மாணவர்கள் பகுதி
நூற்றுக்கு நூறு இயக்கம்
உலகத்தை மாற்றப்போவது உங்கள் குழந்தைதான்
கேத்தரீன் – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் 8 வயது சிறுமி. பத்தாயிரம் குடும்பங்களை காத்ததற்காக, திராகன் பிளை என்ற விருதை ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து பெற்றிருக்கிறாள்.
நான்கு வயதில் தன் அம்மாவுடன் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது டிவியில் ஆப்ரிக்காவில் 30 செகண்டுக்கு ஒருவர் மலேரியாவால் உயிர் இழப்பதாக ஒரு செய்தி காட்டப்பட்டது. உதவ விரும்புபவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு கொசு வலை வழங்க 10 டாலர் நன்கொடை தரலாம் என்ற செய்தி கேத்தரீனை சிந்திக்க வைக்கிறது.
ஒரு உயிரை 10 டாலர் கொசுவலையால் காக்க முடியுமா? அப்படியென்றால் நாம் பணம் அனுப்பலாம் என்கிறாள். மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு. இதே மகிழ்ச்சி அந்த கொசுவலை கிடைத்தவருக்கும் கிடைக்குமல்லவா? ஆனால் ஒரே ஒருவருக்குத்தான் இல்லையா? மற்றவர்களுக்கு? இதை ஏன் நம் நண்பர்கள் உறவினர்களிடம் எல்லாம் சொல்லி அவர்களையும் அனுப்பச் சொல்லக்கூடாது.
கேத்தரீன் தன் நண்பர்களின் பிறந்த நாள் பார்ட்டி, விருந்துகள், சர்ச் ப்ரேயர் மீட்டிங்குகள் என தான் எங்கு சென்றாலும் மலேரியாவால் ஆப்ரிக்காவில் ஏற்படும் உயிரிழப்பை பற்றி எடுத்துச் சொல்லி மற்றவர்களை உதவத்தூண்டுகிறாள்.
கேத்தரீன் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. பலரும் அவசரத்தில் காட்ட மறந்த மனிதாபிமானத்தை நினைவுபடுத்தினாள்.
ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, நான்கு வருடம் தொடர்ந்து முயற்சிக்கிறாள். விளைவு பத்தாயிரம் கொசுவலைகள் நன்கொடையாக அனுப்பப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதியின் கைகளால் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறாள்.
ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதுதான் என்றில்லை. ஒரு உயிரை காப்பாற்றுவதுகூட வணங்கக்கூடிய செயல்தான். நமக்கெல்லாம் டிவியில் காட்டப்படும் உயிரிழப்புகள் இன்னொரு செய்தி. ஆனால் கேத்தரீன் இன்னொரு உயிர் என்று பார்த்ததுதான் இத்தனைக்கும் காரணம்.
இதைப் படித்தவுடன் உங்களுக்கு இரண்டு விதமான சிந்தனைகள் தோன்றலாம்.
ஒன்று கேத்தரீன் என்ற அந்த சின்னஞ்சிறு பெண்ணாலேயே இவ்வளவு செய்ய முடியும் என்றால் நம்மால் எவ்வளவு முடியும்.
என் குழந்தையையும் கேத்தரீன் போன்று மனித நேயம் மிக்கவளாக சமூகத்தை குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் அதை மாற்றி அமைப்பவளாக வளர்ப்பேன்.
நல்லது, நம் குழந்தைகள் புதியதோர் உலகம் செய்ய ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருவோம்.
நூற்றுக்கு நூறு இயக்கத்தில் நம்மால் முடிந்த எளிய செயல்களைத்தான் நாம் செய்யப் போகிறோம்.
உதாரணத்திற்கு நீரில் தத்தளிக்கும் எறும்பை எடுத்து வெளியில் விடுவது நம்மை பொறுத்தவரை பெரிய வேலையில்லை. ஆனால் அந்த எறும்புக்கு அது வாழ்க்கை அல்லவா?
நூற்றுக்கு நூறு இயக்கத்தில் நீங்கள் செய்யப் போவது உங்களுக்கு எளிய செயல்தான். ஆனால் அதனால் பலன் அடைந்தவர்களுக்கோ அது அவர்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒன்று.
நிச்சயமாய் சொல்கிறேன். இந்த உலகத்தை மாற்றப் போவது நீங்களும் உங்கள் குழந்தைகளும்தான்.
என்றென்றும் நம்பிக்கையுடன்…
கிருஷ்ண. வரதராஜன்
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு நூறு இயக்கம் www.centummovement.in
Leave a Reply