வெற்றி வாசல் 2009

பாலகுமாரன்

வாழ்க்கை எனும்

வாசக சாலை

வெற்றி என்பது

சர்வாதிகாரியாய்

உச்சாணிக் கொம்பில்

இருப்பதல்ல.

வெற்றி என்பது

அமைதியாக

இருப்பதுதான்.

வெற்றியென்பது

அன்பும் கருணையும்தான்.

என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகிராம் அவர்கள் தனக்குள் பார்க்கிற வித்தையை சொல்லித்தர பல்வேறு வித்தைகளை கையாள்பவர். உனக்குள் பார்ப்பதற்கு எது உதவும் என்பதை கண்டு பிடித்து சிலரை கோவிலுக்குப் போகச் சொல்வார். சிலரை இராமநாமம் சொல்லச் சொல்வார். இன்னொரு நண்பரிடம் காலையில் என்ன சாப்பிட்டோம் என்று கேட்பார். தனக்குள்ளே பார்ப்பதற்கு தோசை வடை உதவுகிறது. இராமநாமம் உதவுகிறது. கோவிலுக்குப் போவது உதவுகிறது. ஆக எல்லா விஷயங்களும் தன்னை உள்ளுக்குள்ளே உற்றுப் பார்க்கத்தான். உற்றுப் பார்ப்பதுதான் வாழ்க்கை என்பதை நான் யோகிராமிடம் அறிந்து கொண்டேன். எவன் தன்னை அறிகிறானோ அவனே சுற்றி உள்ளவர்களை அறிகிறான். தன்னையும் சுற்றியுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து வாழ்வதே வாழ்க்கை. “Life is Relationship”.

தொடர்புகளே வாழ்க்கை. தொடர்பு கொள்ளத் தெரியாமல் தொடர்புகளை தவறாக பயன்படுத்துவதால்தான் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது. “வாழ்க்கை என்பது வாசக சாலை”. ஆனால் இதில் நீங்கள் படிக்க வேண்டியது புத்தகங்கள் அல்ல. புராணங் களை அல்ல. தத்துவங்களை அல்ல. நீங்கள் படிக்க வேண்டியது உங்களை. உங்கள் மனதை. யார் நீங்கள்? என்ன லட்சணம் உங்களுடையது. நீங்கள் நல்லவரா கெட்டவரா? உங்களால் நல்லது செய்ய முடிகிறதா? கெட்டது செய்ய முடிகிறதா? உங்களுக்கு உங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று யோசிக்கத்தான் நீங்கள் பழகிக் கொள்ளவேண்டும். நான் என் எழுத்தை உங்களிடம் அனுப்புகிறேன். நான் எவ்விதமாக யோசிக்கிறேனோ, வாழ்கி றேனோ, எதைக் கற்றுக் கொள்கிறேனோ அதையே உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன். உங்களிடம் ஒரு பேச்சு, எனக்குள் ஒரு வாழ்க்கை என்று நானில்லை. கோபமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை அவ்வாறே வெளிப்படுத்திவிடுகிறேன். இரண்டு விதமாக இல்லாமல் ஒரே விதமாக இருக்கும்போது வாழ்க்கை சுகமாக இருக்கிறது.

தந்திரமாக இருப்பது ஒரு நோய். இந்த தந்திரம் எதற்காக வருகிறது. அதிகமான அளவில் உங்களுக்கு வேண்டியதை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் வருகிறது. ஆசை உங்களை தந்திரசாலியாக மாற்றுகின்றது. அப்பொழுது பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. புறங்கூற வேண்டி இருக்கிறது. வாழ்க்கை சிக்கலாகிறது. மனைவியிடமிருந்து, தாயிடமிருந்து, கணவனிடமிருந்து, குழந்தை யிடமிருந்து, இந்த புறம்சொல்லல் ஆரம்ப மாகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் எல்லோரிடமும் பொய் சொல்லும் நிர்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்கு “எனக்கு என்ன தேவையோ, அது கிடைத்தால் போதும்” என்ற மனோபாவம்தான் முக்கியம்.

வெற்றி என்பது சர்வாதி காரியாய் உச்சாணிக் கொம்பில் இருப்பதல்ல. வெற்றி என்பது அமைதி யாக இருப்பதுதான். வெற்றியென்பது அன்பும் கருணையும்தான். நீங்கள் கருணையோடு இருந்தால் மற்றவர் களையும் கருணையோடு மாற்றிவிட முடியும். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. நம்மை கூப்பிட்டு அடிப்பான். தந்திரமாக இல்லாவிட்டால் பைபிளில் உள்ள, “ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு”. இதற்கு அர்த்தம் கோழைத்தனமல்ல, அடிப்பவன் கண்களை உற்றுப் பார்த்தால் அவனால் அடிக்க முடியாது. எப்பொழுதுமே மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனம் என்பது மூச்சோடு தொடர் புடையது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படி மூச்சு இருக்கிறது. எனவே மனதை சரி செய்து கொள்வது நல்லது. மனதை சரி செய்வது என்பது உங்களை உற்றுப்பார்த்தல்தான். மனதை உற்றுப் பார்த்து மூச்சை சீர் செய்தால் மூச்சு சீராகும். மூச்சு சீராகும் பொழுது மனம் சீராகும். மனமும் மூச்சும் சேர்ந்து இருக்கும் பொழுது உங்கள் செயல்கள் சீராகும். இதனால் கோபம் வராது. மிகப்பெரிய தொந்தரவான பொறாமை வராது.

நான் பொறாமைப்பட்டு 20 வருடங்கள் ஆகின்றன. காரணம் என்னிடம் இல்லாத எதுவும் உங்களிடம் இல்லை. எனக்குள் சகலமும் இருப்பதாக உணர்ந்து அனுபவித்து வாழ்கிறேன். எப்பொழுது பொறாமை இல்லையோ அப்பொழுது ஆத்திரமும் கோபமும் அழிந்து போகிறது.

தார்மிக நிலையில் வரக்கூடிய கோபங்கள் எல்லாம் கோபம் அல்ல, காதல். நம்மை யாராவது சைக்கிளில் இடித்து விட்டால், அட சண்டாளா என்றொரு கோபம் வரும். அது கோபம் அல்ல, காதல். ஊழல் செய்கிற அதிகாரியைப் பார்த்தால், இந்தப் பணத்தை வாங்கி என்ன செய்யப் போகிறான் என்ற எண்ணம் வரும். ஊழல் செய்தவன் மாட்டிக் கொள்ளும்பொழுது அவன் மனைவியே அவனை ஏளனமாக பார்ப்பாள். கட்டிய மனைவியிடமே அவமானப்பட்டு நிற்கும் அற்பமான வாழ்க்கை உங்களுக்கு இந்த லஞ்சத்தால் கிடைக்கும்.

நான் என் சிறு வயதில் ஏகப்பட்ட அபத்தங்களை செய்தி ருக்கிறேன். இன்று பால குமாரனாக உங்கள் முன் நிற்பது எவ்வாறு. என் சிறு வயதில் என் வீட்டு எதிரில் இருந்தார் வரதராஜன். மஞ்சுளா என்ற பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதி அதை என்னிடம் கொடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார். ஒவ்வொருமுறை கொடுக்கும் போதும் 2 அணா கொடுப்பார். ஒருமுறை அந்த கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கிறது என்று பிரித்து பார்த்தபோது மிக அற்புதமான தமிழில் மிக அற்புதமான காதல் கடிதம். அந்தக் காதல் கடிதம் என்னை எழுத்தாளனாக மாற்றியது. என்னுடைய சிறு பிள்ளைத்தனம் அனைத்தும் ஒரு நாள் காணாமல் போயின. ஒரு கொலைக் குற்றத்திற்காக 136 பேரை காவல்துறை கைது செய்தது. அதில் நானும் ஒருவன். அடி பின்னி எடுத்தார்கள். வலி தாங்கமுடியாமல் கதறினேன். அப்பொழுதுதான் தெரிந்தது என்னால் அடி தாங்க முடியாது. என்னுடைய முகம் அழுகின்ற முகம். என் வலிமை உடல் ரீதியாக சண்டையிடுவது அல்ல. என்னுடைய இடம் மூளை. யோசிப்புதான் என்னுடைய திறன். அன்று நான் வாங்கிய அடி வன்முறை தவறு என்பதை கற்றுக்கொடுத்தது. பிறரை துன்புறுத்தக்கூடாது என்ற எண்ணம் வந்த போதே மனம் 50 சதவீதம் சரியாகியிருந்தது. என்னை நான் உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். என் மனதை பக்குவப்படுத்திக்கொண்டேன். அந்த பக்குவத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்துக்கள்.

என்னை பார்க்கும் சிலர் இதை சொல்வதுண்டு, நான் செத்துப் போக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் நாவலை படித்தபிறகு என் மனதை மாற்றிக் கொண்டேன். இதைக் கேட்கும்போது என் மனம் எனக்கு தந்த பரிசு இதுதான். என்னை பக்குவப் படுத்தியதைத்தான் நாவலாக்கி உங்களுக்கு அனுப்புகிறேன். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். ஏனெனில் என்னில் இருந்து வெளிப் பட்டது சத்தியம்.

என் நண்பர்கள் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் அடி மனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற சந்தேகம் உண்டு. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால் அடிமனதில் கடவுள் இல்லையோ என்ற எண்ணம் உண்டு. இந்த சந்தேகத்தை என் குருவிடம் கேட்டேன். அதற்கு அவர் “Oh Balakumar. Ask this beggar? Is it possible for this beggar? this beggar will try” என்று சொல்லி என்னைத் தழுவிக் கொண்டார். அங்கே என் மனம் காணாமல் போனது.

நான் என்பது நீ. நீ என்பது நான். நம்முள் எந்தப் பிரிவும் இல்லை. எதுவும் வித்தியாசம் இல்லை. உடலால் பிளவு பட்டிருக்கிறோம். அதில் பொறாமை எங்கிருந்து வந்தது. போட்டி மனப்பான்மை ஏற்படுவது எங்ஙனம்? பிறப்பதும் இறப்பதும் உடலுக்கு மட்டுமே உண்டானவை. என் புலன்களும் என் புலன்களை பற்றிய தகவலை சேமித்து வைத்திருக்கும் மூளையும் மூளையில் இருந்து கிளம்பும் மனமும் நிரந்தரம் அல்ல. இந்த எண்ணம் மனதில் ஏற்பட்டுவிட்டால் வாழ்க்கை வேறு விதமாக போகும்.

இதற்குப் பிறகு வாழ்க்கை மாறியது எண்ணம் மாறியது. மனம் அற்று வெறுமையில் கிடக்க முடிந்தது. நான் என்கிற எண்ணம் இல்லாமல் காணாமல் போதல். இந்த உணர்வு களின் வெளிப்பாடே எழுத்தாக வருகிறது. வாழ்க்கை என்பது வாசக சாலை. அதில் படிக்க வேண்டிய புத்தகம் நீங்களே. வேறு ஏதும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *