நேரம் காலம் ரொம்ப முக்கியமுங்க

– முகில் தினகரன்

நாம் நிறையவே பார்த்திருக்கின்றோம்…..

ரயில் நிலையத்திற்கு உரிய நேரத்திற்குள் வந்து சேராமல் கடைசி நிமிடத்தில் அரக்கப் பறக்க வந்து, ரயிலைக் கோட்டை விட்டுவிட்டு, கைகளைப் பிசைந்துகொண்டு சோகமாய் நிற்பவர்களை.

குறிப்பிட்ட நேரத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு வராமல் தாமதமாக வந்துவிட்டு அங்கிருக்கும் பியூனில் ஆரம்பித்து மேனேஜர் வரை அனைவரிடமும் கெஞ்சிக்கொண்டு நிற்கும் இளைஞர்களை…..

வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல் போய், விரிவுரையாளரால் விரட்டியடிக்கப்பட்டு, மரத்தடியில்… கான்டீனில்… என ஆங்காங்கே அமர்ந்திருக்கும் மாணவச் செல்வங்களை….

அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வராமல் தாமதமாகிப் போய் மேலாளரிடம் வசைகளைப் பெற்றுக் கொண்டு நாள் முழுதும் தொங்கிப் போன முகத்துடன் திரியும் அலுவலக பணியாளர்களை…

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?

“காலந்தவறாமை” என்னும் உயரிய குணம் இல்லாத தன்மையே!

காலத்தின் முக்கியத்துவத்தை முற்றிலும் உணர்ந்து கொள்ளாதது மாபெரும் குற்றமே!

நெல்சன் பிரபு (Lord Nelson) சொல்லுவார், “நான் ஒரு பழக்கத்தைப் பின்பற்றி வந்திருக்கிறேன். நான் சொன்ன நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வந்துவிடும் பழக்கமே அது. நான் மிகப் பெரிய ஆளாக உயர்வதற்கு இந்தப் பழக்கம்தான் காரணமாக இருந்திருக்கின்றது” என்று.

ஒரு மனிதனுடைய கால தாமதம் இரண்டு வகைப் பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஒன்று, அவருக்கு ஏற்படும் பாதிப்பு. அடுத்து, அவருடைய கால தாமதத்தால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பு.

உதாரணத்திற்கு ஒருவர் மாலை ஆறு மணிக்கு ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொள்கிறார். அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் வந்து காத்திருக்கின்றனர். ஆனால், அந்தப் பேச்சாளரோ ஒரு மணி நேரம் காலதாமதமாக வருகின்றார். இந்தத் தாமதத்தால் அவர் தன்னுடைய தனிப்பட்ட மரியாதையை இழந்துவிடுவதோடு மக்கள் மத்தியில் அவருக்கென்றிருந்த நல்ல இமேஜையும் இழக்கின்றார். இது எதிர்காலத்தில் அவரைப் பேச அழைப்பவர்களையும் சற்று யோசிக்கச் செய்யும்.

அடுத்ததாக அவர் தன் பேச்சைக் கேட்க வந்த ஆயிரக் கணக்கானோரின் ஒரு மணி நேரத்தை வீணடித்த மாபெரும் குற்றத்தையும் செய்தவராகின்றார். வாழ்க்கை என்பதே நேரத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மற்றவர்களுடைய நேரத்தை வீணடிக்க யாருக்கும் எந்த உரிமையுமேயில்லை. ஆகையினால், ஒவ்வொருவரும் தாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்புக்கொண்ட வேலையைத் தவறாது செய்து முடித்தல் வேண்டும்.

நேரத்தின் அருமையை வெகுவாய் உணர்ந்த 90 வயது நிரம்பிய அறிஞர் பெர்னார்ட் பெரண்ஸன் (Bernard Berenson) கூறுவார், “நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் என் தொப்பியை நீட்டியபடி நின்றுகொண்டு அங்கு நடந்து சென்று கொண்டிருக்கும் அனைவரிடமும் அவர்கள் உபயோகப்படுத்தாமல் வீணடித்து வரும் விநாடிகளை என் தொப்பியில் போடும்படி பிச்சை கேட்க நான் தயாராய் இருக்கிறேன்!” என்று.

அதேபோல், மாவீரன் நெப்போலியன் சொல்லுவார், “என் எதிரிகள் நிமிடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டதுதான் என் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது” என்று.

விதியென்று ஏதுமில்லை:

காலதாமதமாக நேர்முகத் தேர்வுக்கு வரும் ஒரு திறமையான இளைஞன், அதன் காரணமாக தன் வாய்ப்பை இழந்துவிட்டு, தன்னை விடக் குறைந்த அளவே படிப்பறிவும் அனுபவமும் திறமையும் உள்ள வேறொரு இளைஞனுக்கு தன் வாய்ப்பைத் தாரை வார்க்கிறான். அத்தோடு நில்லாது, “என்ன செய்வது… என் விதி அப்படி!… அவனுக்கு நல்ல நேரம்!” என்று தன் தவறுக்கு விதியை வேறு காரணம் காட்டுகிறான். இது எந்த வகையில் நியாயப்படும்?

ஒரு விபத்தில் காயமடைந்தவரையோ, அல்லது உடல் நிலை சுகவீனமானவரையோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம், அங்கு தீவிர சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றிய மருத்துவர், “நல்ல வேளை சரியான நேரத்திற்குள் கொண்டுவந்தீர்கள்… இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால்கூட உயிர் பிழைத்திருக்க முடியாது!” என்று சொல்கிறார். யோசித்துப் பாருங்கள்… உரிய நேரத்தில் கொண்டு வராமல் கால தாமதப்படுத்தியிருந்தால் அந்த உயிர் காப்பாற்றப்பட்டிருக்குமா?… கால தாமதத்தால் அந்த உயிர் இழக்கப்பட்டிருந்தால்… அதற்கு விதி காரணமாகுமா?

வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் கீழ் மட்டத்தில் அவலமாக வாழ்ந்து வருபவர்கள் அனைவருமே நேரத்தை அலட்சியப்படுத்தியவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் காலதாமதத்தை தாங்கள் ஏற்படுத்திக் கொண்டு கடவுளையும் விதியையும் வசைபாடிக் கொண்டு காலம் கடத்துவார்கள்.

காலந்தவறாமை என்பது தனி மனித ஒழுக்கம்:

நடிப்பின் இமயம் என்று நாடே போற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்த போது அவரைப் பற்றி ஒரு இயக்குனர் சொல்லி நெகிழ்ந்த உண்மை இது,

“நானும் எத்தனையோ நடிகர்களை, நடிகைகளை, டெக்னீஷியன்களை பார்த்திருக்கிறேன்… ஆனால் நடிகர் திலகத்தைப் போல் பங்க்சுவாலிட்டி கடைப்பிடித்த ஒருத்தரை பார்த்ததேயில்லை! காலை எட்டு மணிக்கு சூட்டிங்ன்னா… ஏழரை மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து காத்திட்டிருப்பார்.. அப்புறம்தான் மத்தவங்க ஒவ்வொருத்தரா வந்து சேருவாங்க!… ஒரு தடவை நானே சொன்னேன், “சார்.. நீங்க ஒரு எட்டேகால்.. எட்டரைக்கு வந்தாலே போதும் சார்!”ன்னு, அதுக்கு அவர் சொன்னார்… “பழகிப் போச்சுப்பா… அரை மணி நேரம் முன்னாடி வந்தே பழகிப் போச்சு… மாத்த முடியாதுப்பா!” என்று. என்ன ஒரு தனிமனித ஒழுக்கம்!

அவருடைய அந்தக் காலந்தவறாமை குணம்தான் அவரை நான்கு தலைமுறை தாண்டியும் திரை உலகத்தில் ஒரு சிங்கமாக உலா வரச் செய்தது என்றால் மிகையாகாது.

காலதாமதத்தைத் தவிர்ப்பது எப்படி?

இது ஒன்றும் பெரிய… அரிய.. வித்தையல்ல… எல்லோராலும் காலந்தவறாமை குணத்தைக் கடைப்பிடிக்க முடியும். எப்படி? அடுத்ததாக வரப்போகும் நாளைய தினத்தில் என்னென்ன காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு திட்டத்தினை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் எந்தக் காரியத்தை…. எந்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு அதன்படி துவங்க வேண்டும்.

முதலில் ஒரு நாளைக்கான திட்டத்தைத் தயாரித்துப் பழகுவோம். அதன் பிறகு ஒரு வாரத்திற்கான திட்டத்தைத் தயாரிப்போம்… தொடர்ந்து மாதத்திட்டம்… ஆண்டுத்திட்டம் என்று நமது காரியங்கள் அனைத்தையும் ஒரு திட்டத்தின் கீழ் கொண்டுவரும்போது காலந்தவறாமைக் குணம் நமக்கே தெரியாமல் நமக்கு வந்துவிடும். பிறகு, புகழும், பதவியும், செல்வமும், சௌகரியங்களும் நிறைந்த அமோகமான எதிர்காலம் தானாகவே உருவாகி, நமக்காக உயர்ந்த இடத்தில் ஒரு சிம்மாசனத்தை உருவாக்கித் தந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *