செவ்வாய் வருவாயா? வெறும் வாயா?

– கே.ஆர். நல்லுசாமி

சரியா – தவறா – சாதாரணமானவன்
சரியா – மிகச்சரியா – சாதனையாளன்
லாபமா – நட்டமா – சாதாரணமானவன்
லாபமா – அதிகலாபமா – சாதனையாளன்
மகிழ்ச்சியா – துக்கமா – சாதாரணமானவன்

மகிழ்ச்சியா – பெருமகிழ்ச்சியா – சாதனையாளன்
வெற்றியா – தோல்வியா – சாதாரணமானவன்
வெற்றியா – மாபெரும் வெற்றியா – சாதனையாளன்

எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும்போது ஒன்று மிக எளிதாக இருக்கும். அல்லது மிக கடினமாக இருக்கும். இவற்றையெல்லாம் மீறி சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும்போது சாதனை பிறக்கும்.

வாழ்க்கையில் சாதிக்க வந்த நம்மை சோதிக்க சில இருக்கலாம். ஆனால், பாதிக்கு வந்த பின்பு மீதிக்கு என்ன தயக்கம்.

பல இன்னல்கள், பல தோல்விகள், இவைகளுக்கெல்லாம் காரணம், நேரம் சரியில்லாதபோது ஆரம்பித்ததன் விளைவுதான் என்று பல குரல்கள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்போது எப்படி நம்பாமல் இருப்பது.

சாதாரணமானவராக நாம் இருக்கும் வரை நம்பித்தான் ஆக வேண்டும். சாதனையாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது மனதில் துளிர் விடுகிறதோ அப்பொழுதே அந்த அவ நம்பிக்கைகளைப் புறந்தள்ள வேண்டும். அப்படித்தான் நானும் பல இன்னல்களுக்குப் பிறகு ஒரு தொழில் துவங்க நினைத்து தொழில் ஆரம்பிக்க நல்ல நாள் பார்க்க என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

அவர் ஒரு முன்னேற்றச் சிந்தனையாளர். அவர் “உங்கள் உழைப்பு, உண்மை, நேர்மை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து தொழிலை ஆரம்பியுங்கள். அப்படி ஆரம்பிக்கும் தொழில் நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு இந்த நாளே நன்னாள்தான். இன்றே ஆரம்பியுங்கள்” என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.

அப்பொழுது காலை நேரம் தாண்டிவிட்டது. “இன்று மாலையில் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டதற்கு, “தாராளமாக ஆரம்பிக்கலாம்” என்றவுடன் ஆரம்ப பூஜைக்கு ஆயத்தமானேன். மாலையில் பூஜை போடப்பட்டது. அப்பொழுது தீப ஆராதனை காட்டும்போது தட்டு தவறி விழுந்தது. அய்யய்யோ! நேரம் சரியில்லை என்ற முனகல் வந்தது. அதை உடனே மறுத்து இனிதான் நமக்கு நல்ல நேரம் வரப்போகிறது. அதிர்ஷ்டம் வந்து பணம் கொட்டப் போகிறது. அதன் முன் உதாரணம்தான் இப்படி தட்டு தவறி விழுந்தது என்று துவங்கினேன். அன்று முதல் வெற்றிதான்.

அதுபோலத்தான் என்னிடம் காண்ட்ராக்ட் வேலை பார்ப்பதற்காக ஒருவர் எனது அலுவலகம் வந்தார். அன்று அதிகமான வேலை இருந்தது. “இன்றே வேலையில் சேருங்கள்” என்றேன். “இன்று செவ்வாய்க்கிழமையாக இருக்கிறது. ஆகவே நாளை ஆரம்பிக்கிறேன். செவ்வாயில் ஆரம்பித்தால் வெறும்வாய் என்பார்கள்”, என்றார்.

“இல்லை அது தவறு. என்ன ஆனாலும் இன்றே ஆரம்பியுங்கள். இன்று மாலையே வெறுவாயா? வருவாயா? என்பதை அறிந்து கொள்வோம்” என்று அவரை ஊக்கப்படுத்தி வேலையை துவங்கச் செய்தேன். அன்று மாலை, தினமும் சம்பாதிப்பதைவிட அதிகமான வருமானத்தை அவரால் பெறமுடிந்தது. இப்பொழுது கூறுங்கள் செவ்வாய் வருவாயா? வெறுவாயா? செய்கின்ற வேலையில் நமது கவனம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர நாள் எந்த நாள் எந்த நேரம் என்பது முக்கியமில்லை.

“வெட்டிப் பேச்சை விட்டுவிட்டு

வெற்றிப் பேச்சை பேசிடுவோம்”

“வெகு நேரம் உழைத்து நாமும்

வெகு மதிகளை வென்றிடுவோம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *