நீங்கள் தவிர்க்க முடியாதவரா?

– சினேகலதா

வேலைகளில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் எதுவுமே கிடையாது. பிடித்துச் செய்கிற வேலை, பிடிக்காமல் செய்கிற வேலை என்று இரண்டுதான் உண்டு. பிடித்ததை மட்டுமே செய்வது என்றும் முடிவெடுக்கலாம். இல்லையென்றால், செய்கிற வேலையை பிடித்ததாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஏன் தெரியுமா? எப்போதெல்லாம் நாம் ஈடுபட்டு வேலை பார்க்கத் தொடங்குகிறோமோ அப்போதெல்லாம் நாம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறோம். ஒரே நிறுவனத்தில் மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பயிற்சி பெற்றவர்கள்தான் சிநேகாவும் லாவண்யாவும். இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் வேலை கிடைத்தது. நோயாளிகளின் சிகிச்சைக் குறிப்புகளைத் தயார்செய்து, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, பணத்துக்கு விண்ணப்பிக்கும் வேலை அவர்களுடையது.

அந்த மருத்துவமனையில் பொது மேலாளர் ராமகிருஷ்ணன். அவருடைய நேரடிக் கண்காணிப்பில் இரண்டு பேருமே வேலை பார்க்கிறார்கள். செயல்திறனை மட்டுமல்லாமல், வேலையை இருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் மதிப்பிடுவதில் ராமகிருஷ்ணன் கெட்டிக்காரர்.

ஒருநாள், சொல்லிவைத்த மாதிரி சிநேகா – லாவண்யா இருவரின் கம்ப்யூட்டர்களிலும் கோளாறு. அவற்றை சரிசெய்ய ஆட்கள் வந்தனர். அவர்களுடைய வேலை முடியும்வரை சிநேகா, பார்வையாளர்களுக்கான நாற்காயில் உட்கார்ந்துகொண்டு கவனமாக நெயில் பாலீஷ் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ராமகிருஷ்ணன்.

“எங்கே லாவண்யாவை காணோம்?” சுற்றுமுற்றும் பார்த்தபோது லாவண்யாவின் குரல் அருகே கேட்டது. கம்ப்யூட்டரை சரிசெய்து கொண்டிருந்தவர்களிடம் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தார் லாவண்யா. கம்ப்யூட்டரில் பொதுவாக என்னென்ன பிரச்சினைகள் வரும்? எப்படியெல்லாம் சரிசெய்யலாம்? என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த லாவண்யாவை நம்பிக்கையுடன் பார்த்தபடி நகர்ந்தார், ராமகிருஷ்ணன்.

தன்னிடம் என்ன தந்தாலும், தவறில்லாமல், உள்ளது உள்ளபடி கம்ப்யூட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவது என்பது சிநேகாவின் பாணி. மருத்துவக் குறிப்புகள் பற்றிய விபரங்கள் சிநேகாவுக்குப் புரியாது. எல்லா அறிக்கைகளிலும் இருக்கும் பொதுவான விஷயங்களை 'கட் & பேஸ்ட்' செய்யலாம் என்பதுகூட கவனத்தில் இருக்காது. அட்சரம் பிசகாமல் அப்படியே அடித்துக் கொடுப்பதில்தான் சிநேகாவின் கவனம் இருக்கும்.

லாவண்யா அப்படியில்லை. கம்ப்யூட்டரின் குறுக்கு வழிகளை ஆர்வத்துடன் அறிந்து வைத்திருந்தார். மருத்துவக் குறிப்புகளை, சிறுகதை படிப்பது மாதிரி சுவாரஸ்யமாய் படித்துப் பார்ப்பார். நர்சுகளுடன் நட்புகொண்டு, சில சந்தேகங்களையும் கேட்பார். இதையெல்லாம் பார்க்கையில், சிநேகாவின் சிவந்த இதழ்களில் இகழ்ச்சியான புன்னகை நெளிந்தோடும். “ரொம்பதான் படம் போடறா” என்று மனசுக்குள் எழும் கிண்டல் கண்களில் பளிச்சிடும்.

அன்றொருநாள், சிநேகாவிடம் வந்த மருத்துவ அறிக்கை ஒன்றில் ஒரு வயதுக் குழந்தைக்கு பார்க்கின்சன் நோய் சிகிச்சை தரப்பட்ட விவரங்கள் இருந்தன. சிநேகா மும்மரமாக அந்தக் குறிப்புகளை அடித்துக் கொண்டிருந்தபோது, லாவண்யா படித்துப் பார்த்த மருத்துவ அறிக்கையில் அறுபது வயதுப் பெரியவருக்கு தடுப்பூசிகள் போட்ட விபரங்கள் இருந்தன. சந்தேகம் பொறிதட்டியதும், சிநேகாவின் அறிக்கையை அவள் அனுமதியோடு வாங்கிப் பார்த்த லாவண்யாவுக்கு விபரம் புரிந்தது. ஒரு வயதுக் குழந்தைக்குத் தடுப்பூசிகளும், அறுபது வயதுப் பெரியவருக்கு பார்க்கின்சன் நோய் சிகிச்சைகளும் தரப்பட்டிருக்க வேண்டும். நோயாளிகளின் பெயர்கள் மாறியதில் அறிக்கைகளும் மாறி, அபத்தமான தவறு நேர இருந்தது. லாவண்யாவுக்கு பாராட்டு மழை.

அடுத்த வாரமே லாவண்யாவுக்கு பணி உறுதியாகி, சம்பளமும் உயர்ந்தது. சிநேகாவுக்கு பயிற்சிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

ஒரே வேலைதான். உன்னிப்பான கவனமும், உள்ளார்ந்த ஈடுபாடும், லாவண்யாவை மருத்துவமனையில் தவிர்க்க முடியாத சக்தியாய் வளர்த்தெடுத்தது. லாவண்யாவை மட்டுமல்ல… எல்லோரையும் வளர்க்கப் போவது இந்தப் பண்புகள்தான்.

zp8497586rq