ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

உன்னால் முடியும்

என் இனிய மாணவ நண்பர்களே!

கடந்த மாதம், பள்ளி ஒன்றில் நாங்கள் நிகழ்ச்சி நடத்தும்போது, நூற்றுக்கு நூறு வாங்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு மாணவன் கேட்டான். அதற்கு சொன்ன பதிலை

உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்றேன்.

புரிந்தது போலவும் புரியாதது போலவும் இரண்டுமாக அந்தப் பையன், என்னை பார்த்ததால் மேலும் அவனுக்கு விளக்கினேன். ஒரு மாணவன், என்னால் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். இன்னொரு மாணவன் வருகிற மார்க் வரட்டும் என்று நினைக்கிறான். இருவரில் யார் வகுப்பில் முழு கவனத்துடனும் அக்கறையுடனும் கவனிப்பார்கள் என்றேன்.

நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவன்தான் வகுப்பில் முழு கவனத்துடனும் இருப்பான் என்று வேகமாய் பதில் சொன்னான்.

நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்று நினைத்தாலே வகுப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் ஏற்படும் என்றால் நூற்றுக்கு நூறு நிச்சயம் எடுப்பேன் என்று நினைத்தால் இன்னும் கூட செயலில் மேம்பாடு இருக்கும் இல்லையா? என்றேன்.

என்னால் முடியும் என்று நினைக்கும் மாணவன் முதலில் முயற்சியை தொடங்கிவிடுகிறான். வழக்கத்தைவிட கூடுதல் நேரம் படிக்கத் தொடங்குவான். இன்னும் அக்கறையுடன் ஊன்றி கவனிக்கத் தொடங்குவான். இந்த அக்கறையாலும் உற்சாகத்தாலும் மேலும் பாடங்கள் சுலபமாக புரிய ஆரம்பிக்கும். சட்டென்று மனதில் பதியும். படிப்பு எளிதுதான் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் மெல்ல மெல்ல அவன் மதிப்பெண் மேம்பட்டு ஒரு நாள் நிச்சயம் நூற்றுக்கு நூறு எடுத்துவிடுவான்.

என்னால் முடியாது என்று நினைப்பவன் ஒரு முயற்சியும் செய்ய மாட்டான். புத்தகத்தை எடுக்கும்போதே எனக்கு படிப்பு வராது என்று நினைப்பான். அதனால் அக்கறையின்றி படிப்பான். அக்கறையின்றி படிப்பதால் பாடங்கள் சட்டென்று புரியாது. மனதிலும் பதியாது. அதனால் மதிப்பெண்ணும் உயராது.

எனவே நூற்றுக்கு நூறு வாங்க முடியுமா என்பது நீ எப்படி நினைக்கிறாய் என்பதை பொறுத்தது. அதாவது என்னால் முடியும் என்று நீ நினைத்தால் உன்னால் முடியும். என்னால் முடியாது என்று நீ நினைத் தால் உன்னால் முடியாது என்றேன்.

முடியும் என்று நினைத்தால் போதுமா உழைக்க வேண்டாமா? அல்லது திறமை வேண்டாமா? என்று கேட்டான் அந்த மாணவன்.

நான் சொன்னேன், முடியும் என்று நினைத்தால்தான் உழைக்கவே துவங்குவாய். உழைக்க உழைக்க திறமை தானாக வரும். எனவே நூற்றுக்கு நூறு பெறவேண்டும் என்று நீங்கள் துவங்கி உள்ள கல்விப் பயணத்தில் என்னால் முடியும் என்று உறுதியாக நினையுங்கள். முடியும் என்பதே முதல் வெற்றி.

நூற்றுக்கு நூறு வாங்க டிப்ஸ்

இந்த மாதம் நினைவாற்றல் டிப்ஸ்

21. எதற்காக படிக்கிறோம்?

ஒரு தகவல் எவ்வளவு காலம் நம் நினைவில் இருக்கிறது என்பதும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்தே அமைகிறது. உதாரணத்திற்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்கிறோம். மீதி சில்லறை தருகிறார்கள். மீதி சில்லறையை பர்ஸில் வைக்கிறோம். டிக்கெட்டை பாக்கெட்டில் வைக்கிறோம். இறங்கியவுடன் டிக்கெட்டை எறிந்து விடுகிறோம்.

மூளையும் இதுபோலத்தான். தேவை முடிந்தவுடன் தகவலை மறக்கத் துவங்கிவிடுகிறது. நாளைக்கு எக்ஸாம் அதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். மூளை இது நாளை வரை தேவைப்படும் தகவல் என்று முடிவு செய்து நாளை தேர்வு முடிந்தவுடன் படித்த பாடங்களை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்குகிறது.

எனவே தேர்வுக்குப் படிக்கிறேன் என்று நினைக்காமல் என் வாழ்க்கை முழுக்க பயன்படப் போகிறது என்று படியுங்கள். படித்தது எந்த காலத்திலும் நினைவில் நிற்கும்.

22. முழு கவனம்:

வேறு வேலைகளை ஏதாவது செய்துவிட்டு படிக்க உட்கார்ந்தால் உடனே படிக்கத் துவங்காமல் இரண்டு நிமிடம் கண்களை மூடி உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். பிறகு படிக்கத் துவங்குங்கள். இதனால் மனம் ஒருமுகப்பட்டு படிக்க முடியும்.

23. பாடத் தலைப்புகளை படியுங்கள்:

படிப்பதற்கு முன் என்ன பாடத்தை படிக்கப் போகிறோம் என்றும் அதில் என்னென்ன பகுதிகள் உள்ளது என்றும் ஒருமுறை பாருங்கள். அதில் உள்ள தலைப்புகள் (ஹெட்டிங்ஸ்) துணை தலைப்புகள் (சப் ஹெட்டிங்க்ஸ்) படங்கள் பெரிய எழுத்தில் தெரியும் முக்கிய வார்த்தைகள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்வது போல பார்த்துக் கொண்டே வாருங்கள். இதனால் எதைப் படிக்கப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்து அதை ஏற்கத் தயாராக இருக்கும்.

24. இடது கையால் எழுதுங்கள்:

பார்முலா மற்றும் ஈகுவேஷன் போன்றவற்றை இடது கையால் எழுதிப்பாருங்கள். எப்போதும் வலது கையையே பயன்படுத்தும் நாம் இடது கையை பயன்படுத்த வேண்டுமென்றால் நூறு சதவீத கவனத்துடன் எழுதிப் பார்ப்போம். இதனால் இவை சுலபமாக மனதில் பதிந்துவிடும்.

25. உங்கள் மூளை ஒரு கேமரா. தேவையானவற்றை மட்டும் படமாக எடுங்கள்:

அடிக்கடி பார்க்கிற விஷயங்களை உங்கள் மூளை போட்டோவாக தனக்குள் பதிய வைத்துக் கொள்கிறது. எனவே பார்முலா மற்றும் ஈகுவேஷன் போன்றவற்றை பேப்பரில் எழுதி உங்கள் வீட்டில் கண்ணில் படுகிற இடத்திலெல்லாம் ஒட்டி வையுங்கள். அதை அடிக்கடி பாருங்கள். இதனால் பார்முலா மற்றும் ஈகுவேஷன் எல்லாம் உங்கள் மனதில் படமாக பதிந்துவிடும்.

26. பாக்கெட் கார்டு முறை:

பார்முலா ஈகுவேஷன் ஆகியவற்றை கஷ்டப்படாமல் படிக்க சட்டை பாக்கெட்டில் வைக்கிற அளவு உள்ள சிறிய கார்டுகளில் எழுதி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். படிக்க வேண்டாம். நேரம் கிடைக்கிறபோதெல்லாம் படத்தை பார்ப்பது போல எடுத்துப் பாருங்கள். ஒரு நாளும் மறக்காது.

27. சொல்லி அல்ல எழுதிப்பார்த்தால் வெற்றி:

படித்ததை சொல்லிப் பார்ப்பதைவிட எழுதிப்பார்ப்பதுதான் சிறந்த முறை. எல்லா செயல்களும் தொடர்ந்து செய்வதால்தான் நமக்கு பழக்கமாகிறது. தேர்வுகளில் விடைகளை நாம் எழுதுகிறோம். எனவே படித்ததை எழுதி எழுதி பார்த்தால்தான் தேர்வுகளில் எழுதி நினைவு கூறும் பயிற்சி ஏற்பட்டு விடைகளை நினைவு படுத்தியும், விரைவாகவும் எழுத முடியும்.

28. தூக்கம் வந்தாலும் படியுங்கள்:

மூளை பற்றியும் நினைவாற்றல் பற்றியும் ஆய்வுகள் செய்தவர்கள், தூக்கம் வரும் பொழுது படிக்கிற எதுவும் நம் மூளையில் நன்றாக பதிந்துவிடுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வருவது போல உணர்ந்தால் அப்பொழுது கடினமான பாடங்களை சிறிது நேரம் படியுங்கள். அவை சுலபமாக பதிந்துவிடும்.

29. பாடத்தைக் கேளுங்கள்:

நீண்ட நேரம் படிப்பதனால் ஏற்படும் சோர்வை தடுக்க பாடங்களை நீங்களே பேசி செல்லிலோ டேப்பிலோ பதிவு செய்து நேரம் கிடைக்கிறபோதெல்லாம் போட்டுக் கேளுங்கள். சோர்வும் ஏற்படாது. பாடம் சுலபமாகவும் பதியும்.

30. டேப்பில் பதிந்து படியுங்கள்:

அதே போல் சுலபத்தில் பதியாத மனப்பாட பாடல்கள், வருடங்கள், கண்டுபிடித்தவர்கள் யார், எந்த ஆண்டு போன்ற தகவல்கள் எல்லாவற்றையும் சிடியில் பதிவு செய்து வைத்து படுக்கையில் படுத்தவுடன் ஆன் செய்துவிட்டு நீங்கள் தூங்கிவிடுங்கள். இவை உங்கள் ஆழ் மனதில் நன்றாக பதிந்துவிடும். பிறகு மறக்கவே மறக்காது.

இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் நிச்சயம் வாங்கலாம் நூற்றுக்கு நூறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *