வாழ்ந்திடத் தூண்டும் போர்க்குணம் வேண்டும்

அன்று மனதளவில் ஒடுக்கப்பட்ட சிறுவர்! இன்று மனோதத்துவ நிபுணர்! உடல் ஊனம் என்பது உடல் குறைவே தவிர தகுதிக்குறைவு அல்ல என்று தன் வாழ்வால் உணர்த்தியிருக்கும் இளம் சாதனையாளர்! ஊனமுற்றவர்களால், ஊனமுற்றவர்களை கொண்டு எடுக்கப்படுகிற திரைப்படத்தின் கதாநாயகன் தீபக், இனி நம்முடன்…..

உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றி?

என் பெயர் தீபக். இப்போது மனோதத்துவ நிபுணராக இருக்கிறேன். நான் பிறந்தது திருச்சியில். நான் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டேன். அதற்கு என் அம்மா சொன்ன காரணம், எனக்கு கொடுக்கப்பட்ட மருந்து நல்ல பதத்தில் இல்லை என்பதுதான். சிறு வயது முதலே போலியோ நோய்க்கு மருத்துவம் என்ற முறையில் பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன். நான் தாங்குகோலை தாங்கி நடக்கும்போது உயிர் போகும்படி வலிக்கும். போலியோ நோய்க்கு மாவுக்கட்டெல்லாம் போடுவார்கள். ஆனால் இது மூளையிலுள்ள லோயர் மோட்டர் நியூரான் என்கிற பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு என்றுகூட தெரியாத காலம் அது. காலுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவார்கள். அது மரண வேதனையை ஏற்படுத்தும். கோவையில் சில காலம் சிகிச்சைக்காக தங்கி இருந்தேன். அங்கே சிகிச்சை என்ற பெயரில் காலையில் எழுந்தவுடன் உடல் முழுக்க எண்ணையை தேய்த்து வெயிலில் படுக்க வைப்பார்கள். சுடுகிற கஞ்சியில் கால் வைக்க வேண்டும். மணலில் இடுப்பளவு புதைத்து வைப்பார்கள். மூன்று முதல் நான்கு வயதுவரை இப்படித்தான் அந்த நாட்கள் கழிந்தது. என் வாழ்வின் கறுப்பு நாட்கள் அவை.

உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்?

என் தாய் பம்பாயில் பிறந்து வளர்ந்தவர். என் தந்தை கன்னியாகுமரியில் வளர்ந்தவர். எதிர்பாராத விதமாக இருவருக்கும் சரியான உடன்பாடு இல்லை. தினசரி பிரச்சனைகள். என் தந்தைக்கு நான் போலியோ நோயால் பாதிக்கப் பட்டு பிறந்தது ஒருவித தாழ்மையுணர்வை ஏற்படுத்தியிருந்தது. என்னை உறவினர்களிடம் அறிமுகம் செய்யவே கூச்சப்படுவார். அவருக்கு அப்போது குடிப்பழக்கம் அதிகரித்திருந்தது. ஆனால் என் அம்மாதான் எனக்கு அனைத்தும். பல நாட்கள் எனக்கு சுவரைத் தவிர வேறு எந்த உலகமும் தெரியாது. எனக்காக வெளியே எங்கும் செல்லாமல் அவரும் வீட்டிலேயே இருப்பார்.

போலியோ நோயால் உங்கள் கால் பாதிக்கப்பட்ட நிலையில் நீங்கள் சந்தித்த நடைமுறை சிக்கல்கள் என்னென்ன?

நான் சந்தித்த முதல் சிக்கல் படிப்பு.  என்னை எந்த பள்ளியும் சேர்த்துக்கொள்ள முன் வரவில்லை. என் அம்மா மிகவும் போராடி என்னை செயின்ட் மேரீஸ் பள்ளியில் சேர்த்தார். பல மாணவர்கள் படிக்கிற இடத்தில் என்னையும் சக மாணவனாக யாரும் பார்க்கவில்லை. ஊனமுற்றவன் என்ற பார்வையே முதன்மை யாகயிருந்தது. நான்கு முதல் ஐந்து வயதுவரை வெளி உலகமே பார்த்திருக்கவில்லை. எனவே, பத்திரிகை புத்தகங்களில் பேருந்தின் புகைப் படத்தை பார்த்தால்கூட ரசித்துப் பார்ப்பேன். நான் நான்காம் வகுப்பு படிக்கிறபோது, எங்கள் பள்ளியில் வேடந்தாங்கலுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னால் நடக்க இயலாத காரணத்தால் என்னை அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்கள். அந்த சுற்றுலா என் கனவு. வெளியுலகமே பார்த்திராத எனக்கு அது சொர்க்கம்போல் தெரிந்தது. மனோதத்துவ முறையில் ஆறு அல்லது ஏழு வயதை ‘ஆர்கனைஸ்டு ப்ளே’ (Organised Play) என்று சொல்வார்கள். பெண் குழந்தைகள் என்றால் செப்பு சாமான் விளையாடும். ஆண் குழந்தைகள் என்றால் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள். நான் என் வயதிற்கேற்ற விளையாட்டை இழந்திருந்த வேளையில், என்னை அழைத்துச் செல்ல மறுத்தது மாபெரும் வலியை ஏற்படுத்தியது. அந்த வயதிற்கேயுரிய வளர்ச்சி என் மூளைக்கும் மனதிற்கும் இருந்தது. என் உடலுக்குத்தான் இல்லை. நான் பல துயரங்களை அந்த வயதில் பார்த்திருந்ததால் எதற்கும் அழுததில்லை. ஆனால் என்னை அழைத்துச் செல்ல மறுத்தது எனக்கு பெரும் அடியாக இருந்தது. முப்பது ஆண்டுகள் கழித்து இன்று நினைத்தாலும் வலிக்கிறது.

இன்று மனோதத்துவ நிபுணராகவும், விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாகவும் நடித்துவரும் உங்களுக்கு வெளிஉலக தொடர்புகளை ஏற்படுத்தியது யார்? எப்படி?

என்னை செதுக்கியது என் அம்மா தான். என்னை யாராவது ‘நொண்டி’ என்றால் எனக்கு வலிக்கும். அப்போது என் அம்மா என்னிடம் சொன்ன நேர் மறையான கருத்து இன்னும் என்னை நம்பிக்கையுடையவனாக வைத்திருக் கிறது. “உன்னை யாராவது நொண்டி என்றால் உன் பாவம் குறைந்து விடும். உன் பாவம் குறையக் குறைய உன் கால் விரைவில் சரியாகிவிடும்” என்றாள். அந்த பிஞ்சு வயதில் இந்த வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தது. வெளி உலகைப் பார்க்க ஆசைப் பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு என்னை வெளியே அழைத்துச் சென்றார். முதலில் என்னை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் என் தாங்குகோல் மாட்டுத் தோலினால் ஆனது என்பதால் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். நொறுங்கிப் போய்விட்டேன். அப்போது மனதிற்குள் ஒரு வெறி. என்னால் முடியாது என்கிற காரியங்களை யெல்லாம் உடைத்து முடியும் என்று காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஊனமுற்றவர்கள் என்று சொல்லப்படுகிற எங்களிடம் ஒரு வியப்பான திறமையுண்டு. சாதாரண மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையை ஒரு முறை திட்டமிட்டால் போதும். ஆனால் நாங்கள் ஒவ்வொரு விநாடியும் திட்டமிட வேண்டும். என் வாழ்வின் மிகப்பெரிய மைல்கல்லாக நான் கருதுவது தாங்குகோல் வைத்துப் படியேற கற்றுக் கொண்டது. என்னால் முடியாது என்று கூறியவர்கள் முன் எதையேனும் சாதிக்க வேண்டுமென மலைக்கோட்டை மலை ஏறினேன். மிகவும் சிரமப்பட்டு 325 படிகள் கடந்து தாயுமானவர் கோவிலுக்குச் சென்றபோது நான் ஷு (Shoe) அணிந்திருந்ததால் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். என்னுடைய வெளி உலக அனுபவங்கள் மிகவும் கசப்பாகத்தான் ஆரம்பித்தது.

உங்கள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள்?

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் உச்சக்கட்ட பிரச்சனை. என் அப்பா குடித்துவிட்டு வந்து என் அம்மாவை அடிப்பார். அப்பொழுது ஓரளவு விபரம் தெரிகிற வயது எனக்கு. என் தந்தையை எதிர்த்தேன். என் அம்மா என் நலன் கருதி திருநெல்வேலி அருகே இருந்த என் பெரியம்மாவிடம் என்னை அமர சேவா சங்கத்தில் சேர்க்கச் சொன்னார்கள். ஆனால் அது புரியாமல் என் பெரியம்மா என்னை வேறொரு நிறுவனத்தில் சேர்த்தார். கிருஸ்துவ நிறுவனம். எனக்கு அசைவமென்றால் அருவருப்பு. அங்கு அதுதான் உணவு. அங்கு கழிவறையும் சுத்தமாக இருக்காது. தரையில் ஊர்ந்துதான் செல்வேன். அது நரக வேதனை. நான் ஒரு பக்கம். என் தங்கை பாட்டி வீட்டில், என் தாய் ஹாஸ்டலில் என்று பிரிந்திருந்து மிகவும் வேதனைப்பட்டோம்.

துயரத்தோடே பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன். எனக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கிடைத்தது. என் தந்தைக்கு பயந்து அங்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் பி.பி.ஏ படித்தேன். ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால் கூடுதலாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அது வேலை தேட சிரமமாக இருந்தது. வேலைதேடி சென்னை வந்தேன். நான் நேர்முக தேர்வுக்குச் சென்றஅனைத்து இடத்திலும் அவர்கள் சொல்லும் பதில். “Everything is fine. But we may not be able to give you job”.காரணம் என்னை வேலைக்கு எடுக்கும் இடத்தில் வேறொருவரை வேலைக்கெடுத்தால் இரண்டு ஆட்கள் செய்யும் வேலையை அவர் ஒருவரிடம் வாங்கிவிடலாம் என்பதால்.

அப்போது நான், என் அம்மா, தங்கை மூன்று பேரும் ஒரு வீடெடுத்து சென்னையில் தங்கியிருந்தோம். அப்போது வி.ஆர்எஸ். என்கிற அமைப்பு ஊனமுற்றோருக்கு தட்டச்சு, ஷார்ட் ஹேண்ட் போன்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பதை அறிந்து அங்கு சேர்ந்தேன். அது பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தோல்வியுற்ற மாணவர்கள் பயில்கிற இடம். அங்கு அறிவுப்பூர்வமாக எதுவும் கற்றுத்தரப் படவில்லை. அந்த அமைப்பிற்கு சமூக சேவையில் முதுகலை பட்டம் (MSW) பெற்ற மாணவர்கள் வருவார்கள். அவர்கள் மூலமாகத்தான் அப்படி ஒரு படிப்பு இருப்பதே தெரியும். அது மனவளம் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு. அதற்கான நுழைவுத்தேர்வு எழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்றேன். பலநாட்கள் வெளியுலகமே பார்த்திருக்காததால் எனக்கு வினாடி வினா, பொது அறிவு என்றால் வெறித்தனமாக பிடிக்கும். எனவே, அந்த நுழைவுத்தேர்வினில் சுலபமாக தேர்ச்சி பெற்றேன்.

பல நாடுகள் வலம் வரும் வாய்ப்பு எப்படி கிடைத்தது? உங்களை பொறுத்த வரையில் வெளி நாடுகளில் ஊனமுற்றவர்கள் மீதான பார்வை எப்படியுள்ளது?

நான் லயோலாவில் படிக்க முற்பட்டபோது அவர்கள் சொன்ன முதல் விஷயம் 2 நாட்கள் களப்பணியாற்ற வேண்டும் என்பதுதான். அது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. அதில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். என் பேராசிரியர் ஒருவரின் மூலமாக வி.எச்.எஸ். (V.H.S.) மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அங்கு நான்கு மாதம் சிறப்பாக வேலை செய்தமையால், பால் ஹோம்லின் என்கிற அமைப்பின் மூலமாய் லண்டனில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பின் மொத்த செலவையும் அந்த அமைப்பே ஏற்றுக்கொண்டது. ஆனால் எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் பிரச்சனை. என் தந்தையை பிரிந்து நாங்கள் இருந்ததால் எங்களிடம் குடும்ப அட்டையில்லை. என்னிடம் எந்த அடையாளமும் இருக்கவில்லை. கல்லூரி அடையாள அட்டை மட்டும்தான் வைத்திருந்தேன். அப்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்தவர் என் விண்ணப்பத்தை முகத்தில் விட்டெறிந்தார். மிகவும் சிரமப்பட்டு பாஸ்போர்ட் பெற்றேன். லண்டன் சென்றவுடன், மனோதத்துவ படிப்பில் முதுகலை பயின்றேன். அந்த சமயம் நான் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டதன் தலைப்பு ‘இன்ட்ராக்டபில் எப்லாப்ஸி’. அப்படி என்றால் ஒரு நாளில் 10 முதல் 15 முறை வலிப்பு வருபவர்கள் இருக்கிறார்கள். வலிப்பிலேயே பல வகையுண்டு. அதைப் பற்றியதுதான் என் ஆய்வு.

லண்டனில் உள்ள “London School of Hygiene and Tropical medicine”  என்ற அமைப்பில் படிக்க விரும்பினேன். அது ஒரு சர்வதேச மனவளக்கலைப் பயிற்சி. அங்கு இந்திய ஆசிரியர் ஒருவரின் கீழ் படித்தேன். லண்டனின் சிறப்பம்சமே ஊனமுற்றவர்களை சக மனிதரைப்போல் சரிசமமாக பார்ப்பதுதான். அந்த அமைப்பின் மூலமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். சிக்காகோவிலிருந்து ஒகாயோ என்ற இடத்திற்குப் பயணம் மேற்கொண்டேன். முதலில் சென்றடைந்த இடம் சிக்காகோ. ஒகாயோ செல்லும் விமானம் 12 மணி நேரம் தாமதமாக வரும் என்று அறிவித்தார்கள். சிகாகோ விமான நிலையத்தில் எனக்காக ஒரு சிறப்பு கிரேன் கொண்டு வந்து எனக்கு உதவி புரிந்தார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊனமுற்றவர்களுக்கு தனி மரியாதையுண்டு. உணவகங்களில் கண் தெரியாதவர்களுக்கு பிரைல் முறையில் உணவுப் பட்டியல் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் ஊனமுற்றவருக்கென்று 70 பக்கங்களில் சட்டம் இருப்பது எனக்கு வியப்பைத் தந்தது.  அங்கு இயலாமை என்பதே இல்லை.

உங்களுக்கு, சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தாக்கம் எப்படி வந்தது?

அமெரிக்காவில் சிதம்பரநாதனைச் சந்தித்தேன். உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர். உடல் ஊனமுற்றவாகள் அமைப்பு எல்லாமே சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்க்கு மட்டும்தான் பயன் படுகிறது. உண்மையான சமூகம் கிராமப் புறங்களில்தான் இருக்கிறது. அங்குதான் என்னைப் போன்றவர்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்கையில் V.H.S மருத்துவமனை பணி என்னை இயலாதவனாக மாற்றுவதுபோல் தெரிந்தது. பிறகு அந்த வேலையை துறந்து தனியாக இயங்க ஆரம்பித்தேன். என் அனைத்து தடைகளிலும் எனக்குள் தன்னம்பிக்கையூட்டியது “உன்னால் முடியும் தம்பி” என்ற பாடலும், சூரியன் சுட்டெரிக்கிறபோதும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிற பீனிக்ஸ் பறவையும்தான்.

பொதுவாக ஒரு இயலாத மனிதனுக்கு சோதனையைத் தாண்டிவர என்ன தேவைப் படுகிறது?

வழிகாட்டுதல்தான் தேவை. ஒரு சிலர் ஊனமுற்றவர்களைப் பார்த்து, “நீ போன பிறவியில் என்ன பாவம் செய்தியோ” என்பார்கள். சிலர் சனிப்பெயர்ச்சியா, 10 ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது தானம் செய் என்பார்கள். இயலாமை என்பது ஒரு இயலாமையே அல்ல, இதுபோன்ற சிந்தனைகள்தான் இயலாமை. எனக்கு என் தாய்தான் சிறந்த வழிகாட்டி. எங்களைப் போன்றவர்களின் கனவுகளை எட்டிப்பிடிக்க மனோதத்துவ நிபுணருக்கு இணையான ஒரு நபர் நிச்சயம் குடும்பத்தில் தேவை.

நீங்கள் ஊனமுற்றவர்கள் பற்றிய திரைப் படத்தில் நடித்திருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

மயிலத்தில் இயலாதவர்களின் தினம் கொண்டாடப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தில் நான் பேசும்பொழுது இனிமேல் நம்மை யாராவது ஏளனமாகப் பார்த்தால் “அடங்க மறுப்போம். அத்து மீறுவோம். திருப்பி அடிப்போம்” என்று பேசினேன். அங்கு பங்கேற்ற என் தயாரிப்பாளருக்கு என்னை மிகவும் பிடித்துப் போயிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் உடல் ஊனமுற்றவர்கள் என்றால் ரொம்ப கஷ்டப் படுபவரைப் போலவும் , இயலாத தம்பி, தங்கை இருப்பது போலவும்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை சிந்தித்து, ஏன் இயலாதவர்ள் மகிழ்ச்சியாக இருப்பது போல் படம் எடுக்கக் கூடாது என்று தோன்றியது. இதைக் கேட்ட பலரும் குறும் படம் எடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்கள். அதை உடைத்து எங்களாலும் கமர்சியல் திரைப்படம் எடுக்க முடியும் என்று நிரூபிக்க நினைத்தேன். இந்தப் படத்திற்குப் பெரும் பின்பலம் திரு. மதன் கேப்ரியல் அவர்கள். இத்திரைப்படத்தின் இயக்குனர் பாத்திமா பீவி. அவரும் இயலாதவர் தான். இந்தப் படத்தின் கேமராமேன் துவங்கி ஓட்டுனர் வரை அனைவரும் இயலாதவர்கள் தான். ஆனால் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இந்தப் படத்திற்குப் பாடல் எழுதிய வள்ளி என்ற பெண் பார்வையில்லாதவர். அவர் பிரெயிலில் எழுதிய வரிகள் “நாளை விடியல் நமக்காக” இயலாதவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று சொல்லவைக்க வேண்டும், என்பதுதான் என் எண்ணம். இத்திரைப்படத்திற்கு எங்கள் தயாரிப்பாளர் 80 லட்சம் வரை கொடுத்துள்ளார். எங்கள் நம்பிக்கையின் காரணம் அவருக்கும் எங்களுக்குமான ஒத்தறிதல் தான்.

தனக்கென்ற இடம் மறுக்கப்பட்டு, தன்னுடைய நாற்காலியில் தகர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் எப்படி போர் குணத்தோடு செயல்படுவது?

இயலாதவர்களை Physically Challenged என்றழைக்கக்கூடாது. அப்துல்கலாம், ‘இயலாதவர்கள் நம் நாட்டின் சொத்து’ என்கிறார். சீனா போன்ற நாடுகளில் இயலாதவர்களை உற்பத்தித் துறையில் பயன்படுத்த விளைகிறார்கள். நம் நாட்டில் மட்டும்தான் இயலாதவர்களை தொண்டு செய்யும் கண்ணோட்டத்தில் காண்கிறார்கள். இயலாதவர்களை மொத்தம் நான்கு கண்ணோட்டத்தில் காண்கிறார்கள். முதலில் தொண்டு, இரண்டாவது மருத்துவம், மூன்றாவது சேவை, இறுதியாக மனித உரிமை.  மனித உரிமை என்று சிந்திக்கும் போதுதான் போராளிக்கான குணம் வரும். மனித உரிமையைப் பற்றி பேசுபவர்கள் ஊனமுற்றவர்களின் உரிமையைப் பற்றியும் பேச வேண்டும். உதாரணமாக ஒரு பேருந்தின் நடத்துனர் நான் ஏற உதவி செய்தார். சரியான சில்லரை என்னிடம் இல்லை. 500 ரூபாய்த் தாளாக இருந்தது. அந்த சமயம் என் நண்பனை அழைக்க போன் செய்தேன். இதைப் பார்த்த நடத்துனர் உன்னை பரிதாபப்பட்டு வண்டியில் ஏற்றினால் ‘நீ டிக்கெட் எடுக்காம போன் பேசுறியா’ என்றார். ‘பரிதாபப்பட்டு’ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என அவரிடம் தெரிவித்தேன். ‘பரிதாபம்’ என்கிற வார்த்தையை உடைக்க மனித உரிமை என்கிற அணுகுமுறை தேவை. அதுதான் போராளிக்கான குணம். நாங்கள் எப்பொழுதும் உங்களிடம் கேட்பது, “Dont see us as an object of Charity or passive receivers of society” என்று கூறி தன் பேட்டியை முடித்துக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களை

சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். இயலாதவர்களுக்கு

ஏற்ற வகையில் எடை குறைக்கப்பட்ட தாங்குகோலை

அவர் கண்டு பிடித்திருக்கிறார். அந்த தாங்குகோலை

மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் உடல்

ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதையும்

தெரிவித்தார். இதைப் பெற விருப்பம் உள்ளவர்கள்

தங்கள் அடையாள அட்டையுடன் என்னை தொடர்பு

கொள்ளலாம்.

தொலைபேசி எண் : 044-32927664, 044-32956759.

மின்னஞ்சல் : deepaknathan@gmail.com

7 Responses

 1. v.chandru

  your history is strength of humans life. i appreciate your attitude and confident.

 2. nethaji.a

  Sir,

  I’m nethaji from trichy. Really very nice…………….. i like u. This is example for everybody…..

  Tks.

 3. G.Vinoth Kumar

  Ungaludaiya muyarchiyai Paaratugiren. ungal ammavi ninaithu perumidham padugiren.

 4. Devaki

  Dear Sir,

  I really appreciate for your attitude. I am also having female child aged about 7 years. She is Hemiparalysis. Her right side got paralysed both right hand and right leg she is not able to write + walk properly. Dr. suggested to wear special shoes and they have recommened for physiotheraphy. I continued the physiotheraphy for about 2 years and lost our hope. please suggest some tips.

  Regards
  Devaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *