நிர்வாகி

நம்பிக்கை யூனிவர்சிட்டி

எம்.பி.ஏ.பாடம் சுவாரஸ்யமான கதை வடிவில்

– கிருஷ்ணன் நம்பி

சதாசிவத்தின் முன்னால் மேனேஜர் இருண்ட முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

சதாசிவம் எதுவும் பேசாமல் தாடையை தடவியபடியே யோசித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு, ‘எவ்வளவு நஷ்டம்?’ என்றார். மேனேஜர் வார்த்தை வராமல் எச்சில் விழுங்கினார்.

நிச்சயம் எழுந்திருக்க முடியாத அடி. குதிரை விழுந்தால் எழுந்து கொள்ளும். ஆனால் யானை ? சதாசிவத்திற்கு, தான் குதிரையா? யானையா? என்று தெரியவில்லை. ஆனால், எழுந்தாலும் அடி பலமாக இருக்கும் என்று மட்டும் தோன்றியது.

டேபிளில் இருந்த, ‘எதைக் கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு’ என்ற கீதையின் வரிகள் இன்று புதிய அர்த்தங்களை சொல்வதாக அவருக்கு பட்டது.

உண்மைதான். 25 வருடங்களுக்கு முன்னால் சதாசிவம் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். 300 ரூபாய் மாத சம்பளம். ஆனால், 3000 ரூபாய்க்கு வேலை பார்ப்பார்.

ஒரு நாள், அவரை முதலாளி அழைத்து, ‘என்னால் தொடர்ந்து பேக்கரியை நடத்த முடியவில்லை. உனக்கு விருப்பம் இருந்தால் நீ எடுத்துக்கொள்’ என்று சொன்னபோது சதாசிவத்திற்கு பேச்சே வரவில்லை.

உழைப்பை தவிர வேறெதுவும் தெரியாத சதாசிவத்திற்கு, அன்று தைரியமூட்ட நண்பர்களோ, முதலீட்டிற்கு ஒரு சிறு தொகையோ கூட இல்லை.

சதாசிவம் தயங்கியபோது முதலாளியே உற்சாகப்படுத்தினார். ‘நீ பேக்கரியை நடத்தி, லாபம் பார்த்து, காசு கொடு. போதும்’ என்று நம்பிக்கை தந்தார்.

சதாசிவம் பேக்கரிக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டபோது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அதை பேக்கரி என்று கூட சொல்ல முடியாது. அது பழைய ஒட்டு வீடு. ஹாலில்தான் புரடக்ஷன் நடக்கும். திண்ணையில் இருந்த அலமாரிதான் ஷோகேஷ். நாள்முழுக்க திறந்து வைத்திருந்தாலும், மாலையில்தான் ஓரளவு விற்பனை நடக்கும்.

ஆஸ்பத்திரி அருகில் இருந்ததால் பன்னும், பிரட்டும்தான் அதிகம் விற்கும். மெடிக்கலில் நிற்பது போல, இவர் கடையின் முன்னாலும் நிற்பார்கள்.

அப்போது சுற்றுவட்டாரத்திலேயே இவர் கடையில் மட்டுமே பிஸ்கட் பிரட் எல்லாம் கிடைக்கும்.

அன்றைய சரக்கு அன்றே விற்கும் நிலை மாறி, கடைதிறந்த 3 மணி நேரத்தில் எல்லாம் சரக்குகளும்  விற்றுத்தீர்ந்தது. ஆர்டர்களும் குவிய ஆரம்பித்தது.

அந்நிலை வந்த பிறகுதான், சதாசிவம் வேலைக்கு ஆட்கள் சேர்க்க ஆரம்பித்தார். அதுவரை அவரும் இரண்டு உதவியாளர்களும் தான். காலை 4 மணிக்கு எழுந்திருப்பார். 11 மணி வரை தயாரிப்புப் பணிகள். மாலை 5 மணி வரை மற்ற கடைகளுக்கு டெலிவரி. அதற்கு பிறகு பேக்கரியில் நின்று வியாபாரம் பார்ப்பார். கணக்கு பார்த்து முடித்து படுக்க இரவு 12 ஆகும்.

பிரட் என்பதே ஆஸ்பத்திரியில் உள்ளவர் களுக்குத்தான், என்ற நிலையை மாற்ற பிரட் வெளி நாட்டில் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். அந்த யோசனை அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.

மளிகைக்கடைகளில் கூட பிரட் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தினார். தொழிலில் வளர்ச்சியை மட்டுமே பார்த்து வளர்ந்தார், சதாசிவம்.

எவ்வளவு லாபம் வந்தாலும் அதை தொழிலில்தான் போடுவார். இடத்தை பெரிது படுத்தினார்.  டெலிவரிக்கு வண்டி வாங்கினார். கடைக்காரர்களின் கருத்தறிய பெரும்பாலும் அவரேதான் டெலிவரிக்கு செல்வார்.

உழைக்க உழைக்க உயர்ந்தார். உயர உயர உழைத்தார்.

எத்தனையோ சேவை அமைப்புகள், தங்கள் அமைப்பில் அவரை உறுப்பினராக அழைத்த போதும் அன்போடு மறுத்து தன் பணி தவிர எதிலும் ஈடுபடாத உழைப்பாளியாய் இருந்தார்.

எங்கெங்கிருந்தோ தேடி வர ஆரம்பித் தார்கள். தேடி வருபவர்களுக்கு மட்டும்தான் தனது தயாரிப்புகளை விற்பது என்று முடிவெடுத்தார். வேலை கூட தேடிவருபவர்களுக்கு மட்டும்தான். உறவினர்கள், நண்பர்கள் என பரிந்துரைக்கும் நபரைப்பொறுத்து பதவியின் தன்மை அமையும்.

யார் வந்தாலும் சதாசிவத்திடம் விசுவாச மாகத்தான் வேலை பார்ப்பார்கள்.

அவருடைய அக்காவின் மகன் சதீஷ்தான் நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருந்தான். மாமாவை போலவே , மிகச் சிறந்த உழைப்பாளி.

போன மாதமே சதீஷ் சொன்னான், ‘புதிதாக ஏதோ பிரட் கம்பெனி வந்திருக்கிறது. நம்ம பிரட் விற்கிற எல்லாக்கடைக்காரர்களும் அதையும் வாங்கி வைத்திருக்கிறார்கள்’  என்று. சதாசிவம் சிரித்துக்கொண்டே, ‘நம்ம கஸ்டமர்கிட்ட, நாமளே அந்த பிரட்டை கொண்டு போய் கொடுத்தால் கூட , யாரும் வாங்க மாட்டாங்க.. மக்கள் ஒரு டேஸ்டுக்கு அடிமையாகிட்டாங் கன்னா அவ்வளவு சுலபத்தில் மாறமாட்டாங்க..’ என்றார்

அப்புறம் டிவியில்கூட விளம்பரம் பார்த்தாக, யாரோ வந்து சொன்னார்கள். நாமும் விளம்பரம் செய்வோம் என்று வற்புறுத்தினார்கள்.

‘விளம்பரத்தால வித்துடாம்ல நினைக்கி றாங்க… தரம் சுவை இது ரெண்டுனாலதான் நம்ம கம்பெனி பிரட் இன்று வரை நல்ல வித்திட்டிருக்கு. விளம்பரத்தால இல்லை’ என்று சொல்லி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்தார்.

சதாசிவம் உறுதியோடு இருந்தார். மக்கள் தனது பேக்கரி தயாரிப்புகளுக்கு கொடுத்திருக்கும் இடம் 20 வருடம் உழைத்து பெற்ற இடம். அந்த இடத்தை இன்னொரு நிறுவனம் அவ்வளவு சீக்கிரத்தில் கைப்பற்றி விட முடியாது என்ற நம்பிக்கையோடு இருந்தார்.

அந்த நம்பிக்கைதான் இப்போது பொய்த்து விட்டது. சப்ளை செய்த எல்லாக்கடைகளிலுமே, கடந்த ஒரு மாதத்தில் இவருடைய பிரட் பாக்கெட் பெயரளவில் விற்றிருந்தது. ‘புதிதாக வந்த நிறுவனத்தின் பிரட்டுகள் சக்கை போடு போடுகிறது’ என்று எச்சரிக்கை தொனியில் சொல்லும் போதும் சதாசிவம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு சதாசிவம், “புதுசா ஒன்னு வரும்போது என்னதான் இதில இருக்குன்னு பார்க்க நாலு பேரு வாங்கத்தான் வாங்குவாங்க.. வாங்கி சாப்பிட்டாத்தான் நம்ம பிரட்டடோ மகிமை தெரியும்” என்றார்.

ஆனால் அவர் களின் விற்பனை ஒரே மாதத்தில் இவ்வளவு துôரம் அதிகரிக்கும். புதிய பிரட் மக்கள் மனதில் இவ்வளவு சீக்கிரம் இடம் பிடிக்கும் என்றெல் லாம் சதாசிவம் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

சதீஷ், ‘விற்பனை ஆகாததால், இந்த மாதம் சரியான கலெக்ஷன் இல்லை’ என்றான்.

போன மாதமே கலெக்ஷன் குறைவு தான். அறிமுக ஜோரில் அதிகம் விற்றிருக்கும் என்று சமாதானப் படுத்திக் கொண்டு விட்டார். ஆனால் சிறிய அலட்சியம் பெரிய சிக்கலாகி விட்டது.

சம்பளம் போட வேண்டும், தேதி நெருங்கிவிட்டது. அவர்களுக்கு இணை யாக விளம்பரம் செய்ய வேண்டும். பிரட் அப்படியே தங்கிவிட்டதால் வரவேண்டிய பணம் வரவில்லை. உணவு பொருள் என்பதால் விற்றாக வேண்டிய நேரம் முடிந்து விட்டது. இனி அதை காசாக்க முடியாது.

பணம் பெயர் எல்லாமே இழப்பு. சதாசிவம் இப்படி துவண்டு உட்கார்ந்ததே இல்லை.

‘பேராசிரியர் வந்திருக்கிறார்’ என்று யாரோ வந்து சொன்னார்கள். யாரோடும் பேசுகிற மனநிலை இல்லாததால் அலுப்போடு எழுந்தார் சதாசிவம்.

சதாசிவம் சுரத்தில்லாமல்தான் வரவேற்றார். தனது மனநிலையை விளக்கி உற்சாகமாக வரவேற்க முடியாததிற்கு வருந்தினார்.

சதாசிவம் பேசி முடித்ததும் பேராசிரியர், ‘பிஸினஸ்ல ஏற்ற இறக்கங்கள் சகஜம்தானே. உங்களுக்கு தெரியாதா’ என்றவாறே நடந்த தவறுகள் அனைத்தையும் எடுத்துசொன்னார்.

சதாசிவத்திற்கு இத்தனை நாட்களாக நாம் செய்தது பிஸினஸ்ஸே இல்லை என்று புரிந்தது. ‘இந்த நிலை மாறுமா?’ என்றார் ஆர்வத்தோடு. அதற்குத்தான் உங்களுக்கு எம்.பி.ஏ படிப்பு உதவப்போகிறது என்று பேராசிரியர் உற்சாகமாக விளக்க ஆரம்பித்தார்.

தவறுகள் என்ன? கண்டுபிடித்து சொல்லுங்கள்.

மேலாண்மை கல்லூரிகளில் கேஸ் ஸ்டடிகளின் மீது குரூப் டிஸ்கஷன் நடக்கும். அப்போது ஒவ்வொரு நிறுவனத்தின் சரி தவறுகள் பற்றியும் விரிவாக அலசப்படும். நிர்வாகி நாவலின் வாயிலாக எம்.பி.ஏ படித்து வரும் நீங்களும் இந்த குரூப் டிஸ்கஷனில் கலந்து கொள்ளலாம். நம் கதை நாயகன் சதாசிவம் செய்த தவறுகள் என்ன? உங்கள் அலசலை கடிதத்தின் மூலமாக ஏப்ரல் 20க்குள் நமது நம்பிக்கைக்கு அனுப்பி வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *