பிறந்தநாளை கொண்டாடுங்கள்

எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே இரண்டு பேரும் அவர்கள் குழுவினரோடு இமயத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பயணத்தை ரத்து செய்யலாமா? என்று எட்மண்ட் யோசிக்கிறார். அப்போது டென்சிங் சொன்னான், “இல்லை தொடர்வோம். ஒருவேளை நாம் வெற்றி பெற்றால், உலகத்தின் உயர்ந்த சிகரத்தில் முதலில் கால் பதித்த பெருமை நமக்கு கிடைக்கும். ஒரு வேளை நாம் தோல்வியுற்றால் உலகத்தின் உயர்ந்த சிகரத்தில் முதலில் உயிர்நீத்த பெருமை நமக்கு கிடைக்கும்” என்கிறான்.

சிலிர்ப்போடு பயணத்தை தொடர்ந்த இருவரும் அடுத்தநாள் அதாவது 1953ஆம் வருடம் மே மாதம் 29ம் தேதி காலை 11 மணிக்கு எவரெஸ்டை எட்டிப் பிடிக்கிறார்கள்.
ஒரே நாளில் உலகப்புகழ் பெறுகிறார்கள். இருவரும். பத்திரிகைகள் எல்லாம் பேட்டிக்காக குவிகின்றன. அப்போது ஒருவர் டென்சிங்கிடம் கேட்கிறார், ”என்று உங்கள் பிறந்தநாள்?”

டென்சிங் சொன்னார், ”1953ஆம் வருடம் மே மாதம் 29ம் தேதி காலை 11 மணிக்கு பிறந்தேன்.”

டென்சிங் சொன்னது சரிதான், நாம் சாதிக்கும் தினம்தான் நம் பிறந்ததினம். சாதிக்கத்தான் பிறந்தோம் என்பதை நிரூபிக்கும் தினம்தான் நம் பிறந்ததினமாக கொண்டாடப்பட வேண்டும்.

இனிமேல் நீங்களும் இவ்வுலகில் பிறந்த நாளை கொண்டாடாதீர்கள். எதற்காக பிறந்தீர்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் நாளை கொண்டாடுங்கள்.
இனி உங்களை பொறுத்தவரை நீங்கள் வெற்றி பெற்ற நாள்தான் உங்கள் பிறந்தநாள் என்பதால், உடனே உங்கள் பிறந்த நாளை கண்டுபிடியுங்கள்.

சீக்கிரமே பிறந்த நாள் கொண்டாட என் வாழ்த்துக்கள்.

‘ கிருஷ்ண.வரதராஜன்
துணையாசிரியர் நமது நம்பிக்கை
சேர்மன் ஐடியா ப்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *