சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம்

‘சிந்தியுங்கள் சிந்திக்க வையுங்கள்” என்பது பிரான்ஸ் நாட்டில் தன் எழுத்துக்களால் புரட்சி விதையை தூவிய வால்டேரின் மிகச்சிறந்த தத்துவம். “சிரியுங்கள் சிரிக்க வையுங்கள்” என்பது அவரின் அடிப்படைக் கொள்கை.

தன்னுடைய பலவீனத்தை மிகப்பெரிய பலமாக மாற்றிய மாமேதை வால்டேர். பிறக்கும்போதே நோயாளி. தோற்றமோ குழிவிழுந்த கன்னங்கள், துருத்திய தோள் எலும்புகள், காண்போரெல்லாம் கிண்டலடிக்கும் தோற்றம். அந்தத் தோற்றத்தை வைத்துக்கொண்டே மிகப்பெரிய தத்துவங்களையெல்லாம் நகைச்சுவையாக சொல்லி மற்றவர்களை சிந்திக்க வைத்தவர்.

தோற்றத்திற்கும் திறமைக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்று நிரூபித்தவர். எந்தச் சூழலிலும் தன் நகைச்சுவை உணர்வையும், மகிழ்ச்சியையும் பறிகொடுக்காதவர்.

பிரான்ஸ் நாட்டில் நிலவிய கொடுங்கோன்மையை தகர்க்க இவரின் புரட்சிக் கருத்துக்கள் அடிப்படையாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

‘சிரியுங்கள்’ என்கிறார் வால்டேர். நாம் நமது நம்பிக்கையில் அதை சிந்திப்போம். சிரித்தல் என்பது உள்ளத்தால் மகிழ்தல். அப்படியானால் நாம் சிரிக்கின்றபோதெல்லாம் உள்ளத்தால் மகிழ்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

ஒரு நகைச்சுவையை படித்தோ, கேட்டோ அல்லது நகைச்சுவைக் காட்சிகளை பார்த்தோ நாம் சிரிப்பதெல்லாம் நீர்க்குமிழி போல் தோன்றி உடனே மறைந்து விடுவதாகும். உள்ளப்பூர்வமாய் நமக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படும்?

நாம் நிறைவாக வாழ்கிறோம் என்னும்போதுதான் உள்ளப்பூர்வமாய் மகிழ்ச்சி ஏற்படும். நம்மால் மனம்விட்டு சிரிக்க முடியும்.

அடுத்த கேள்வி உடனே கைகோர்த்துக்கொள்கிறது. நாம் எப்போது நிறைவு காண்கிறோம்?

நம்முடைய இலட்சியங்களை அடையும்போது நிறைவு காண்கிறோம்.

இலட்சியங்களை அடைவதென்பது அத்தனை எளிதாக இல்லை என்றும், இலட்சியங்களை வகுத்துக்கொண்டு பயணிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமில்லை என்றும் நம்மில் பலர் அலுத்துக்கொள்கிறார்கள். சிக்கல்களை தாங்கமுடியாமல் இலட்சியங்களையே கைவிட்டுவிடவும் தயாராகி விடுகிறார்கள்.

நம்முடைய இலட்சியப் பயணத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள் எல்லாம் நாம் பக்குவப்படுகின்றவரைதான் சிக்கல்களாகத் தெரியும். பக்குவப்பட்டுவிட்டால் எல்லாவற்றிற்கும் தீர்வு காண்பதற்கு வழிவகைகள் கிடைத்துவிடும்.

வெண்ணையை உருக்கும்போது அது நெய்யாக பக்குவப்படும்வரை ‘உஸ்’ என்ற சத்தம் வந்துகொண்டிருக்கும். வெண்ணைய் முழுவதுமாய் உருகி நெய்யாகிய பின் ஓசை வருவதில்லை. அதற்குப்பதில் நறுமணம் வரும்.

தேனீயின் ரீங்கார சத்தமெல்லாம் எந்தப் பூவில் தேனுள்ளது என்பதை சுற்றிச் சுற்றி வந்து கண்டுபிடிக்கும்வரைதான். தேனிருக்கும் பூவைக் கண்டுபிடித்து அமர்ந்துவிட்டால் தேனீ சத்தமிடுவதில்லை. அதற்குப்பின் தேனீ ரீங்காரமிடுகின்றதென்றால் அது மகிழ்ச்சியின் ரீங்காரம்.

பணத்தை முதலீடு செய்தால்தான் எல்லாம் கிடைக்கிறதென்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பணத்தை விடவும் மேலான ஒன்று இருக்கிறது. அதுதான் ‘நேரம்’.

பணத்தை எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம் என்பதை சிந்திக்கும் முன் நேரத்தை எப்படியெல்லாம் மிகச் சரியான வழியில், சரியான முறையில் முதலீடு செய்யலாம் என்பதை சிந்தியுங்கள்.

அதற்குரிய பலன்களில் பணமும் சேர்ந்து கொள்ளும்.

நீங்கள் விரும்புகிறவர்கள், உங்களுக்கு தேவைப்படுபவர்கள் எல்லாம் உங்கள் சொல்கேட்டு செயல்பட எப்போதும் தயாராய் இருக்க வேண்டுமா?

உங்களைச் சுற்றியுள்ள காற்றில் நம்பிக்கையான பேச்சு, நேர்மையான செயல்பாடுகள், தகுந்ததை புகழ்ந்துரைத்தல் ஆகியவற்றை உங்களிடமிருந்து வரும் நறுமணமாக பரப்புங்கள்.

மற்றவர்களை அணுகும்போது அவர்களைப் பற்றிய உங்களின் கற்பனைகளோடு அணுகாதீர்கள். தவறான முன்முடிவுகள் தவறாகவே முடிவதாய் ஆகிவிடும்.

உங்களின் வேலைகளுக்காக மற்றவரை நாடும்போது அவருக்கும் முக்கியத்துவம் தருவதாய் உங்களின் பேச்சும் செயல்பாடும் அமையட்டும். உங்களின் பிரச்சினைகளைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

உங்களின் அதிகாரத் தோரணை தேவைப்படுகின்ற இடங்களில் மட்டுமே இருக்கட்டும். எல்லாவிடங்களிலும் அந்த முகமூடியை அணிந்துகொண்டிருந்தால் பிறகு அதுவே உங்கள் இயல்பாக மாறிவிடும். அது மற்றவர்களின் மகிழ்ச்சியை மட்டுமல்லாது உங்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துப் பறித்து வீசிவிடும்.

சின்னச் சின்ன வேலைகள் செய்வோர், அடிப்படை பணிகள் செய்வோர் ஆகியோரை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

சந்தி தெருப் பெருக்குதலை ‘சாத்திரம்’ என்கிறான் மகாகவி பாரதி. மாடுமேய்க்கத்தான் லாயக்கு என்று வீட்டில் பெரியவர்களும், பள்ளியில் ஆசிரியர்களும் திட்டுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் மாடுமேய்த்தலை ‘தவம்’ என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

செய்கின்ற வேலைகளின் அடிப்படையில் மனிதர்களுக்கு மதிப்பளிப்பதை தவிர்த்து சின்னச் சின்ன வேலைகள் செய்வோருக்கும் மதிப்பளிக்கும்போது நீங்களும் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

வெகுவாக மதிக்கப்படுகிறவர்கள்தான் வெற்றியாளர்களாகவும் ஜெயிக்கிறார்கள். மற்றவர்களால் மனப்பூர்வமாய் மதிக்கப்படுபவர்களாக உங்களை மாற்றுங்கள். வெற்றி உங்களின் கைகளுக்குள் வந்து படரும்.

ஒரே சுழற்சியில் வளைய வந்துகொண்டிருக்கும் உங்களின் வட்டத்தை உடையுங்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதை வட்டமாக இருந்தால் சலிப்பு ஏற்பட்டுவிடும். தேங்குகின்ற தண்ணீர் பாசி பிடித்துவிடும். ஓடுகின்ற தண்ணீரில் பாசியைக் காண்பது கடினம்.

உற்சாகத்தோடு உங்கள் பயணம் தொடர வேண்டுமென்றால் பாதையை நேர்க்கோடாக்குங்கள். அது முடிவில்லாதது. சலிப்பில்லாமல் பயணம் செய்ய இலட்சியங்களை சங்கிலித் தொடராக்குங்கள். ஒரு மைல்கல்லை அடைந்தவுடன் மற்றொன்றை அடைவதற்கான பயணத்திற்கு தயாராகுங்கள்.

ஒழிக்கவேண்டிய, விட்டுவிடக் கூடிய பலவீனங்களை கண்டிப்பாக ஒழித்துவிடுங்கள். மற்ற எந்தவகை பலவீனமென்றாலும் அதை பலமாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை சிந்தியுங்கள்.

பொருளையும், புகழையும், கௌரவத்தையும் அடைகின்ற நோக்கம் மட்டுமல்லாது நாம் இந்த சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க்கை நேரத்தால் ஆனதென்பதை எப்போதுமே கவனத்தில் வைத்திருங்கள். உங்களையும், உங்களைச் சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்க ஒவ்வொரு நாளையும் உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடுகளால் செலவழியுங்கள்.

நாளைய வாழ்விற்காக இன்றைய தினத்தை இழந்துவிடாமல் இருப்பவர்தான் உண்மையான வெற்றியாளராவர்.

எத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே நீங்கள் இருந்தாலும் மிக உயர்வாய் சுட்டிக் காட்டும் அளவிற்கு உங்களுக்கென தனித்த அடையாளத்தை உருவாக்குங்கள்.

சாதனையாளரைத் தேடி நீங்கள் பயணம் மேற்கொண்டால் அது உங்களிடமே வந்து முடியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *