– தூரிகா
தனக்கென ஒரு அட்டவணையை தயார் செய்திருக்கிறாள் நாகசாந்தி. பள்ளி முடிந்தவுடன் கராத்தே, ஹிந்தி, கணிப்பொறி வகுப்புகள் முடித்து இரவு 1 மணி வரையிலும் கணிப்பொறியில் தகவல் சேகரிக்கும் தேனீயாக இயங்குகிறாள்
1330 குறள்களையும் மிகச் சுலபமாக சொல்லிவிட்டு. அடுத்து தனக்கு நன்கு தெரிந்த அபிராமி அந்தாதி, மஹிஷாசுரமர்த்தினி, திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நூல்களின் அனைத்து பாடல்களையும் அடி பிறழாமல் வார்த்தை மாறாமல் சொல்லி நம்மை அசர வைக்கிறாள். பொள்ளாச்சி ஆரோக்கியமாதா பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி நாகசாந்தி. எட்டாம் வகுப்பு கடப்பதற்குள், நாகசாந்தி எட்டிப் பிடித்திருக்கும் உயரம் மிகவும் ஆச்சரியமானது. இன்னும் கோவையின் எல்லையையே சரியாக சுற்றிப் பாத்திராத குட்டிப் பெண் நாகசாந்தி. உலக நாடுகளின் தலைநகர், மக்கள் தொகை, மொழி, அரசியல் என அனைத்து செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
என்னவொரு அபாரமான திறமை என்று நாம் வியந்து பாராட்ட முற்பட்டால் திடீரென்று கனத்த குரலில் வீரசிவாஜியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி தனக்கு மோனோ ஆக்டிங் தெரியும் என்று குறும்பாகச் சிரிக்கிறாள். இன்னும் உனக்கு வேறு என்னென்ன தெரியும் என்ற கேள்வியை மிக சிறியதாக முடித்துக் கொண்டோம்!
அதற்கு நாகசாந்தியின் பதில் நம் கண்களை மேலும் விரிவடையச் செய்தது. ஒன்பது கோள்கள், சூரிய சந்திர தூர இடைவெளி கணக்குகள், பூகோளத்தின் அத்தனை சாரங்களையும் சரளமாக சொல்லும் திறமை பெற்றவர். பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டியில் பெரும்பாலும் வெற்றி பெறுவோர் பட்டியலில் இடம் பெறும் பெயர் நாகசாந்தி. பெரியோர்கள்கூட மனனம் செய்ய கடினமாக இருக்கிறது என்று நினைக்கிற பாடல்களை ஐந்தே நிமிடங்களில் மனனம் செய்து அந்த பாடலுக்கேயுரிய முகபாவத்தோடு சொல்லிக் காட்டும்போது ஒரு சின்னக் குழந்தையிடம் எப்படி இந்த சாதனை சாத்தியம் என்று நாகசாந்தியின் தாய் ராதாமணியிடம் கேட்டோம்.
தனக்கென ஒரு அட்டவணையை தயார் செய்திருக்கிறாள் நாகசாந்தி. பள்ளி முடிந்தவுடன் கராத்தே, ஹிந்தி, கணிப்பொறி வகுப்புகள் முடித்து இரவு 1 மணி வரையிலும் கணிப்பொறியில் தகவல் சேகரிக்கும் தேனீயாக இயங்குகிறாள் என்றார் அவர்.
உன் வருங்கால கனவு என்ன என்று கேட்டபோது,வருங்கால இந்தியாவின் முதுகெலும்பு குழந்தைகள்தான் என்று தீர்க்கமாக நாம் நம்பும் அளவு நாகசாந்தியின் பதில் இருந்தது.
அவளுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று விருப்பமாம். இது பல குழந்தைகளுக்கும் இருக்கும் கனவுதான். ஆனால் நாகசாந்தி கனவுகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. எட்டாம் வகுப்பு மாணவியாக பள்ளியில் அமர்ந்து பாடம் கேட்க வேண்டிய குட்டிப் பெண் வருங்கால ஆட்சியர்களை உருவாக்கும் மிகப் புகழ்பெற்ற ஐஅந பயிற்சி வகுப்புகளுக்கு பாடம் நடத்துகிறாள்.
கணிப்பொறியை குடைந்து நூலகங்களை அலசி கலெக்டர் ஆவதற்காக தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் 1 லட்சம் கேள்விகளை தொகுத்து, “உலகம் என் கையில்” என்று அந்த புத்தகத்துக்கு பெயரிட்டு, குழந்தைகளின் நம்பிக்கை நாயகர் அப்துல் கலாம் கையில் அந்த புத்தகத்தை வெளியிட காத்துக் கொண்டிருக் கிறாள்.
பாடப் புத்தகமும் செப்பு பொம்மைகளும் சுமக்க வேண்டிய பிஞ்சு கையில், “உலகம் என் கையில்” என்ற நூல் ஆசிரியர் பொறுப்பை சுமந்து பல வெற்றிக் கனவுகளுடன் காத்திருக்கும் நாக சாந்தி, வயதால் சின்னவர் என்றாலும் உயர்ந்த எண்ணங்களும், நம்பிக்கைமிகு சிந்தனையும் நமக்கு அவரை பெரியவராகவே காட்டுகிறது.
Leave a Reply