– ஐடியா ப்ளஸ் சேர்மன் கிருஷ்ண.வரதராஜன் பதில்கள்
மற்றவர்கள் என்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது என்னை மிகவும் பாதிக்கிறதே ?
ஒவ்வொரு மனிதனுக்கும் விதை பருவம் காய் பருவம் கனி பருவம் என்று மூன்று நிலைகள் உண்டு.
முதல் பருவம் விதை பருவம். ஆரம்ப நிலையில் யாருக்குமே அங்கீகாரம் இருக்காது. ஏனெனில் பூமிக்கடியில் விதை ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாது. அதன் வீரியமும் புரியாது. மேலும் விதைக்கு வெளிச்சம் போட்டால் அது வளரவும் வளராது.
எனவே, விதைப்பருவத்தில் நமக்கு நிறைய அழுத்தங்கள் தேவை. இந்த அழுத்தங்கள்தான் பூமியை துளைத்துக்கொண்டு வெளிவரும் செடியாக நம்மை மாற்றுகிறது. நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என்ற வெறி ஏற்பட்டு உங்களை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
அடுத்து காய் பருவம். இந்நிலையில் நம்மை பலருக்கும் தெரியும். ஆனால் நம் திறமைக்கு முழுமையாக அங்கீகாரம் கிடைக்காது.
அடுத்து கனி பருவம். கனிகளைத்தான் அதாவது பழங்களைத்தான் அனைவரும் வாங்குகிறார்கள். மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கீகாரம் பெற்று ஒருநாள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்போது உங்களை எப்படி நடத்து கிறார்கள் என்று கவனிக்காதீர்கள். அடுத்து எந்த பருவத்திற்கு உயர வேண்டும் என்று மட்டும் கவனியுங்கள்.
திட்டமிடுகிறேன். ஆனால் அதை செயலாக்க முடிவதில்லை. என் சோம்பேறித்தனத்திலிருந்து மீள்வது எப்படி ?
உங்களுக்கு ஒருவர் உதவி செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டார். அதை நம்பி நீங்கள் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். ஆனால் அவர் உதவி தேவைப்படும் சமயத்தில், செய்ய மறுத்து விட்டால், அதை நீங்கள் நம்பிக்கை துரோகம் என்பீர்கள்.
நீங்கள் உங்களுக்கே சில உதவிகள் செய்வதாக வாக்கு கொடுத்தீர்கள். அதாவது முடிவெடுத்தீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களுக்கு நீங்களே நம்பிக்கை துரோகம் செய்து கொண்டீர்கள் என்று அர்த்தம்.
மற்றவர்கள் கூட உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யலாம். உங்களுக்கு நீங்களே நம்பிக்கை துரோகம் செய்யலாமா ?
நான் இந்த 1 வருடத்தில் 16 மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டேன். ஆனாலும் இன்னும் செயல்படும் வேகம் வளரவில்லையே. ஏன்?
உங்கள் வீட்டு ஓவர்டேங்கில் உள்ள தண்ணீரை ஒரு மாதம் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். முதல் ஓரிரு நாட்களில் தூசிகள் படரும். ஒரு வாரம் முடிந்த பின் தண்ணீரில் பாசி பிடிக்கும். அதற்கு அடுத்த வாரம் புழுக்கள் உருவாகும். மூன்றாம் வாரம் நாற்றம் எடுக்கும். ஒரு மாதம் ஆன பிறகு கிட்டேயே நெருங்க முடியாது. இல்லையா ?
இந்நிலையில் அந்த வாட்டர்டேங்கை எப்படி சுத்தம் செய்வீர்கள். முதலில் எல்லா தண்ணீரையும் வெளியேற்றுவீர்கள். பிறகு பாசிகளை எல்லாம் சுரண்டி எடுப்பீர்கள். அதன் பிறகு ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவுவீர்கள். காயவைப்பீர்கள். மறுபடி வெயிலில் காய விடுவீர்கள். அதன் பிறகுதான் அதில் தண்ணீர் நிரப்புவீர்கள். அப்போதுதான் அது பயன் படுத்தும் நிலையில் இருக்கும்.
‘எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, பயன் படுத்தாமல் நம் தலையில் உள்ள ஓவர்ஹெட் டேங்கில் வைத்திருந்தால், நம் நிலைமை என்ன?’ என்று யோசித்திருந்தால் உங்களுக்கு இவ்வளவு பயிற்சி வகுப்புகள் தேவைப்பட்டிருக்காது.
சுயமுன்னேற்ற பயிலரங்கத்தில் கலந்து கொண்டால் உலகையே புரட்டி போட்டுவிடும் அளவிற்கு ஓர் உற்சாகம் ஏற்படுகிறது. அது சில நாட்களோ அல்லது சில வாரங்களோ மட்டும்தான் நீடிக்கிறது. என்ன செய்வது ?
வெள்ளமென பெய்யும் மழையை முறையாக சேமித்து வைக்கவில்லையென்றால் எல்லா நீரும் இருந்த இடம் தெரியாமல் வடிந்து போகும். அணைகட்டி வையுங்கள், உங்கள் உற்சாகத்தை.
பயிற்சி வகுப்பில் கற்றவற்றை தினம் ஒன்றாக நடைமுறைப்படுத்தி அதில் வெற்றிகாணும்போது உற்சாகம் உங்களுக்குள் தொடர்ந்து சேமிக்கப் படுகிறது.
இன்னும் ஓர் உதாரணம் பார்ப்போம்.
செல்போன் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப அதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது தினமுமோ சார்ஜ் செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்து விட்டு, நாள் முழுக்க செல்போனில் பேசி அதை டிஸ்சார்ஜும் செய்துவிட்டு, மறுபடியும் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறதே என்று வருத்தமும் பட்டால் எப்படி?
இது செல்போன் பேட்டரி சார்ஜருக்கு மட்டுமல்ல உங்கள் உற்சாகத்திற்கும் பொருந்தும். தினமும் ‘நமது நம்பிக்கை’யின் ஒரு பக்கத்தை எடுத்துப் படியுங்கள். தினமும் உங்களுக்குள் உற்சாக குளுக்கோஸை ஏற்றுங்கள்.
காத்திருப்பதிலேயே வாழ்க்கை வீணாகிவிடும் போலிருக்கிறது. அப்பாயின்மெண்ட் வாங்க காத்திருக்க வேண்டியிருக்கிறது. பிறகு அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்றாலும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மூச்சை பிடிக்க பேசியபிறகும் சம்மதம் வாங்க காத்திருக்க வேண்டியிருக்கிறது. எப்போது மாறும் என் நிலை?
நீங்கள் யார் என்றே தெரியாத நிலையில் உங்களை அலைய விடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் கமலஹாசன், பாரதிராஜா, சச்சின் டெண்டுல்கர் என வெற்றி பெற்ற எல்லோருமே வாய்ப்புக்காக யார் முன்னாலோ காத்திருந்தவர்களே. எவ்வளவு உயர்வான விஷயத்திற்காக காத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து காத்திருப்பதே சுகமாகிறது. காதலிக்காக காத்திருக்கிற காதலனைப் போல.
James P Camaron
Ennai migavun paathidthirudha, Ennakkul aazha pathinthirundha, Ennuul puthaindhu padarthirudha muththana moondru kaylvigal. Athu mattumalla athargaana villakkangalum nandraga irrundana, yosikka vaithana. Idhu enadhu nambikkai mattum all, ennai pondra ethay ennam konda palaradhu Ullam sollum “NAMADHU NAMBIKKAI”-kaana vilakkangal.
Migaum Nandri,
James P Camaron
***** I wish to type here directly in Tamil, not like this phonotic method, If you know, How to type here in Tamil, guide me through my Email Please……
Kathir
Excellent and inspiring Answers. Thanks
vijayan poongavanam
Super Answers….Thank you very much…