– ம. திருவள்ளுவர்
இதோ…”புதிய உலகம்”
சென்ற இதழில் “மாற்றத்தின் அவசியம்” பற்றிப் பார்த்தோம். மாற்றமின்றி மனித வாழ்வில் ஏற்றமில்லை. இது சத்தியம். மாற்றத்தை மூன்று விதமாக மனிதர்கள் அணுகி வருகிறார்கள்.
1.வெளியில் மாற்றம் நிகழ்ந்து பிறகு அதனால் பாதிக்கப்பட்ட பின் அவசரமாக தனது நிலையை மாற்றிக்கொள்ளுதல்.
2.வெளியில் நிகழும் மாற்றத்தைக் கண்ட பிறகும், அதை ஏற்றுக்கொள்ள மனமின்றி தோற்றுப் போவது.
3. வரப்போகும் மாற்றத்தை முன்னதாகவே உணர்ந்து தனது நிலையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்து அதை உலகுக்கு அறிமுகம் செய்யும் முன்னோடியாகத் திகழுதல்.
இந்த மூன்று நிலைகளையும், பல மனிதர்களும், பல நிறுவனங்களும் சந்தித்து வெற்றியோ தோல்வியோ கண்டு நமக்கு முன் உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். இந்த மூன்று நிலைகளில் எந்த நிலை மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவும் நிலை என்பதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் அவசியம். மூன்றாம் நிலைதான் சிறந்த நிலை என்பதை நாம் அனைவருமே உணர முடிகிறது என்றாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்வது எப்படி? என்னும் சூத்திரம் நம்மில் பலருக்கு பிடிபடாமல் இருக்கிறது.
வெளியில் மாற்றம் நிகழ வேண்டு மென்றால் அது முதலில் நம்முள் தொடங்க வேண்டும். நமக்குள் என்றால் அது நமது மனதைக் குறிக்கிறது. நமது மனோபாவம் மாறாமல் நம் செயல்பாடுகள் மாறப்போவதில்லை. நம் செயல் பாடுகள் மாறாமல் நாம் காணும் விளைவுகள் மாறப்போவதில்லை. இந்தப் படிநிலைகளில் எந்த ஐயப்பாடும் இருக்காது என நம்புகிறேன்.
“விளைவில்” மாற்றம் காண “செயலில்” மாற்றம் வேண்டும், “செயலில்” மாற்றம் வேண்டுமென்றால் “எண்ணத்தில்” மாற்றம் வேண்டும். “எண்ணத்தில்” மாற்றம் பெற வேண்டுமென்றால் “மனோபாவம்” மாற வேண்டும். மனோபாவம் மாற என்ன செய்ய வேண்டும்? இதுதான் மிக முக்கியமான கேள்வி. விடை காண்போம் – புதிய விடியலைப் பெறுவோம்.
தொழில் நுட்பத்தை மாற்றலாம். இடத்தை மாற்றலாம். நேரத்தை மாற்றலாம், வடிவத்தை மாற்றலாம். இலக்கை மாற்றலாம், திசையை மாற்றலாம், பெயரை மாற்றலாம், ஆனால் மனிதர்களின் மனோபாவம் மாறாமல் எந்த ஒரு சூழலிலும் நீடித்து நிற்கும் மாற்றத்தை உருவாக்க முடியாது. ஒரு குடும்பத்தின் பரம்பரையைப் பாருங்கள்…. ஒரு நிறுவனத்தின் வரலாற்றைப் புரட்டுங்கள்… ஒரு தேசத்தின் சரித்திரத்தை உற்று நோக்குங்கள்… எல்லா இடங்களிலும் ஒரு சில மனிதர்களே மாற்றத்தின் முன்னோடிகளாகத் திகழ்வதை உணர்வீர்கள்.
ஒரு சூழலில் பாரதி எழுதுகிறார்,
“நெஞ்சு பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்”
வள்ளுவரும் சொல்லுகிறார்,
“மக்களே போல்வர் கயவர்” – என்று
எல்லோருமே மாற்றத்தையும் அதன் மூலமாக ஏற்றத்தையும் – விரும்பியிருக்கிறார்கள்..
பாரதிதாசன் எழுதுவார்,
“புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரினை வேரோடு சாய்ப்போம்” – என்று! விரோதமும், குரோதமும் கொண்டு மனிதர்கள் போரிட்டுக் கொள்ளும் அவல நிலையை அகற்றி அன்பும், பண்பும் அறமும், நிறையும் அழகிய உலகை உருவாக்க வேண்டும் – என்று பாரதிதாசனும் விரும்பியிருக்கிறார்.
“அந்தப் புதிய உலகத்தை உருவாக்குவது எப்படி?”
புதிய கல்லெடுத்து, புதிய மண்ணெடுத்து – புதிய உலகைச் செய்துவிட முடியுமா? புதிய கல்லாலும், புதிய மண்ணாலும் – புதிய சாலைகளாலும், புதிய ஆலைகளாலும், புதிய கட்டிடங்களாலும் ஆன உலகத்தையா நாம் புதிய உலகம் எனக் குறிப்பிட முடியும்? புதிய உலகத்தை உருவாக்க புதிய மனிதர்கள் வேண்டும். புதிய மனிதர்களை உருவாக்குவது எப்படி? – அவசியமான, அழகான கேள்வி இது!
மனிதர்கள் எதனால் ஆனவர்கள்? என்று சிந்தித்தால் நமக்குப் பிடிபடுவது ஒன்றே ஒன்று தான். கல்வியாலும், செல்வத்தாலும், வீரத்தாலும் ஆனவனே முழுமனிதன் என்றாலும்கூட இவை அனைத்தையும் ஒருங்கே பெருவதற்கு அவனுக்கு உறுதுணையாக இருப்பது அவனது மனம்தான். எனவே – “மனிதனும் அவனது வாழ்வும்” அவனது மனதால் என்று உணர வேண்டும். புதிய மனிதர்களை உருவாக்க வேண்டுமெனில் – புதிய மனங்களை உருவாக்க வேண்டும். புதிய மனம் உருவாக வேண்டுமெனில், பழைய மனதைக் களைய வேண்டும். கழிவு நீர் நிறைந்த குவளையை அப்படியே கவிழ்த்துவிட்டுப் புதிய நீரை அதில் நிரப்பிவிடுவதைப் போல… மனதைத் தூய்மைப் படுத்திவிட முடியுமா?
மனித மனமென்பது…
சில நம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது.
சில மதிப்பீடுகளின் இருப்பிடமாக இருக்கிறது.
சில உணர்வுகளின் தாயகமாக இருக்கிறது.
சில விருப்பங்களின் கருவறையாக இருக்கிறது.
சில எண்ணங்களின் சந்திப்பாக இருக்கிறது.
எனவே மனமானது இவையனைத்தும் சங்கமிக்கும் மகா சமுத்திரமாக மறைந்திருக்கிறது.
இந்த நம்பிக்கைகளையும், மதிப்பீடு களையும், உணர்வுகளையும், விருப்பங்களையும், எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யத் தயாராக வேண்டும் – உள்நோக்கித் திருப்ப வேண்டும்!
அரசியலை – சட்டங்களை என அனைத்தையும் முழுமையாக புரட்டிப் பார்க்க வேண்டும்… முழுமையையும் – உண்மையையும் பிரதிபலிக்கும்படி அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்… பொருத்தத்தை உணர வேண்டும்! இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
“எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார் வள்ளுவர்.
மெய்ப்பொருளைத் தேட வேண்டும். அதுவே வாழ்வின் நோக்கமுமாகும்!
இன்றைய நிலையில் நாம் பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் “மெய்ப்பொருள் தானா”? அந்த மெய்பொருளைக் காண்பதி லிருக்கும் தடைகள் யாவை? எனச் சிந்தித்தால் – அவை மேற்கண்ட மனப்பதிவுகள்தான் என்பதை உணர முடியும்.
இளம் பருவத்தில் பார்த்த, கேட்ட, சந்தித்த சில பதிவுகளே – நமது நம்பிக்கைகளாக…. மதிப்பீடுகளாக… உணர்வுகளாக… விருப்பங்களாக… எண்ணங்களாக இன்று நம்முன் திரைகளாகி நம் பார்வையை மறைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மெய்ப்பொருளைக் கண்டு தம்மைத்தாமே புதுப்பித்துக் கொண்ட மனிதர்கள் நிறைந்த புதிய உலகைக் காண – ஒரு கோட்பாட்டை இங்கே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
மனம் புதிதாக…..
மனிதன் புதிதாக வேண்டும்…..
மனிதர் வாழும் உலகம் புதிதாக அவன்
“புதிய பார்வை” பார்க்கப் பழக வேண்டும்.
“புதிய வார்த்தை பேச வேண்டும்”.
“புதிய வாழ்வை வாழப் பழக வேண்டும்”.
பழக வேண்டும் என்றால் தொடங்க வேண்டும் – பிறகு தொடர வேண்டும்!
அதென்ன புதிய பார்வை? புதிய வார்த்தை? புதிய வாழ்க்கை?
இதோ சிறு விளக்கம்…..
புதிய பார்வை என்பது…..
முதல் முதலாய்ப் பார்ப்பது – பார்த்தது போல் பாராதது – முழுமையாக பார்க்க முயல்வது – ஆக்கப்பூர்வமாக பார்ப்பது – மறுபரிசீலனை செய்வது – மாற்று வழி காண்பது – முன் முடிவின்றிப் பார்ப்பது – சிக்கல்களினூடே தீர்வுகளைக் காண்பது – வேறு கோணத்தில் பார்ப்பது – வழக்கத்திலிருந்து விடுதலை பெறுவது எனப் பல பரிமாணங்களைக் கொண்டது புதிய பார்வை.
புதிய வார்த்தை என்பது…..
கனிவானது – இனியது – எளியது – சரியானது – பொருத்தமானது – புரிவது – எழுச்சி தருவது – உள்ளம் கவர்வது – ஊக்கம் தருவது – உடன் படுவது – தெளிவு தருவது – மெய்ப்பொருள் உரைப்பது, இதமானது – அழகானது எனப் பல முகங்களைக் கொண்டது புதிய வார்த்தை.
புதிய வாழ்க்கை என்பது…..
உயர் நோக்குடையது – ஒழுங்கானது – இலக்குகளைக் கொண்டு கடப்பது – பலம் பொருந்தியது – எதையும் வல்லமையோடு எதிர் கொள்வது – தன்னாளுமை மிக்கது – தலைமை ஏற்பது – வாழ்வாங்கு வாழ்வது….. வளர்வது… வாழ்விப்பது, மகிழ்வது, கொண்டாடுவது எனப் பல பரிணாமம் கொண்டதே புதிய வாழ்க்கை.
இம்மூன்றும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் முற்றிலும் புதியவனாக மலர்வான். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் புதியவனாக வலம் வருவான். பாரதி விரும்பியதுகூட அதுதான். “இன்று புதிதாய் பிறந்தோம்” என்று எண்ணிக்கொள்ளச் சொன்னார். அதாவது நேற்றை- பழையவற்றை மறந்துவிடச் சொன்னார். அதற்கு வள்ளுவர் ஒரு தெளிவான வழியும் காட்டுகிறார்.
“நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்கிறார்.
நன்றில்லா எதையும் – அன்றே அப்பொழுதே மறந்துவிடப் பழகச் சொல்கிறார்….. தீதினின்றும் விலகச் சொன்னார்….. நடைமுறையில் சற்றே கடினம்தான். மனதை வளர்த்துவிட்ட நம்மால் அதை உடனடியாகக் கழற்றிவிட முடியாது….. அது எளிதுமல்ல.
இருப்பினும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பழக வேண்டும். புதியதை நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்கான ஒரு பண்டிகையையே நம் தமிழ் முன்னோர்கள் காட்டிச் சென்றிருக்கிறார்கள். “போகி” என்னும் பண்டிகை தமிழர் திருநாளுக்கு முன்பு –
“பழையன கழிதலும், புதியன புகுதலும் கால வரையினானே” எனச் சொன்ன நன்னூலின் படி பழையவற்றை மறந்துவிடப் பழக வேண்டும் அதுவும் ஆண்டுக்கொருமுறை மட்டும் போதாது. ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு முறையும் பழையவற்றை மறக்கப் பழக வேண்டும்! அது எப்போது சாத்தியம் தெரியுமா? நாம் “விழிப்புணர்வோடு” வாழும் – புதிய வாழ்வைத் தொடங்கும் போதுதான்! அந்த விழிப்புணர்வைத் தான் நான் “புதிய பார்வை” என்று குறிப்பிடுகிறேன்.
புதிதாய் பார்க்கும் பார்வைகள் வாய்த்து விட்டால் நம்முள் “புதிய வார்த்தைகள்” வெகு இயல்பாக வெளிப்படத் தொடங்கும். புதிய வார்த்தைகளைப் பேசத் தொடங்கியவுடன் புதிய செயல்பாடுகள் நடைமுறையில் வந்துவிடும். புதிய செயல்பாடுகளைக் கொண்டதுதானே புதிய வாழ்க்கை?
விழிப்புணர்வோடு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் எல்லோரும் புதிய மனிதர்களாக உலா வருவார்கள். அவர்களால் அலங்கரிக்கப்படும் உலகம் புதிய உலகமாகக் காட்சியளிக்கும். அந்தப் புதிய உலகத்தில் அவலங்கள் குறைந்திருக்கும். அழுகையும், புலம்பலும் அகன்றிருக்கும். ஆளுமை நிறைந்து அதன் விளைவாக நலமும், வளமும் நிலைத்து இருக்கும். அதுதானே நமது சான்றோர்களின் கனவும், சாமான்யர்களின் தேவையுமாகும். அந்தப் “புதிய உலகம்” சாத்தியப்படும்போது – இன்றைய புதிய தலைமுறை பாடிச் சிறகடிக்கும் “புத்தம் புது பூமி வேண்டும் – நித்தம் ஒரு வானம் வேண்டும்” என்னும் கவிப்பேரரசின் கனவுப் பாடல்களும் நனவாகும் நாளும் நேரில் வரும்.
வாருங்கள் தோழர்களே…… புதிய உலகில் புதியவர்களாக உலா வந்து கணந்தோறும் “போகி” கொண்டாடுவோம். தினந்தோறும் ஆனந்தம் பொங்கிட வாழ்ந்திடுவோம்.
வாழ்க்கை என்பது இலட்சியங்களை வளர்த்துக் கொண்டு, வருகின்ற சவால்களை யெல்லாம் எதிர்கொண்டு தன்னாளுமை குறையாமல் படிப்படியாக இலக்குகளைக் கடந்து – பயணித்து இலக்கற்றப் பெருவெளியில் பேராற்றலோடு ஐக்கியமாகும் பேரானந்த நிலையை அடைவது ஆகும். வாழ்க்கை என்னும் “சாதனைச் சதுரங்கத்தில்” சளைக்காமல் விளையாடி வெற்றி பெறுவதற்கான கூறுகளை இதுவரையில் நமது நம்பிக்கையின் வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்ள முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் ஆனந்தம் பொங்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி என்றென்றும் உங்கள் அன்பால் நிறைந்திருக்கிறேன். வணக்கம்.
புதிதாய் பார்க்கும் பார்வைகள் வாய்த்து விட்டால் நம்முள் “புதிய வார்த்தைகள்” வெகு இயல்பாக வெளிப்படத் தொடங்கும். புதிய வார்த்தைகளைப் பேசத் தொடங்கியவுடன் புதிய செயல்பாடுகள் நடைமுறையில் வந்துவிடும்.
Leave a Reply