என்கிற நிலைகளில் பணிசெய்தபோது நான் உணர்ந்தது, வாசுதேவன் அவர்களிடம் நான் பயின்றது அதிகம் என்பதைத்தான். அவர் இப்படி அப்படி என்று சொல்லித் தந்ததில்லை. ஆனால் நான் கற்கவேண்டிய நிர்பந்தத்தினை உருவாக்கினார். நான் கற்றேன்.
ஆம். அப்போது கண்ட்ரோல் வெளியில்தான் இருந்தது. அவர் கேட்டார், நான் தந்தேன். அவர் திரும்பத் திரும்ப கேட்டார். நான் மீண்டும் மீண்டும் தந்தேன்.
எவரும் கேட்டால் தருவது ஒருவழி. அது எக்ஸ்டர்னல் கண்ட்ரோல். அது நல்லதுதான். ஆனால் போதாது. காரணம், வாழ்க்கை முழுக்க, எல்லா நேரமும் எவரும் நம்மிடம் கேட்டுக் கொண்டேயிருக்க மாட்டார்கள். பெற்றவர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எல்லாம், ஒருநேரம் வரைதான் கேட்பார்கள். பின்பு விட்டுவிடலாம்.
வெளியில் இருந்து எவரும் கேட்காமலேயே நம்மால் தரமுடியுமா? உழைப்பினை, உன்னதத்தினை, கூடுதல் உற்பத்தியினை! நம் சாதனைக் கட்டிடத்திற்கு நாமே செங்கல் உருவாக்க முடியுமா?
முடியும். அதற்கு நாமே நம்மிடம் கேட்கவேண்டும்.
வேறு வழியில்லை. இண்டர்னல் கண்ட்ரோலுக்கு வரவேண்டும். எவரும் “செய்” என்று சொல்லாததை மற்றவர்களுக்காகச் செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லாததை சிறப்பானவற்றை, நமக்கு தேவையானவற்றை நாம் செய்யவேண்டும். செய்யப்பழக வேண்டும்.
நம்மிடம் நாமே கேட்பது. நாம் கேட்பதை நாம் செய்வது. இதில் கட்டாயங்கள் கிடையாது. நேரம் வீணாவது இல்லை. வேலை தொடர்ந்து நடக்கும்.
நம்மிடம் மற்றவர்கள் சூழ்நிலைகள் வைக்கும், தேவை(Demand)களை செய்வோம். ஆனால் டிமாண்ட் இல்லை என்று ஓய மாட்டோம். எவரும் கேட்காவிட்டாலும் நாமாக தேவையினை உருவாக்கிக்கொள்ளுவோம். அதுதான், டைம் மேனேஜ்மெண்ட் ஸ்கொயரில், திட்டமிடுதல் கட்டம்.
நேரம் நமக்காக
நேர மேலாண்மையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, இருக்கின்ற அளவான நேரத்தினை வீணடிக்காமல் அதிகபட்சமாக பயன்படுத்துவது. இரண்டாவது நம்முடைய நேரத்தினை அதிகபட்ச பலன் தரக்கூடியவற்றில் பயன்படுத்துவது.
இந்த இரண்டினையுமே கடந்த சில மாதங்களாக விரிவாகவே உதாரணங்களுடன் பார்த்தோம்.
மதிப்புமிகுந்த காலத்தினை சரியாக பயன்படுத்தி, நம் மதிப்பினை அதிகரித்துக் கொள்ளுவோம்.
வாழ்த்துக்கள்.
முற்றும்
Leave a Reply