வாழ்க்கை ஒரு கல்வெட்டாகும்

– க. அமசப்பிரியா

நிறுவனங்கள், தனிநபர்கள், வேலை யிடங்கள் எங்கும் நிறைந்து கிடப்பது ஆலோசனை களும் குறைசுட்டிக் கூறும் உரையாடல்களும் தான்! எவ்வளவு தூரம் அதில் உண்மையிருக்க முடியும்? அல்லது கவனத்துடன் கூறப்        படுகிறவையாக இருக்கும்? ஆலோசனையை யாரிடம் கேட்கிறோம்? யாருக்குச்

சொல்கிறோம் என்பதும் கூட வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கிறது. தனிநபர் ஆளுமையை அடையாளப்படுத்துகிறது.

தன்னுடைய கருத்துகள் புறக்கணிக்கப் படுகிறதாகவோ, நம் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் என்பது பற்றியோ நம் மனம் வீணாய் அடம்பிடிப்பதை நமக்குள் எத்தனையோ பேர் அறிந்திருக்கக்கூடும். நம்முடைய கருத்துகள் தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற சுய எண்ண ஆளுமையாளர்களும் நமக்குள் எத்தனையோ பேர் இருக்கிறோம்!

சிலரின் அறிவுரைகள் காட்டுக்குள் பூத்திருக்கிற பூக்களாய் குறைந்தபட்ச உதவும் தன்மையோடோ, யாருக்கு வாசனை தேவைப் படுகிறதோ அவர்களுக்கு பயன்படாமலோ போகிறது.

தன்னிடமிருக்கிற ஏராளமான அறிவுரைகள் வீணாகப் போய்க் கொண்டிருப்ப தாக ஒருவன் நினைத்தான். வருகிற, போகிற எல்லோர்க்குள்ளும் தன்னை நிரூபிக்க வேண்டுமென தவித்தான். நொடிகளும், நிமிடங்களும் நாட்களும் வருடங்களும் இடை விடாமல் தொந்திரவித்தன.

ஒரு கட்டத்தில் அது சமூகப் புலம்பலாக கிளர்ந்தெழுந்து, முறுக்கேற்றி, அவனையே அது உடைந்த துண்டுகளாக மாற்றிக்கொண்டிருந்தது.

முற்றும் இழந்துவிடும் பெரும் அபாயமொன்று அவனைச் சூழ்ந்திருப்பதாக எண்ணி அவனை ஞானியிடம் அழைத்து வந்திருந்தனர்.

அவனோடு பேசியதில், அவனிடமிருக்கிற அளப்பரிய ஆற்றல் வீணாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

“சிறிது காலம் ஓய்வெடு…. இங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிரு….. முடிந்தவரை வேலை செய்……….” இதுதான் ஞானி அவனிடம் அருளிய முதல் பாடம்!

மிகச் சௌகர்யமாய் உணர்ந்தான். யாரும் எதுவும் கட்டளையிடாத விரும்பிய வாழ்க்கை. வேளா வேளைக்கு இயற்கையாய் உணவு.

அவனை முதலில் உறுத்தியது சமையல்காரரின் அசிரத்தை. சில வேலைகளை திட்டமிட்டுச் செய்யாததால் ஏற்படுகிற கால தாமதம்!

பரிமாறுகிறவன் தண்ணீரை எடுத்து வந்து வைப்பதில்கூட தெளிவற்றவனாக இருந்தான். காய் கறிகளை அவன் போக்கு போல நறுக்கியிருந்தான்.

“நண்பரே… காய்கறி நறுக்குவதைக்கூட ஒரு கலையாகச் செய்யலாம் தெரியுமா….? நீங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும்……..”.

அறிவுரையைத் துவங்கினான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது….. எல்லோரும் சத்தான காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். இவை காட்டிற்குள் நானே தேடிக் கண்டுபிடித்து பறித்து வந்தவை. இதுதான் எனக்குத் தெரியும்…..”

“பரிமாறுகிறபோது இப்படி குவியலாகக் குவித்தால் சாப்பிடும் ஆசையே போய் விடுமே… கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறக்கூடாதா….”

“ம்… எல்லோருக்கும் வயிறும் நிறைய வேண்டும்….”

வேறு எதுவும் சொல்லவில்லை.

யாரும் குறைகளை ஏற்றுக்கொள்ள வில்லையே என்கிற எரிச்சலும் அதிருப்தியும் அவன் முகத்தில் படர்ந்திருந்தது.

அன்று இரவு அவரவர் பணிகளைப் பற்றிய ஆய்வாகவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுமான நாள்!

அதற்கே காத்திருந்தாற் போல தன் கோபத்தைக் காட்டத் தொடங்கினான் புதியவன்.

“என்ன ஆட்கள் இவர்கள்…? எந்த வேலையையும் உருப்படியாகச் செய்யத் தெரியாதவர்கள்… இவர்களைக் கொண்டு என்ன சாதிக்க இயலும்…..? அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிற மனப்பக்குவமற்றவர்களாக இருக்கிறார்களே……”

பேசுவதை புன்னகையுடன் எதிர் கொண்டார் ஞானி. “உன்னுடைய கருத்துகளை நீ சொல்லிவிட்டாய்…. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள்… இதில் நான் சொல்ல எதுவும் இல்லை………. வார்த்தையைச் செயலாக்கு… வாழ்க்கை தெளிவாகும்.

“புரியவில்லை…. குருவே….”

“இவர்கள் யாரும் இங்கு வேலைக்காரர்கள் அல்ல… உன்னைப் போல அறிந்துகொள்ள வந்தவர்கள்… துவக்கத்தில் எதுவுமே தெரியாத வர்கள்… இப்போது நன்றாகத் தேறிவிட்டார்கள். இனியும் தேறுவார்கள்…”

“புரிந்தது…”

பிறர் மீதான குற்றச்சாட்டுகளில் நம்மை நிலைத்துக் கொள்ள நினைப்பதைவிட காரிய மாற்றுவதில் கவனமாயிருப்பின் வாழ்க்கையே ஒரு கல்வெட்டாகும்!

2 Responses

  1. sujatha

    Hello,
    The article is very nice.. give more articles..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *