வெற்றிச் சூத்திரங்கள்

– கனகலஷ்மி

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி துறை ஆய்வில் சாதனை படைத்திருக்கும் இந்தியர், பேராசிரியர் ஃபெரோஸ் பாபு. தன் வாழ்விலிருந்தும் ஆய்விலிருந்தும் அவர் அறிவிக்கும் வெற்றிச் சூத்திரங்கள் நம் மாணவர்களுக்கு புதிய திசைகளைத் திறக்கும்!! இதோ …. பேராசிரியருடன் நாம்!!

பொறியியல் நிபுணராகவும், மருத்துவத் துறை ஆராய்ச்சியாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் துறை குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

அடிப்படையில் நான் பொறியியல் படித்தவன். இன்று அமெரிக்காவில் ஃபிலெடெல்ஃ பியாவில் உள்ள டெம்பிள் யூனிவர்சிட்டியில் ரேடியாலஜி துறையில் இணைப்பேராசிரியராக இருக்கிறேன். மனித மூளையின் வடிவமைப்பு, அதன் தன்மைகள் செயல்படும் விதம் ஆகியவை குறித்து தலையை அறுத்துப்பார்க்காமலேயே தெரிந்து கொள்கிற ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளேன். இந்த ஆராய்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.

பொறியியல் படித்த நீங்கள் மருத்துவத் துறை ஆராய்ச்சியாளராக மலர்ந்தது எப்படி?

கோவையில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் மூத்த மகனாகப் பிறந்தேன். எனக்கு மூன்று தம்பிகள். சின்ன வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்கிற கனவு என்னுள் ஆழமாக வேர் விட்டது. ‘2 தேர்வு முடிவுகள் வெளியானதும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இடம் கிடைக்கவில்லை. பொறியியல் துறையில் இடம் கிடைத்தது. அந்தத் துறையில் அரைமனதோடு ஈடுபட்டேன். மருத்துவராக முடியவில்லையே என்ற மனச்சுமையுடன் இருந்தேன். அதனாலேயே படிப்பில் உற்சாகம் காட்டவில்லை. இயற்பியல் துறையில் மட்டும் அளவில்லாத ஈடுபாடு காட்டினேன். ஏனென்றால் மருத்துவத்திற்கு அடிப்படையே இயற்பியல்தான். அதில் மட்டும் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுவேன். என் இயற்பியல் ஆசிரியர் என்னை அழைத்து, மற்ற பாடங்களில் நான் ஏன் அதே ஆர்வம் காட்டுவதில்லை என்று கேட்டபோது என் மருத்துவக்கனவு நிறைவேறாததால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்துத் தெரிவித்தேன். அப்போதுதான் அவர் பயோ மெடிக்கல் என்ற துறையைப் பற்றி எனக்குத் தெரிவித்தார். பொறியாளராக இருந்து கொண்டே மருத்துவத் துறையில் ஆராய்ச்சி யாளராக வரமுடியும் என்றார். இது எனக்குப் புதிய திசையைத் திறந்து விட்டாற்போல் இருந்தது. உற்சாகத்துடன் எல்லாப் பாடங்களிலும் ஈடுபட்டேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து ஆராய்ச்சியாளராக மலர்ந்தேன்.


இன்று மற்ற பொறியியல் துறை மாணவர் களும் விருப்பமிருந்தால் மருத்துவத் துறையில் ஈடுபட முடியுமா?

நிச்சயமாக! அடிப்படையில் இந்த உடல் கூட ஒருவகை பொறியியல் கட்டமைப்புதான். இன்று நான் மருத்துவத் துறை ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு பொறியியல் துறையைத் தேர்வு செய்து படிக்குமாறு ‘2 மாணவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். பொறியியலை அடித்தளமாகக் கொண்டு மருத்துவத்தை ஆராய்ந்தால் இருதுறை வல்லுநர்களாக வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக, சிவில் என்ஜினியரிங் படித்தால் எலும்புகளின் கட்டமைப்பு பற்றி ஆராய்ச்சி செய்யலாம்.

எலக்ட்ரானிக் என்ஜினியரிங் படித்தால் இதயத்தின் செயல்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். ஏனென்றால் உலகின் மிக நுட்பமான மின்னணு இயந்திரம், மனித இதயம்தான்.

அதே போல டெக்ஸ்டைல் என்ஜினியரிங் துறையில் ஈடுபட்டால் மனித உடலில் திசுக்களின் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி செய்யலாம்.

இப்படி இருவேறு துறைகளில் ஒரு மாணவனுக்கு நாட்டமிருந்தால் அவனுடைய கவனமும் திறமையும் சிதறிப் போகாதா?

இல்லை. பலதுறை ஈடுபாடும் அறிவும் அனுபவமும் ஒன்று சேரும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகின்றன. ஒரு கண்டுபிடிப்பில்கூட, பலதுறை நிபுணர்கள் கைகோர்க்கிற போதுதான் அது முழுமை அடைகிறது. இன்று மருத்துவ உலகில் பரவலாகப் பயன் படுத்தப்படும் எம்.ஆர்.ஐ.. என்கிற ஸ்கேனிங் கருவியையே எடுத்துக் கொள்ளுங்கள். மனித மூளையை மட்டுமின்றி உடலின் பிற பாகங்களையும் சில நொடிகளில் படம் பிடிக்கும் இந்தக் கருவியின் உருவாக்கத்தில் மின்னணு, தகவல் தொடர்பியல், கணினி மருத்துவம் என்று எத்தனையோ துறைகளுக்குப் பங்குண்டு. ஒரு துறை அறிவை மட்டும் வைத்துக் கொண்டு இப்படியொரு கண்டு பிடிப்பை நிகழ்த்தியிருக்க முடியாது.

உங்கள் ஆராய்ச்சியி லேயே முக்கியமானது பிரெய்ன் மேப்பிங் (Brain Mapping) என்று அறிகிறோம். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

பொதுவாக, மூளை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாமே நோய்வாய்ப்பட்ட நிலையிலோ மூளையில் அடிபட்ட நிலையிலோ இருக்கிற போதுதான் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். உதாரணமாக ஒரு மனிதருக்கு, தலையின் மேற் புறத்தில் கம்பி குத்தி கழுத்து வழியாக வெளிப் பட்டது. சிகிச்சைக்கு வந்த சில நிமிடங்களில், கடும் ரத்தப்போக்கு இருந்ததே தவிர மற்றபடி நன்றாகத் தான் இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவருடைய பேச்சு குளற ஆரம்பித்தது. அவருடைய மூளையை ஆராய்ந்த போது, மொழியை உள்வாங்கி, வெளிப்படுத்துகிற பகுதி சிதைந்திருந்தது தெரிய வந்தது.

ஆனால், இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் போது மூளையை ஆய்வு செய்யாமல் நல்ல நிலையில் ஒரு மூளை இயங்குகிறபோது அதன் செயல்பாடுகள் அதன் பாகங்களின் தனித் தன்மைகள் ஆகியவை பற்றி அறிந்து கொள்வதற் காக நான் மேற்கொண்ட ஆராய்ச்சிதான் பிரெய்ன் மேப்பிங். இதில் பல சுவாரசியமான தகவல்களைக் கண்டறிந்தேன்.

அதில் சிலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, ஒவ்வொருவருக்கும் மூளையின் வடிவமைப்பு மாறுபடுகிறது என்பதைக் கண்ட போது அதுவே ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் மூளையை ஸ்கேன் செய்யப்போகிற போது உங்கள் வலது கையை அசைக்கச் சொல்வார்கள். அப்போது மூளைக்கு பிராணவாயு பாயும்.

செயல் செய்யாமல் இருக்கும் போது மூளையில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும். எனவே செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் களுக்குத்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு மனிதன் வெற்றி பெற மட்டுமில்லாமல், ஆரோக்கியமாக இருக்கவும் செயல் எவ்வளவு முக்கியம் என்பதற்கு மருத்துவப்பூர்வமான ஆதாரம் இது.

ஒருவரின் சிந்திக்கும் திறனையும் செயல் திறனையும் தீர்மானிக்கக்கூடிய மூளையின் அம்சங்கள் பற்றி?

மனித மூளை ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. மூளையின் முதல்பாகம் ஃபிரண்டல் லோப் எனப்படும். சிந்தனைத் திறன், தர்க்க ரீதியாக விவாதித்தல், பகுத்தறிதல், எடை போடுதல், காரணம் கண்டறிதல் போன்றவற்றிற்கு இந்த முதல்பாகம் காரணம்.

மூளையின் பின்புறமே அதன் இரண்டாம் பாகம். ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள வேறு பாடுகளை உணர்த்த இதுவே துணை. வண்ணம், வெளிச்சம், அளவு போன்ற வேற்றுமைகள் விளங்க இதுவே வழி செய்கிறது. மூளையின் பின்புறத்தின் மற்றொரு பகுதியான செரிபெல்லம், மூன்றாவது பாகம். இது உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது.

மூளையின் 4 மற்றும் 5ம் பாகங்கள், பெரிட்டல் லோப் என்று பகுதிகள், இவை உள்ளே அழுந்தி இருக்கும். உடலின் மற்ற பாகங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கான சமிக்ஞைகளை இந்தப் பகுதிதான் அனுப்புகிறது.


சுயமுன்னேற்றத் துறையில் மனதின் திட்டமிடுதலைக் குறிக்க, மைண்ட் மேப்பிங் என்று ஒன்று சொல்லப்படுகிறது. அதற்கும் பிரெய்ன் மேப்பிங்கிற்கும் ஏதேனும் தொடர்புண்டா? முதலில் மனம் என்பது என்ன?

அறிவு, உணர்ச்சி, தர்க்கம், விழிப்புணர்வு போன்ற பல்வேறு அம்சங்களின் கூட்டமைப்பு தான் மனம். மூளை என்கிற பாகம் உங்கள் மனதை ஒழுங்குபடுத்துகிறது. மைண்ட் மேப்பிங் என்பது, மனதின் செயல்பாடுகளைச் சார்ந்தது. மூளையை மருத்துவ ரீதியாகக் கண்காணிக்கிறபோது, ஒரு விஷயத்தில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து உண்மையா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் பொய் சொல்கிறபோது மூளை அதிக அளவில் பயன்படுகிறது. குறிப்பாக ஃபிரண்டல் லோப் விறுவிறுப்பாக இயங்குகிறது. உண்மையை சொல்ல மூளையின் எல்லாப் பகுதிகளும் செயல்படவேண்டிய அவசியமில்லை. இது மூளையின் இயற்பியல் சார்ந்த தன்மை.

நான் ஆய்வு செய்த பிரெய்ன் மேப்பிங்கில் கண்டறிந்த உண்மைகள் இவை. தியானம், யோகா போன்றவை, மனிதனின் செயல்திறனை மேம் படுத்தும் சில சுரப்பிகளைத் தூண்டுகின்றன என்பதையும் இந்த ஆய்வில் நிரூபித்திருக்கிறோம்.

பொய் சொல்வதைக் கண்டறியும் கருவி (Lie Detector) உள்ளதே, அதற்கும் உங்கள் ஆய்வுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பொய் சொல்வதைக் கண்டறியும் கருவிகள் பொய் சொல்லக்கூடும் என்பதுதான் உண்மை. அந்தக் கருவியைப் பொறுத்தவரை, ஒரு மனிதன் பொய் சொல்கிறானா என்று மூன்று விதங்களில் கண்டறிவார்கள். வியர்வை சுரப்பது, இதயத்துடிப்பு அதிகரிப்பது, இரத்த ஓட்டம் கூடுவது. ஆனால் இந்த மூன்றும் பதட்டம் அதிகரித்தால்கூட நிகழக்கூடியவைதான். எனவே பொய் சொல்வதைக் கண்டறியும் கருவியை ஒருவர் உடலில் பொருத்தி, கடுமையாகக் கேள்வி கேட்பதன் மூலமும் இந்த சமிக்ஞைகளை ஏற்படுத்த முடியும்.

அதே போல சில தீவிரவாதிகள் தங்கள் செயல்கள் மீது முழு நம்பிக்கை வைத்து சலன மில்லாமல் பதில் சொல்வார்கள். அப்போதும் இந்தக் கருவிகளால் கண்டறிய முடியாது.

ஆனால் பிரெய்ன் மேப்பிங் முறையில் மூளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப் படுகிறது. உடனே மூளை அதற்கான பதிலைத் தேடுகிறது. சில விஷயங்களை வெளியிடக்கூடாது என்று மூளை நினைத்தால் அதன் முதல் பகுதி வேகமாக செயல்பட்டு உங்களைப் பொய் சொல்ல வைக்கிறது. இதையெல்லாம் பிரெய்ன் மேப்பிங் மூலம் தெளிவாகக் கண்டறியலாம்.


ஓர் ஆய்வாளர் என்ற முறையில் உங்கள் வாழ்வை ஆய்வு செய்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

முதலாவதாக சூழ்நிலை எவ்வளவு எதிராக இருந்தாலும் உங்கள் கனவுளைக் கை விடாதீர்கள். அவற்றை நிறைவேற்றிக் கொள்ள காலதாமதமாகவேனும் வாய்ப்பு கிடைக்கவே செய்யும். அடுத்து ஆராய்ச்சி செய்கிறபோது ஆதாரங்களின் அடிப் படையில் அதன் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படுவது போல், உங்கள் நம்பகத் தன்மை உங்கள் செயல்களின் மூலமாகத்தான் உறுதியாகிறது. எனவே உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள்.

ஒவ்வொரு மூளையும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் என்பதை உணருங்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *