31. மலைக்காதீர்கள்.
மலைக்காதீர்கள். மலைத்தால் குன்றுகூட மலையாகத்தான் தெரியும். இந்த மலைப்புதான் உங்களை விரைவில் சலிப்படையும்படி செய்துவிடுகிறது. புத்தகத்தை எடுக்கும்போது, என்னால் படித்துவிட முடியும் என்று உறுதியாய் நினைத்துக் கொள்ளுங்கள். எளிதில் படித்துவிட முடியும்.
32. ஒவ்வொரு நாளையும் தேர்வு நாளாக்குங்கள்.
சிறு வயதில் எல்லோரும் இருட்டுக்கு பயப்படுவோம். வளர்ந்து, இருட்டு பழகப் பழக, பயம் நீங்கி தைரியமாக இரவில் நடமாடுகிறோம். தேர்வு பற்றிய பயம்கூட இப்படித்தான். எனவே, ஒவ்வொரு நாளும் இன்று எக்ஸாம் என்ற மனநிலையோடு இருங்கள். பயம் சிறிது சிறிதாக நீங்கும்.
33. நேர்மறையானவர்களோடு மட்டும் தொடர்பில் இருங்கள்.
எப்போதும் உற்சாகமின்றி பேசுபவர்கள் சிலர் இருப்பார்கள். சின்ன விஷயத்திற்கும் அதிகம் பயப்படுவார்கள். இப்படி பயப்படுபவர் களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால் பயம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அல்லது ஏற்கனவே பயத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் அதிகமாக துவண்டுவிடுவீர்கள். எனவே, உற்சாகப்படுத்தும் நண்பர்களோடு மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
34. இன்றே துவங்குங்கள்.
படிக்க உட்காரும்போதே இதை இதை இன்றைக்கு படித்து முடிக்க வேண்டும் என்ற உறுதியோடு உட்காருங்கள். தேர்வு நெருங்க நெருங்க கண்டதையும் யோசித்து ஏகத்துக்கு டென்ஷன் ஆவோம். அப்போது இன்று ஒரு நாள் ரிலாக்ஸாக இருந்துவிட்டு நாளையிலிருந்து படிப்போம் என்று தோன்றும். இந்த எண்ணத்தை உடனே துரத்துங்கள். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் ரிலாக்ஸ் செய்துகொண்டே தொடர்ந்து படியுங்கள்.
35.டிவி தீர்வல்ல
டென்ஷனாக இருந்தால் டிவி பார்க்காதீர்கள். கொஞ்சம் கவனித்தால் உங்களுக்கே ஒரு உண்மை புரியும். நீண்ட நேரம் டிவி பார்த்தால் நமக்குள் இனம்புரியாத ஒரு சோர்வு ஏற்படும். மேலும் டிவி பார்ப்பதால் நம் டென்ஷன் தீரப்போவதில்லை. இன்னும் அதிகம்தான் ஆகப்போகிறது. எனவே டிவிக்கு பதில் நம்பிக்கை தரும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.
36. பயத்தை வேடிக்கை பாருங்கள்.
பயத்திருந்து தப்பிக்க நினைத்து உண்மையில் நாம் படிப்பதிலிருந்துதான் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, உங்கள் பயத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை வேடிக்கை பார்த்தபடியே படியுங்கள். பயம்
ஒரு பக்கம் படிப்பு ஒரு பக்கம் என நீங்கள் பாட்டிற்கு செயல்பட்டுக்கொண்டிருந்தால் ஒரு நாள் பயம் இருந்த சுவடே இல்லாமல் நீங்கியிருக்கும்.
37. பயம் நல்லது.
அளவோடு இருந்தால் பயம்கூட நல்லதுதான். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு இதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரம் அவசியம். அதனால் சற்று பதட்டம் ஏற்படுவது இயல்பு. இதற்கு பர்பார்மன்ஸ் ஆன்சைட்டி என்று பெயர். எனவே சரியான அளவில் இருந்தால் பயம் கூட நல்லது. பயமே இல்லையென்றால் கூட அலட்சியமாக இருந்து செயலற்ற தன்மைக்குப் போய்விடுவோம்.
38. கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்.
ஒரு பாடம் படிக்க முக்கால் மணி நேரம் ஆகும் என்றால் அந்த பாடத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். திட்டமிட்ட நேரத்திற்குள் பாடத்தை படிக்க முடியவில்லை என்றால் ஏற்படும் பதட்டத்தையும் மனச்சோர்வையும் இதனால் நீக்கிக்கொள்ள முடியும். மேலும் திட்டமிட்ட நேரத்திற்குள் படித்து முடித்தால் கூடுதல் உற்சாகமும் பெறமுடியும்.
39. தாவாதீர்கள்.
படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பாடம் கடினமாக இருப்பதாகத் தோன்றினால் வேறு சப்ஜெக்ட் படிக்கலாம் என்று வேறு புத்தகத்தை எடுப்போம். அதுவும் கடினமாக தோன்றினால் மறுபடி வேறு ஒரு பாடம். இப்படி ஒரு மணி நேரத்தில் முன்று புத்தகம் மாறியிருப்போம். கடைசியில் உருப்படியாய் ஒரு வரி கூட படித்திருக்க மாட்டோம். இதை தவிர்க்க எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஒரு சப்பெஜக்டிலிருந்து அடுத்ததிற்கு தாவாதீர்கள்.
40. காலையில் படிப்பது நல்லது.
ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அதில் நிறைய எழுதுங்கள். பிறகு உங்கள் பெயரை எழுதுங்கள். மற்றொரு வெள்ளைத்தாளில் உங்கள் பெயரை மட்டும் எழுதுங்கள். எதில் உங்கள் பெயர் பளிச்சென்று தெரிகிறது. வெள்ளைத்தாள் என்பது நன்றாக ஒய்வெடுத்து உற்சாகமாக இருக்கும் உங்கள் காலை நேர மனம். நிறைய எழுதப்பட்ட தாள் என்பது அன்றைய நடப்புகளை எல்லாம் சுமந்து கொண்டிருக்கும் உங்கள் இரவு நேர மனம். இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள்.
காலையில் சீக்கிரமே எழுவதால் நிறைய நேரம் கிடைத்த உணர்வு ஏற்படும். இதனால் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
Leave a Reply